’தில் ராஜா’ விமர்சனம்
முன்னொரு காலம் சில பல ஹிட் படங்கள் கொடுத்த ஏ வெங்கடேஷ் டைரக்ஷனில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “தில்ராஜா”. மனோ நாராயணா ஒளிப்பதிவு செய்ய அம்ரீஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது.
கதை என்னவென்றால் ஆக்டர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி ஷெரீன் மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது,அமைச்சராக இருக்கும் ஏ வெங்கடேஷ் அவர்களின் மகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு, காரில் செல்லும் ஷெரினை கவர நினைத்து கார் சேசிங் செய்து அவர்களை துரத்துகின்றனர். ஒருகட்டத்தில் விஜய் சத்யாவிற்கும் அவர்களுக்கும் சண்டை நடக்க, சண்டையில் அமைச்சரின் மகனை விஜய் சத்யா விபத்தாக கொன்று விடுகிறார்.அதில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்டி மறுபக்கம் போலீஸ் துரத்த, குடும்பத்துடன் வாழ்வா...சாவா...!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்ல முயன்று இருப்பதுதான் ‘தில் ராஜா’.
ஹீரோவாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பக்க போதுமான மெனக்கெடல் செய்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். சண்டைக் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார் நாயகன் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார். மினிஸ்டர் ரோலில் வில்லனாக வரும் டைரக்டர் ஏ.வெங்கடேஷ் வாவ் சொல்ல வைத்து விடுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வேலை இல்லை . போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் சம்யுக்தாவின் காக்கி சட்டை சீருடையையும் தாண்டி அவரை ரசிக்கும் அளவுக்கு கவர்ச்சிக் காட்டி கவர முயன்றிருக்கிறார் . கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் அளவுக்கு அதிகமான மேக்கப் போட்டு எடுப்பாக வலம் வருகிறார்.
ரஜினி ரசிகர்களை வைத்து வரும் சீனகளை தூக்கியிருந்திருக்கலாம். அதனால், கதையில் எந்த மாற்றமும் பிரயோஜனமில்லை. கதைக்கு சம்மந்தம் இல்லாத காட்சிகள் ஏகப்பட்டவை இருந்ததால் போனை நோண்டிக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டியதாகி விட்டது. போதாதற்கு கே பி பாலா சிரிப்பு சீன் என்ற பெயரில் கடுப்பேற்றி விடுகிறார். கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் முகம் காட்டும் வேலையை செய்திருக்கிறார்கள்.
அம்ரீஷின் இசையில் பின்னணி இசை அதிக சத்தம் தான். பாடல்களும் எடுபடவில்லை .
எடுத்து கொண்ட கதையும் , திரைக் கதையும் கொஞ்சமும் கவரவில்லை
மொத்த தில் ராஜ் - டைட்டிலில் மட்டும்
மார்க் 2/5