மருத்துவர்களுக்கு உரிமம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ( logo) தன்வந்திரியின் படமா?
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னம் சமீபத்தில் மாற்றப்பட்டது. அதில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரி பகவானின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்குப் பதிலாக 'பாரதம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு வெள்ளையில் இருந்ததாகவும் தற்போது அந்தப் படம் வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதுபோல 'பாரதம்' என்ற சொல் இடம் பெற்றதிலும் தவறு ஒன்றும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'தன்வந்திரி' என்பவர் பற்றி விக்கிப்பீடியாவில் ( தமிழ்) குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை ஒரு கால்புள்ளி, அரைப்புள்ளி கூட மாற்றமின்றி அப்படியே கீழே பதிவிட்டுள்ளேன்.இதன் மூலமாக நமக்குத் தெரியவரும் புராணக்கதை மரபுச் செய்திகளில் முக்கியமானவை வருமாறு:
தன்வந்திரி வானத்தில் வசிப்பவர்🤔🥹
இவர் வானுலக தேவர்களின் வைத்தியர் 🤔🥹
அசுரர்களிடம் போராடிக் களைத்த தேவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. தன்வந்திரி தான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. 🤔🤔
ஆக, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அறிவியல் தரவுகள் சார்ந்த நவீன மருத்துவ முறைகளுக்கும் ஆயுர்வேத வைத்தியரான தன்வந்திரிக்கும் யாதொரு தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.
அது மட்டுமின்றி, நம் நாட்டில் 140 கோடி மக்களின், அனைத்துத் தரப்பு மக்களின் நோய் தீர்க்க வேண்டிய மருத்துவர்களுக்குக் கல்வி புகட்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும்; மருத்துவர்களுக்கு உரிமம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ( logo) தன்வந்திரியின் படத்தை நுழைத்திருப்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை.புராண இதிகாசக் கதைகளின் குறியீடுகளை நவீன யுகத்தின் குறியீடுகளாக முன்னிறுத்துவது நல்லதல்ல.
துரோணர் பெயரில் விளையாட்டுப் பயிற்சியாளர் விருது வழங்குவது போன்றது இது.
தன்வந்திரி அனைவருக்குமான டாக்டர் அல்ல ( He was not an inclusive physician!)🥹🤔😀
தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ் வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக் கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.
அவதாரத் தோற்றம்
தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறை வாழ்நாளைப் பெற்றார்கள்.
மருத்துவம்
தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.
சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர்.
அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பிடுகிறது.
தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.