டெல்லி புதிய முதல்வர் அதிஷி.!கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அதிஷியை முதல்வராக்க முடிவெடுத்துள்ளது.இன்று மதியம் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்தப் பிறகு, அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வ்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையடுத்து டெல்லி அமைச்சர் அதிஷி முதல்வராக பதவியேற்கிறார். இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபான வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால், ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட் விதித்தது.அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில்,இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வர் யார் என்பதை கேஜ்ரிவால் முடிவு செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் திலீப் பாண்டே முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷியின் பெயரை கேஜ்ரிவால் முன்மொழிந்தபோது, அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் எழுந்து நின்று அதை ஏற்றுக்கொண்டதாகவும், அதிஷி சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
43 வயதான அதிஷி இப்போது டெல்லி அரசாங்கத்தில் கல்வி மற்றும் பொதுப்பணித் துறை போன்ற முக்கிய இலாகாக்களை வைத்திருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், ரோட்ஸ் அறிஞருமான அதிஷி, டெல்லியின் பள்ளிகளில் கல்வியை சீரமைப்பதற்கான தனது முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.