டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது: சுப்ரீம் கோர்ட் உடனே விசாரிக்க கோரிக்கை!
டெல்லி அரசின் 2021 – 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத் துறை அனுப்பிய 8 சம்மன்களை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது அவர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டது.
இப்படியான சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 7 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் சில மணி நேரம் சோதனை நடந்த நிலையில், அமலாக்கத் துறை அவரை கைது செய்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இரவே விசாரிக்க அழுத்தம் கொடுத்த அந்த மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக சாடி வருகிறார்கள்.
அதே சமயம் ம் இருக்க கெஜ்ரிவாலை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு மதுபான கொள்கை விவகாரம் குறித்து காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. மேலும் என்ன தான் கைது செய்யப்பட்டாலும் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் முதல்வர் பதவியில் தொடர்வார் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.