30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற முடிவு - மத்திய சமூக நீதி அமைச்சகம் அறிவிப்பு!
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் அல்லது சாலைகளில் பல பிச்சைக்காரர்களை யாசகம் கேட்பதை நாம் பார்த்திருப்போம். இந்த பிச்சைக்காரர்களின் வாழ்வை மேம்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியா என்ற திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 30 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் பிச்சை எடுக்கும் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் விரிவான ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த திட்டம் மத்திய அரசின் சமூகநலம் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தலைமையில், இந்த நகரங்களில் 2026க்குள் பிச்சை எடுக்கும் முக்கிய இடங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதில் மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிகள் ‘வாழ்வாதாரம் மற்றும் நிறுவனங்களுக்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு’ (SMILE) என்ற துணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வடக்கே அயோத்தியிலிருந்து கிழக்கில் கவுகாத்தி வரை, மேற்கில் திரிம்பகேஷ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரை, மத, வரலாற்று அல்லது சுற்றுலா முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த 30 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்காக மத்திய வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரு இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த தளங்கள் பிச்சைக்காரர்களின் நிகழ்நேரத் தரவுகளைப் புதுப்பித்து, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தலையீட்டு உத்திகளை வழங்கும். இந்த திட்டத்திற்கு ஒரு 25 நகரங்கள் ஒப்புதல் அளித்து ஏற்கனவே ஆய்வுகளை தொடங்கி உள்ளன. சில நகரங்கள் மட்டும் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
அதே நேரம் கோழிக்கோடு, விஜயவாடா, மதுரை மற்றும் மைசூர் போன்ற நகரங்கள் ஏற்கனவே தங்கள் ஆய்வுகளை முடித்துவிட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த முன்முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்த போதுமான ஆதாரங்களை உறுதிசெய்து, சமர்ப்பிக்கப்பட்ட செயல்திட்டங்களின் அடிப்படையில் மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நிதி விடுவிக்கப்பட உள்ளது. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், ஒதுக்கப்பட்ட தனிநபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் உதவும்.
மேலும் பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வடக்கே அயோத்தி முதல் கிழக்கே கவுகாத்தி வரை, மேற்கில் திரிம்பகேஷ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரை மொத்தம் 30 நகரங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் பிச்சையில்லாத நகரங்களாக உருவாக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. மேற்கண்ட 30 நகரங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருப்போரை அடையாளம் கண்டு விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படும். மத, வரலாற்று அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்றிய பின்னர், மேலும் பல நகரங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் வரும் பிப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்படும். தேசிய அளவிலான போர்டல் மற்றும் மொபைல் செயலியில் பதிவுகள் ஏற்றப்படும். இத்திட்டத்தின் நோக்கம், பிச்சைக்காரர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை அளித்து அவர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தன.