For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்கள் முழுமையா தாக்கல் செய்யோணும் = தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

07:14 PM Nov 02, 2023 IST | admin
தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்கள் முழுமையா  தாக்கல் செய்யோணும்   தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement

செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு கட்சிகளுக்கு நன்கொடை தந்தவர்கள் யார் என்பதை கூறுமாறு தற்போதைய கட்டத்தில் எஸ்பிஐ வங்கியை கோரமாட்டோம் என்றாலும், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை தேர்தல் ஆணையம் திரட்டாதது குறித்தும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். .

Advertisement

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. கடந்த 2017-18ஆம் ஆண்டு மோடியின் மத்திய பட்ஜெட்டில் இந்த தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதுவும் பட்ஜெட்டில் நிதி மசோதாவாக (தேர்தல் பத்திரம் திட்டம்) தாக்கல் செய்யப்பட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டது. நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, எஸ்பிஐ சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது, 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.

Advertisement

இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்தப் பத்திரங்களை, குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது .போன6 வருஷங்களாக இந்த விசாரணை நீடிக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கினை விசாரிக்க கோரிக்கை வைத்தபோது, தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லை, அதனால் இந்த வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டியது இல்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியிருந்தார்கள். தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதி பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் (அக்.31) விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ’தேர்தல் பத்திரத்தின் திட்டம், அரசியல் கட்சிகளின் உண்மைத்தன்மையை குடிமக்கள் அறியக்கூடிய அடிப்படை உரிமையை மீறுகிறது’ என தெரிவித்தார்.’தேர்தல் பத்திரங்கள் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறது’ என வழக்கறிஞர் கபில் சிபில் குற்றஞ்சாட்டினார். ’தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தின்கீழ் உள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகக் கூற முடியாது’ என அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மிகப் பெரிய அளவில் தேர்தல் நிதி வழங்க விரும்பும் நபர், அதை ஒரே ஆளாக வங்கியில் செலுத்தமாட்டார். எவ்வளவு தூரம் அதனை பிரித்தளிக்க முடியுமோ அந்தளவுக்கு அதனை பிரித்தளிப்பார். இதனால், அந்தப் பெருந்தொகைக்கான உண்மையான உரிமையாளர் யார் என்பது கடைசிவரை தெரியாமல் போகும் அல்லவா?" என்று வினவினார்.

அப்போதுதான் தேர்தல் ஆணையத்திடம்அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள், ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை தடுக்க முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியது
.
இதற்கிடையே, கடந்த 2016-17 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரம் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2016-17 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 16,437 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இவை ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 24 மாநில கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த தொகையில் 9,188 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு 5,272 கோடி ரூபாயும் காங்கிரஸுக்கு 952 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. அதாவது 57 சதவீதம் பாஜவுக்கும் 10 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது. மீதித் தொகை இதர கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இன்றைய விசாரணையின் போது, செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது, அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அத்துடன் கட்சிகளுக்கு நன்கொடை தந்தவர்கள் யார் என்பதை கூறுமாறு தற்போதைய கட்டத்தில் எஸ்பிஐ வங்கியை கோரமாட்டோம். எனினும், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை தேர்தல் ஆணையம் திரட்டாதது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இத்தைகைய தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பற்றிய விவரத்தை திரட்ட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் கட்சிகள் பெற்ற நிதி விவரத்தை திரட்டாதது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். குறிப்பிட்ட சில நன்கொடையாளரின் விவரத்தை மட்டும் ரகசியமாக வைக்க தேர்தல் பத்திரம் திட்டம் வகை செய்வதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை தந்தவர் விவரத்தை அரசு அமைப்புகள் மூலம் ஆளுங்கட்சி கண்டறிய முடியும் என்றும் தேர்தல் பத்திரம் வெளிப்படையானது என்று கூறினாலும் பல தகவல்கள் மறைக்கப்படுவதாகவே நீதிபதி கருத்து கூறி வழக்கை ஒத்தி வைத்தார்

Tags :
Advertisement