இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தாத ஜிமெயில் கணக்குகள் நீக்கம் - கூகுள் அறிவிப்பு.!
சர்வதேச அளவில் மிக பிரபலமான இ-மெயில் சேவை நிறுவனம் ஜிமெயில் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 2.1 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் வாடிக்கையாளர்களின் மார்க்கெட் பங்குகளில் கூகுள் இமெயில் சேவையானது 23 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. மக்களில் சுமார் 80 சதவீதம் பேருடைய மொபைல் ஃபோன்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உள்ளங்கை போனில் அடங்கி விட்ட இந்தக் காலத்தில் கூகுள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. இப்போது நாம் கூட எந்தவொரு விஷயத்தையும் கூகுளிடமே கேட்கிறோம். கூகுள் இல்லாமல் இணையத்தை யோசிப்பதே கடினம் என்ற சூழலே இருக்கிறது.அதேநேரம் கூகுளில் பலரும் கணக்குகளைத் தொடங்கிவிட்டு, அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் கூகுள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. அதிலும் ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் பல கணக்குகள் செய்யப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, டிசம்பர் 1ம் தேதி முதல் செயலில் இல்லாத கூகுள் கணக்குகள் நீக்கப்படவுள்ளது. இந்த தகவல் கடந்த மே மாதம் முதல் வெளியான நிலையில், தற்போது கூகுள் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், செயலாற்ற கூகுள் கணக்கு என்பது 2 வருட காலத்திற்குள் பயன்படுத்தப்படாத கணக்கு ஆகும். குறைந்தது இரண்டு வருடங்கள் உங்கள் கூகுள் கணக்கு செய்ல்படாமல் இருந்தால், அந்த கணக்கையும் அதன் செயல்பாடுகளையும் நீக்கும் உரிமை கூகுளுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பள்ளிகள், பணி செய்யும் இடம் அல்லது பிற அமைப்பு மூலம் உங்களுக்காக உருவாக்கப்பட்ட எந்த கூகுள் கணக்கையும் இது பாதிக்காது. உங்கள் கூகுள் கணக்கு செயலில் உள்ளதா என்பதைக் கண்டறிய, தங்களின் ஒவ்வொரு பயன்பாட்டையும் தீர ஆய்வு செய்கிறது.எனவே உங்கள் கணக்கு நீக்கப்படமால் இருக்க, கூகுள் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் சர்ச் போன்றவற்றில் அவ்வப்போது லாகின் செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், செயலில் இல்லாத கணக்குகள் நீக்கப்படுவதற்கு முன்னர் பயனர்களுக்கு கூகுளிலிருந்து பல அறிவிப்புகள் அனுப்பப்படும். இதனை பொருட்படுத்தாமல் இருக்கும் பயன்படுத்தப்படாத கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.