தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஏமாத்துறாங்க..ஏமாத்துறாங்க-சாம்சங் குரூப் ஏமாத்துறாங்க!

09:11 PM Dec 01, 2024 IST | admin
Advertisement

நான் சாம்சங் எஸ் 22 ultra 12GB 512GB போன் பயன்படுத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் தன்னுடைய சாப்ட்வேரை அப்டேட் பண்ண சொல்லி கேட்டது. அப்டேட் செய்து முடித்ததும் போனின் மேல் பக்கத்தில் வலது புறமாக டியூப்லைட் போன்ற ஒரு ஒளிக்கற்றை தோன்றியது. இது என்ன பிரச்சனை என்று புரியாமல் 'போன் ரிப்பேர் ஆகிவிட்டது, நாம் ஏதோ தவறு செய்து விட்டோம்' என்று அதிர்ந்து பதறிப் போனேன். காரணம் அந்த போன் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் விலை உள்ளது.அடுத்து நண்பர்களிடம் விசாரித்தேன். 'இது சாஃப்ட்வேர் அப்டேட்டால் வந்த பிரச்சனைதான். இதை இலவசமாக சரி செய்து தர வேண்டும். ஆனால் முடிந்தவரை உங்களை ஏய்க்கப் பார்ப்பார்கள்' என்று தெளிவாக சொன்னார்கள்.

Advertisement

Version 1.0.0

திருச்சி தில்லைநகர் ஏழாவது கிளாசில் உள்ள சாம்சங் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு போனேன். அங்கே பணியாளரிடம் கேட்டபோது, "சார் டிஸ்ப்ளே போயிடுச்சு... உங்களுக்கு வாரன்ட்டி பீரியட் முடிஞ்சிருச்சு. மூணு வருஷம் ஆயிடுச்சு. (2022 இல் வாங்கிய போன்) நீங்கள் பணம் கொடுத்து தான் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். 20 ஆயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.'இப்போது அவ்வளவு பணம் இல்லை, மீண்டும் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வந்தேன். உஷாராக அவர்கள் என்னிடம் பேசியதை எல்லாம் ஆடியோவாக கையோடு கொண்டு போயிருந்த இன்னொரு ஃபோனில் பதிவு செய்து கொண்டேன்.அடுத்து மேரிஸ் தியேட்டர் அருகே உள்ள இன்னொரு அங்கீகரிக்கப்பட்ட சாம்சங் சர்வீஸ் சென்டருக்கு போனேன். அங்கும் இதே டயலாக்; அதையும் பதிவு செய்து கொண்டேன்.இதற்குள் போனை வாங்கி கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு தடவித் தடவி பார்த்தார்கள். எங்கேயாவது ஒரு கோடு ஒரு கீறல் இருந்தால் 'எக்ஸ்டர்னல் டேமேஜ் இருக்குது அதனால உங்களுக்கு நாங்கள் செய்து தர முடியாது' என்று சொல்லி இருப்பார்கள். அப்படி எதுவும் இல்லை என்பதால் உங்கள் வாரண்டி பீரியட் முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல் 'ஃபோனுக்குள் தண்ணீர் போயிருந்தால் செய்ய முடியாது' என்றும் கழித்து கட்ட முயற்சி செய்தார்கள். (போனை வாங்கி உள்ளே மறைவாக இருக்கும் அறைக்குள் கொண்டு போய் பிரித்துப் பார்த்துவிட்டு, 'அதில் தண்ணீர் உள்ளே போய் இருக்கிறது' என்று இவர்கள் சொன்னால் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பது என்ன விதமான நியாயமோ தெரியவில்லை) அங்கேயும் நான், 'அடுத்த நாள் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். இங்கேயும் அவர்களுடன் நடத்திய உரையாடலை தெளிவாக ஆடியோ பதிவு செய்து கொண்டு வந்தேன்.

