காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லி!
டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக 21 அம்ச செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக 4வது நாளாக காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு சராசரியாக 285 ஆக உள்ளது.
குறிப்பாக, 13 இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அசோக் விஹார், துவர்கா செக்டர் 8, பத்பர்கஞ்ச், பஞ்சாபி பாக், ரோஹினி பாவனா, புராரி, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, நரேலா, ஒஹ்லா பேஸ் 2, விவேக் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு 300ஐ தாண்டியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு அதில் கலந்துள்ள முக்கிய மாசுபொருட்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு நிர்ணைக்கப்பட்டுள்ளது.
பூஜ்யம் முதல் 50 – சிறப்பு, 51 முதல் 100 வரை – திருப்திகரமானது, 101 முதல் 200 வரை – மிதமானது, 201 முதல் 300 வரை – மோசமானது, 301 முதல் 400 வரை – மிகவும் மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.