இந்திய விளையாட்டின் பிதாமகன் தயான்சந்த் கேல்!
‘ஃபாதர் ஆப் இந்தியன் ஸ்போர்ட்ஸ்’ என பரவலாக அறியப்படுபவர் தயான்சந்த் கேல். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே நம் நாட்டிற்காக புகழை தேடி கொடுத்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானுக்கு இன்று பிறந்த நாள்.
பிராட்மேன் என்றால் கிரிக்கெட் விளையாட்டு, பீலே எனில் கால்பந்து போன்று ஹாக்கி விளையாட்டின் பிதாமகனாக கருதப்படுபவர் இந்திய வீரரான தயான் சந்த் இதே நாளில் 1905-இல் அலகாபாத்தில் பிறந்தவர். இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை அவன் உற்சாகப்படுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ வேண்டுமானால் இறங்கி ஆடேன் என்று நக்கலாக சொல்ல அந்தப் போட்டியில் அவன் அடித்த கோல்கள் நான்கு.
அவரது அப்பா சாமேஸ்வர் சிங் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். பால்ய பருவத்தை வெவ்வேறு ஊர்களில் செலவிட்டுள்ளார் தயான் சந்த். அதற்கு காரணம் அவரது அப்பாவுக்கு அடிக்கடி பணியிடத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது தான். படிப்பை முடித்ததும் 1922 இல் ராணுவத்தல் சிப்பாயாக சேர்ந்தார் தயான் சந்த். அதன் பிறகே ஹாக்கி விளையாட்டில் முழு நேர கவனம் செலுத்தியதாக அவரே தெரிவித்துள்ளார். பால்ய பருவத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.
அவருக்கு புரொபெஷனல் ஹாக்கி ராணுவத்தில் சேர்ந்த பிறகே பரிச்சயமாகி இருந்தாலும் ஹாக்கி அவரது ஜீனிலேயே இரண்டற கலந்தது எனவும் சொல்லலாம். தயான் சந்தின் அப்பா சோமேஸ்வர் சிங்கும் இந்திய ராணுவத்திற்காக ஹாக்கி விளையாடியுள்ளார். 1922 முதல் 1926 முதல் ஆக்டிவாக ஹாக்கி விளையாடினார் தயான் சந்த். குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் பந்தை கோல் போடும் வித்தையில் கெட்டிக்காரராக விளங்கினார் சந்த்.
தான் விளையாடும் போட்டிகளிலெல்லாம் கோல் மழை பொழிந்துவந்த தியான் சந்த், ஒரு போட்டியில் மட்டும் கோல் அடிக்கவில்லை. இப்போட்டி முடிந்ததும் நடுவரிடம் சென்ற தியான் சந்த், “கோல் போஸ்ட்களின் அகலம் சில அங்குலங்கள் குறைவாக உள்ளன” என்று புகார் செய்தார். தான் கோல் அடிக்க முடியாததால்தான் தியான் சந்த் இப்படி புகார் செய்கிறார் என்று நடுவர் முதலில் நினைத்தார். ஆனால் பிறகு கோல்போஸ்ட்டை அளந்து பார்த்தபோது நிஜமாகவே அதன் அகலம் சற்று குறைவாக இருந்துள்ளது. இந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றி மட்டுமின்றி, ஹாக்கி மைதானத்தைப் பற்றியும் நுட்பமாக அறிந்தவராக தியான் சந்த் இருந்துள்ளார்.
அவரது இயற்பெயர் தயான் சிங். பணி சூழல் காரணமாக இரவு நேரங்களில் நிலவு வெளிச்சத்தில் தான் எப்போதும் பயிற்சி செய்வாராம். அன்றைய காலகத்தில் மைதானங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லாதது அதற்கு காரணம். அதனால் நிலவு வெளிச்சத்தில் பயிற்சி செய்யும் அவரை ‘சந்த்’ (இந்தியில் நிலா என்று பொருள்) என செல்லமாக அழைத்துள்ளனர். 1926க்கு பின்னர் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை தேடி கொடுத்தார் சந்த்.
1928 இல் ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லீக், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றது இந்தியா. சந்த் ஐந்து போட்டிகளில் 14 கோல்களை அடித்திருந்தார். அதில் இறுதி போட்டியின் போது உடல்நிலை சரியில்லாத போதும் விளையாடி இரண்டு கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டிக்கு பிறகு அவரை ஹாக்கி விளையாட்டின் மாயக்காரன் எனவே எல்லோரும் அழைத்தனர். தொடர்ந்து 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளின் ஹாக்கி விளையாட்டிலும் இந்தியா தங்கம் வென்றது. 1935-ம் ஆண்டு அடிலெய்ட் நகரில் இவர் ஆடிய ஹாக்கி போட்டி ஒன்றை பார்க்கவந்த டான் பிராட்மேன், “கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் தியான் சந்த் கோல்களை அடிக்கிறார்” என்று புகழ்ந்தார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவர் ஜெர்மனிக்கு வந்தால் அந்நாட்டு குடியுரிமை வழங்கி, ஜெர்மன் ராணுவத்தில் மரியாதைக்குரிய பதவியையும் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் தியான் சந்த் அதை ஏற்காமல்‘இந்தியா விற்பனைக்கு அல்ல’ என்ற பதிலை அளித்து இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.
இந்தியாவுக்காக 1949 வரை விளையாடிய சந்த் 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்துள்ளார். சென்டர் பார்வேர்ட் பொசிஷனில் அவர் பந்தை கடத்தி சென்று கோல் போடுவதில் வல்லவர். அவரது காலத்தில் லைவ் பிராட்காஸ்ட் வசதி இல்லாத போதே இந்தியாவில் ஹாக்கி பக்கமாக பலரது பார்வையையும், ஆர்வத்தையும் எழுப்பியவர் சந்த். அவரது ஆதிக்கம் இன்றும் ஹாக்கி உலகில் அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டில் அதற்கு பின்னர் பல்பீர்சிங் சீனியர், சாஃபர் இக்பால் போன்ற பல வீரர்கள் வந்தாலும் யாரும் தயான்சந்தின் மாயஜால ஆட்டத்தை செய்து காட்ட முடியவில்லை. இதன்காரணமாகவே அவர் ஹாக்கி உலகின் தாதா அதாவது அனைவருக்கும் அண்ணன் முன்னோடியாக இருக்கிறார்.
வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு. அவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது தலைகுனிய வைக்கும் சேதி. அவரது பிறந்த நாளைதான் இந்திய தேசிய விளையாட்டு நாளாகவும் நம் நாட்டில் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக ஜான்சியில் சிலையும் அவருக்கு நிறுவப்பட்டுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்