பெரியாரை அவமதித்தோமா? வடக்குப்பட்டி ராமசாமி டைரக்டர் விளக்கம்!
கோலிவுட்டில் காமெடி ஆர்டிஸ்டாக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் ஆக்டர் சந்தானம். இவர் அடுத்தடுத்து தன் படங்களில் உடல் கேலி செய்கிறார் என விமர்சனங்கள் இருந்தது. ஆனால், இனிமேல் அப்படியான நகைச்சுவை செய்ய மாட்டேன் என அவர் கூறியிருந்தார். மேலும் அண்மையில் வெளியான அவரது ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘80ஸ் பில்டப்’ போன்ற படங்களில் அம்மாதிரி சர்ச்சை இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதை அடுத்து கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் நடித்திருக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 2 அன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் புரோமோஷனுக்காக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ ?” என்ற வசனத்துக்கு பதிலாக சந்தானம், ” நான் அந்த ராமசாமி இல்ல ” என்று சொல்லும் பதில் பெரியாரை விமர்சிப்பதாக கண்டிக்கப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைரக்டர் கார்த்திக் யோகியும் இணை தயாரிப்பாளர் நட்டியும் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பில் கலந்து கொண்டு பேசினர்.
இதில் கார்த்திக் யோகி பேசும் போது, “நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது . கவுண்டமணியும் செந்திலும் உத்தமராசா படத்தில் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி காமடி பிரபலம். அதனால், அதையே படத்துக்குப் பெயராக வைத்தோம். இதில் சந்தானம் கிராமத்து மனிதராக வருகிறார் . படத்தில் இடம் பெரும் எல்லா நடிகர்களுக்கும் நல்ல கதாபாத்திரம் இருக்கிறது . படத்தில் நிழல்கள் ரவி உட்பட பல கதாபாத்திரங்களுக்கும் நல்ல ட்விஸ்ட் இருக்கிறது.
1970 கால கட்டத்தில் நடக்கும் கதை இது . மெட்ராஸ் ஐ என்ற நோய் சென்னையில் முதன் முதலாகப் பரவிய கால கட்டம் அது . அது அப்போது ஒரு கிராமத்தில் பரவினால் என்ன நடக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட படம் இது . ஒரே ஷெட்யூலில் அறுபத்தைந்து நாட்களில் படத்தை முடித்தோம்..!” என்றார்.
பீப்புள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்க, நட்டியின் இணை தயாரிப்பில் சந்தானம் , மேகா ஆகாஷ், எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் , நிழல்கள் ரவி, நடித்திருக்கிரார்கள்.. இசை ஷான் ரோல்டன். கார்த்திக்கு யோகி இதற்கு முன் இயக்கிய டிக்கிலோனா படமும் சரி இந்தப் படமும் சரி கவுண்டமணி முன்னர் பேசிய வசனங்களை வைத்து தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
“அவரிடம் இத்தலைப்புக்கு அனுமதி வாங்கினீர்களா” என்று கேட்ட போது, “நாங்கள் கவுண்டமணி சாரிடம் இதுகுறித்து பேசினோம் நான் பேசிய வசனங்களுக்கு எல்லாம் உரிமை என்னிடம் இல்லை என்று பெருந்தன்மையாக சொன்னார் டிக்கிலோனா படம் ஓடிட்டியில் வெளியானதால் இந்த படத்துக்கு அவரை அழைத்து காட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம் என்ற கார்த்திக் யோகியிடம், பெரியாரை விமர்சிக்கும் வகையில் இந்தப்பட வசனங்கள் அமைந்து சர்ச்சை கிளம்பி இருப்பது பற்றி கேட்டபோது, “யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, அரசியல் நோக்கமோ இல்லை. பொழுதுபோக்குதான் எங்கள் நோக்கம் .இந்தப் படத்தில் பெரியார் கண்டிப்பாக அவமதிக்கப்படவில்லை. அது படம் பார்க்கும்போது புரியும் . சந்தானம் தான் போட்ட பதிவு பற்றி ஆடியோ வெளியீட்டு விழாவில் பதில் சொல்வார்..! ” என்றார்.
முன்னதாக சர்ச்சை நீடித்ததை அடுத்து சந்தானம் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.