டிமாண்டி காலனி 2 - விமர்சனம்!
ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை முதல் பாகம் ஹிட் ஆனால், இரண்டாவது பாகத்தில் அதனை விட அதிகமாக மக்கள் நம்பிக்கையோ , ஆர்வமோ வைத்து இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இல்லாமல் போவதால் பெரும்பாலும் தோல்வி அடைகிறது. இருப்பினும், பல இயக்குனர்கள் கதையின் மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது பாகங்களை இயக்கி வருகிறார்கள். அப்படி தான் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தினுடைய இரண்டாவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் அருள்நிதி ஹீரோவாக நடித்து இருக்கிறார்.அப்படிதான் டிமாண்டி காலனி முதல் பாகம் எளிமையாக இருந்தாலும், ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நிறைந்தவையாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாகமாக வந்திருக்கும் பட காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமலும், காட்சிகள் பயம் இல்லாமலும் பயணிப்பதால் படம் ரசிகர்களிடம் ஒட்டாமல் போய் விடுகிறது.
முதல் பாகத்திலேயே பிரதான கதாபாத்திரங்களான அருள்நிதி உள்ளிட்டவர்கள் இறந்த நிலையில் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்க முடியும் என்ற கேள்வியுடன் இப்படம் உருவாகி இருக்கிறது. அதற்கு புதிய வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் இறந்ததாக கருதப்பட்ட அருள்நிதி மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அவரை டிமான்டி காலனி பேய் பிழைக்க விடாமல் தடுக்கிறது. இதை அடுத்து மீட்பதற்காக வருகிறார் இன்னொரு சகோதரர் அருள்நிதி. அவருக்கு உதவியாக வருகிறார் பிரியா. இருவரும்ம் அருள்நிதியை காப்பாற்ற சக்தி வாய்ந்த புத்தபிட்சுகள் உதவியை நாடுகின்றனர். அவர் டிமான்டி காலனி பேயை விரட்ட யாகம் செய்கிறார். முடிவில் என்னானது என்பதை மூன்றாம் பாகத்தில் பார்க்கலாம் என்று சொல்லி முடித்திருப்பதே டிமான்டி காலனி 2 கதை.
இதில் கமிட் ஆன ஆக்டர்களுக்கு நடிக்க ஒரே வாய்ப்பு பேயை பார்த்து பயப்படுவது மட்டும்தான். பிரியா பவானி கண்களை உருட்டி உருட்டி மிரட்சியாக பார்க்கிறார், , ஆனால் முகத்தில் பயத்தை எப்போது வெளிக் காட்டுவார் என்று ஏங்க வைத்து ஏமாற்றி அனுப்பி விடுகிறார் . ஒப்புக் கொண்ட ரோலில் வர் முழு ஈடுபாடு காட்டவில்லை அப்பட்டமாக தெரிகிறது. அருள்நிதிக்கு கடினமான காட்சிகள். கட்டிலில் படுத்தபடி அந்தரத்தில் மிதக்கிறார், சேர்களை ஏணி போல் அடுக்கி அதிலிருந்து கீழே விழுகிறார் இப்படி சில ஸ்டண்ட் காட்சிகள் அவரை காப்பாற்றுகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஒரு வேடத்தை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக கச்சிதமாக கையாண்டிருக்கிறார். மற்றொரு வேடத்திற்கு இந்த பாகத்தில் பெரிய வேலை இல்லை. ( ஒருவேளை அடுத்த பாகத்தில் இருக்கலாம் )
அருள்நிதியின் சித்தப்பாவாக படம் முழுவதும் பயணிக்கும் முத்துக்குமாரின் நடிப்பில் குறையில்லை. அருண் பாண்டியனுக்கு பெரிய வேடம் என்றாலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறிய வேடத்தில், நிறைவாக நடித்திருக்கிறார்கள். . புத்த பிட்சுகள் போதுமான அளவில் நடித்திருக்கின்றனர்
மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ் -ன் பின்னணி இசை ஓரளவு தான் கைகொடுத்திருக்கிறது. அதே சமயம் டிமான்டி வரும் காட்சியும், அவர் கையில் வைத்திருக்கும் கோல் மூலம் எழுப்பப்படும் இடி சத்தமும் கொஞ்சம் கூட ஒரு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனது சோகம் கேமராமேன் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில்பெரிய சைனீஸ் உணவகம் மற்றும் சிறிய அறையில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மிக நேர்த்தியாக படமாக்கி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமான பாதையில் பயணிக்காமல் சற்று வித்தியாசமான முயற்சி செய்து தனது முதல் படமான ‘டிமான்டி காலனி’-யில் வெற்றி கண்ட டைரக்டர் அஜய் ஞானமுத்து, இந்த முறையும் அதே வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்காக சீன துறவிகள், அவர்களின் பூஜை ஆகியவற்றை தேர்ந்தெடுத்திருப்பதோடு, முதல் பாகத்தின் பாணியிலேயே இந்த இரண்டாவது பாகத்தையும் கையாண்டு ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் எடுபடவில்லை
மார்க் 2.25/5