அதன் பிறகு விசாரித்ததில் முழுக்க முழுக்க இது சாம்சங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவில் (R&D) ஏற்பட்ட கோளாறு. சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது இப்படி ஆகிறது என்பதை நண்பர்கள் பலரும் சொன்னார்கள். ஆனால் இதை மறைத்து சர்வீஸ் சென்டர்களுக்கு samsung நிறுவனம் கொடுத்திருக்கும் அறிவுரையின்படி 'போன் டேமேஜ் ஆகி இருக்கிறது, வாரண்டி பீரியட் முடிந்து விட்டது, உள்ளே தண்ணீர் புகுந்து இருக்கிறது' என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு டிஸ்ப்ளே மாற்றிக் கொடுத்தார்கள். அப்படித்தான் பல வாடிக்கையாளர்கள் டிஸ்ப்ளே மாற்றி அந்த போனை பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

Advertisement

போனை விற்கும் போது தண்ணீருக்குள் மூழ்கி எழுந்து வருவது போல வீடியோ போட்டு மக்களை நம்ப வைத்து விற்கிறது சாம்சங் நிறுவனம். அதிலும் இந்த "S" வரிசையில் வரும் போன்கள் பிளாக்சிப் (Flagship) போன், ப்ரீமியம் போன் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அதாவது தன்னுடைய தயாரிப்புகளிலேயே உச்ச கட்ட கவனத்துடன் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படும் போன் இது என்று சொல்லி சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் விலையில் விற்கிறது.மொத்தத்தில் இது வாடிக்கையாளர்களை மொட்டை அடிக்கும் வேலை என்பதை தெரிந்து கொண்டதால் SAMSUNG வெப்சைட்டுக்குள் போய் துழாவி பார்த்தேன். அங்கே இது போன்ற பிரச்சனைகளுக்கு யாரை தொடர்பு கொள்வது என்பது பற்றிய எந்த தெளிவான விவரமும் இல்லை. எல்லாமே மறைமுக வார்த்தைகளால் மறைக்கப்பட்டிருந்தது. இறுதியில் CEO வுக்கு மெயில் போட ஒரு இணைப்பு கிடைத்தது. அதில் என்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கொட்டி மெயில் போட்டேன்.

அடுத்த நாள் சாம்சங் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் பிரிவிலிருந்து பலரும் மாறி மாறிப் பேசினார்கள். முதலில் ஆங்கிலத்தில் பேசியவர்கள் பின்னர் 'ஹிந்தியில் பேச முடியுமா?' என்று கேட்டார்கள். எனக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரியும் என்றாலும் கூட 'நான் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் போனை வாங்கி இருக்கிறேன் எனக்கு தமிழில் பேசுபவர் தான் வேண்டும்' என்று கேட்டேன்.அடுத்து தமிழில் பேசியவர்கள் என்ன பிரச்சனை என்று கேட்டார்கள் ஒட்டுமொத்த வேதனையையும் குமுறி கொட்டி விட்டேன்.'பதட்டப்படாதீர்கள் சார். எங்கள் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போய் கொடுங்கள் நாங்கள் எங்கள் மேலதிகாரிகளுக்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று உங்களுக்கு அதை செய்து தருகிறோம்' என்றார்கள்.

"தெருவில் கத்தரிக்காய் விற்கும் பெண்மணியிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிய கத்தரிக்காயில் இரண்டு சொத்தையாக இருந்தால் அடுத்த நாள் கொண்டு போய் கொடுக்கும் போது அதை எடுத்துக்கொண்டு வேறு இரண்டு கத்தரிக்காய் கொடுக்கிறார். இந்த வணிக நேர்மை கூட உங்களிடம் இல்லை.ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற பெரிய கார் நிறுவனங்கள் தங்கள் காரில் ஏதேனும் உற்பத்திக் கோளாறுகள் வரும்போது அதை வெளிப்படையாக பத்திரிகையில் அறிவித்து, தங்கள் வாடிக்கையாளர்களை திரும்ப வரச் செய்து, அவற்றை சில மணி நேரங்களில் சரி செய்து கொடுக்கிறது. அந்த அறமுள்ள வணிகம் உங்களிடம் இல்லை.ஆண்ட்ராய்டு போன்களிலேயே வாடிக்கையாளர்களால் முதல் தேர்வாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் லாபம் என்ன ?அப்படி இருக்கும் நிலையில் நீங்கள் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றலாமா?சாப்ட்வேர் அப்டேட் செய்த பிறகு வந்த பிரச்சனைக்கு போனில் கோடு அல்லது ஸ்க்ராட்ச் இருந்தால் செய்து தர முடியாது என்று சொல்வதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?முறையாக நீங்களே இந்த பிரச்சனையை மக்களுக்கு பத்திரிகை வாயிலாக சொல்லி அவர்களை உங்களிடம் வரவைத்து மாற்றி கொடுத்து இருக்க வேண்டும். அதுதான் செய்யவில்லை, உங்களிடம் இந்த பிரச்சனையை கொண்டு வந்து செய்து தரும்படி கேட்டவர்களிடமாவது உண்மையைச் சொல்லி அதை இலவசமாக செய்து வந்திருக்க வேண்டும்.ஆனால் எப்படியாவது வாடிக்கையாளரை ஏமாற்றி அவர்களிடம் டிஸ்ப்ளே மாற்றுவதற்கான பணத்தை பிடுங்கும் உங்கள் வணிகம் நியாயமானதா?" என்றெல்லாம் கேட்ட கேள்விகளுக்கு, "உங்க பிரச்சனை எனக்கு புரியுது சார். மேலதிகாரிகளிடம் சொல்கிறேன்" என்பதே என்னிடம் பேசிய கஸ்டமர் கேர் தம்பிகளின் பதிலாக இருந்தது.

