‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பெற்று தரும் - விஜய் சத்யா நம்பிக்கை!
கோலிவுட்டில் வளரும் இளம் நடிகர் விஜய் சத்யா. பார்த்த உடனே பிடித்துப் போகும் உடல்வாகு மற்றும் முக அழகுடன் இருக்கும் விஜய் சத்யா, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக கடந்த சில வருடங்களாக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தார். தனது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கதை மற்றும் இயக்குநருக்காக காத்திருந்த நிலையில், அவருடைய காத்திருப்புக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது. ஆம், சரத்குமார், அர்ஜுன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல கமர்ஷியல் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கண்ணில் பட்ட விஜய் சத்யா, தற்போது அவர் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார்.‘தில் ராஜா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சத்யாவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருக்கிறார். காமெடி வேடத்தில் ‘கே.பி.ஒய்’ பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயராக உள்ள இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக டிரைலர் மற்றும் பாடல்களை திரையிட்டு காட்டிய நாயகன் விஜய் சத்யா, ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்று தரும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
அந்த ‘தில் ராஜா’ குறித்து பேசிய விஜய் சத்யா ‘’இதை இயக்கிய ஏ.வெங்கடேஷ் சார் நிறைய வெற்றியை பார்த்தவர் நான் எதுவுமே இன்னும் பார்க்கவில்லை, அதனால் அப்படியே அவரிடம் சரண்டர் ஆகிவிட்டேன் இனி நடப்பதை எதிர்பார்த்து கடவுள் மேல் பாரத்தை வைத்து காத்திருக்கிறேன்.. தில்ராஜா படம் மூன்று நாளில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கக் கூடிய சம்பவம்தான் . அதாவ்து எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதல், எதிர் முனையில் இருப்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும், அதன் மூலம் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் படமாக மட்டும் இன்றி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் சொல்லியிருக்கிறார். டைட்டிலைச் சொன்னால் கொஞ்சம் அட்ராக்ட் பண்ணும் விதமாக இருக்க வேண்டும் இல்லையா? அதுதான் டைட்டில் இப்படி வைக்க காரணம். வாழ்க்கையில் எல்லாரும் தைரியமானவர்கள்தான், ஆனால் அனைவருக்கும் ஒரு லிமிட்டேஷன் இருப்பதால் அதை வெளியே காண்பிக்க முடியாது. அதையும் மீறி ஒரு விஷயம் வரும்போது எல்லோரும் தில்ராஜா தான். வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது வைரலாகியது அதைப் இப்படத்தின் பாடலில் வைத்தால் ஈர்க்கும் விதமாக இருக்கும் என நினைத்து வைத்ததுதான். ஆனால், படத்தின் பெயருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை சந்திக்க முற்பட்டபோது பார்க்க முடியவில்லை.
ஹீரோயினா ஷெரின் நடித்திருப்பது படத்திற்கு பலம். அவர் ஏற்கனவே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார், அதனால் அவர் படத்தில் இருப்பது பெரிய பிளஸ் தான். ஷெரினுடன் நடித்த நடிகர்கள் பெரிய நடிகர்களாக உயர்ந்திருப்பதால் அவரை நாயகியாக போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை, இயக்குநர் தான் தேர்வு செய்தார். ஆனால், ஷெரினின் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் எனக்கு சந்தோஷம் தான். ‘கே.பி.ஒய்’ பாலா காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது டைமிங் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு பாலாவின் காமெடி காட்சிகள் பிடிக்கும். மேலும் இப்படத்தில் சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதோடு, அதை படமாக்கிய விதத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள், நிச்சயம் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.
டைரக்டர் ஏ.வெங்கடேஷ் சாரின் படங்கள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் முழு திறமையை வெளிப்படுத்தும் அனைத்து அம்சங்களும் அவர் படத்தில் இருக்கும். அப்படி தான் இந்த படத்திலும் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். குடும்பமாக பார்க்க கூடிய கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதில் ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளும் பாராட்டும்படி இருக்கும். இந்த படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பெற்று தரும் என்று நம்புகிறேன்.” என்றார்