அதானி கைக்கு போன மும்பையின் அடையாளம் தாராவி - நெருடல்!
ஆசியா மட்டுமின்று சர்வதேச அளவில் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படும் மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை இடித்துவிட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்த அதானி குரூப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வழக்கம் போல் பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது தாராவி. தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயி்ல் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர்.இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனாது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவியில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த பகுதியை மறுசீரமைத்து நவீன நகரமாக்கும் திட்ட பணிகளுக்கான ஏலம் கோரப்பட்டது. அதை அடுத்துஅதானி மற்றும் டிஎல்எஃப் நிறுவனங்கள் ஏலம் கேட்டுள்ளன. இதில் அதானி குழுமம் வென்றுள்ள நிலையில் மோடியின் பின்னணியுடன் இது அலசப்படுகிறது. அதாவது மராட்டியத்தில் உள்ள மும்பையின் தாராவி பகுதி. அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதியான தாராவியில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். முக்கிய வணிக பகுதியான தாராவியில் சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 13 ஆயிரம் சிறு தொழில்களுக்கான இடமாக அது உள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி குடியிருப்புகளை அமைக்க 90-களில் திட்டமிடப்பட்டது. நிதி பற்றாக்குறை மற்றும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. மேலும், நகரின் முக்கிய பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாறினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2018-ம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டது தான் காரணமாகவே அது ரத்து செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதானி நிறுவனத்துக்கு ரூ.5,069 கோடிக்கு தாராவி மேம்பாட்டு திட்ட டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதானி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதற்கு மராட்டிய மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் டெண்டர் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23,000 கோடி மதிப்பிலான இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் 7 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து குடிசை மாற்றுத் திட்டப்பணி என்ற பெயரில் அங்குள்ள சுமார் 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட இருக்கின்றனர். சுமார் 600 ஏக்கர் பரப்பளவில், ஒன்றேகால் லட்சம் வீடுகளில் செறிந்திருக்கும் மக்கள் அங்கிருந்து படிப்படியாக அப்புறப்படுத்தப்பட இருக்கின்றனர்.அங்கு வசிக்கும் மக்களுக்கு என 47 ஏக்கரில் ரயில்வே இடம் ஒதுக்கப்படுகிறது. அதன் பின்னர் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நவீன குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் என மும்பை மாநகரின் சாயலை ஒத்த நவீன வசதிகள் தாராவியில் வர இருக்கின்றன.இதனால் மண்ணின் மைந்தர்களான தாராவி தமிழ் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.
அதே சமயம் தாராவியில் பெரும்பாலான வீடுகள் 10x10 என்ற அளவில் உள்ளதால், கழிவறை வசதி கூட வீட்டுக்குள் கட்ட முடியாத நிலை இருந்தது. இதனால் அதிகமான தமிழர்கள் இப்பகுதியில் தங்களது வீடுகளை விற்பனை செய்துவிட்டு, புறநகர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். தற்போது தாராவியில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து, வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.. ஆனாலும் தாராவியில் எத்தனை குடிசைகள் 2000-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது குறித்து முதலில் அதானி நிறுவனம் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறது. 20,000 கோடி செலவில் தகுதியுள்ள அனைத்து குடிசைவாசிகளுக்கும் 405 சதுர அடியில் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும் மோடியின் கரங்களில் ஒருவர் என்று கருதப்படும் அதானி கைக்கு தாராவி போய் இருப்பது நெருடலாகவே இருக்கிறது