பல நாள் போராட்டத்திற்கு பின் கட்டணம் இன்றி டிஸ்ப்ளே மாற்றித் தர ஒத்துக் கொண்டார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு நடுவே 'இத்தனை விலை கொடுத்து வாங்கிய போனில் பேட்டரியும் சரியாக இல்லை அடிக்கடி சார்ஜ் போய்விட்டு போய்விடுகிறது' என்று என்னுடைய சிரமத்தை சொன்னதும் அதையும் இலவசமாக மாற்றி கொடுக்க ஒத்துக் கொண்டார்கள்.கஸ்டமர் கேரில் இருந்து என்னுடன் பேசி அவர்கள் கெஞ்சியது எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.இப்படி நேரடியாக சண்டைக்கு வந்தவர்கள், ஈமெயில் மூலம் போர் தொடுத்தவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மாற்றி கொடுத்த சாம்சங் நிறுவனம், தன்னுடைய நேர்மையான வாடிக்கையாளர்கள், அப்பாவிகளை இளிச்சவாயர்களாக கருதி 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதே டிஸ்பிளையை மாற்றிக் கொடுத்திருக்கிறது.அதன் பின்னர் இந்த பிரச்சனை குறித்து பலரிடமும் பேசியபோது இதே மாதிரியான பிரச்சனைகளை அவர்களும் சந்தித்ததாக சொன்னார்கள்.

கூடவே, 'சாம்சங் M30, M31 போன்ற ஃபோன்கள் மிகச்சிறந்த பேட்டரி அமைப்புடன் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்த போன்கள் மார்க்கெட்டுக்கு வந்த பிறகு அடுத்த அடுத்த மாடல்கள் சரியாக விற்கவில்லை. அப்போது சாம்சங் நிறுவனம் வெளியிட்ட மென்பொருள் மேம்பாட்டில் அந்த ஃபோன்களுக்கு வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, ஒழுங்காக சார்ஜ் ஆவதில்லை, ஸ்கிரீன் ஆன் செய்தால் ஆப் ஆவதில்லை என்பது போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி அந்த போனை மாற்றும்படி செய்தார்கள் என்கிற தகவலையும் ஒரு தம்பி சொன்னார்.ஒட்டுமொத்தமாக சாம்சங் நிறுவனத்தின் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த ஒரு வழக்கு தொடுக்க இருக்கிறேன். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு செயலாளர், திருச்சி புஷ்பவனம் மூலமாக ஒரு வழக்கை தொடுப்போம்.'நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு, ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு, நம்மிடம் பொருள்களை விற்றுவிட்டு அதில் சேவை குறைபாடு வரும்போது நம்மை ஏமாற்ற நினைக்கும் இவர்களையெல்லாம் நம்மால் கேள்வி கேட்க முடியுமா?' என்று நாம் சந்தேகப்படத் தேவையில்லை. நியாயமான நம்முடைய பிரச்சனைகளுக்கு நீதி பெற்றுத் தர நீதிமன்றங்கள் தயாராக இருக்கின்றன.இந்தியர்களை வெறும் சந்தையாக மட்டுமே பார்க்கிற, தங்களுடைய லாபத்தை மட்டுமே சிந்திக்கிற, நம்மை ஏமாற்றி நம்முடைய மக்களின் பணத்தை திருடுகிற இந்த மாதிரியான நிறுவனங்களுடன் நான் நடத்த இருக்கும் போருக்கு துணையாக நிற்க நினைப்போர், மேற்படி நிறுவனங்களில் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை அநியாயமாக இழந்தோர் என்னை தொடர்பு கொள்ளவும்...

ஷானு
9842455580

Tags :
battarycheatingdisplayfraudFreehelplineMobileReplaceSAMSUNG MOBILESoftwarewarning
Advertisement
Next Article