இந்திய அஞ்சல் சேவையில் பதிவு அஞ்சல் தொடங்கிய நாளின்று- மத்திய அரசின் புது அறிவிப்பு
சர்வதேச அளவில் மிகப்பெரும் அஞ்சல் சேவையமைப்பைக் கொண்ட இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் 150 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. விடுதலைக்கு முன்பாக, இந்தியாவின் முதன்மையான நகர்ப்பகுதிகளில் மட்டும் 23,344 அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. விடுதலைக்குப் பின்பு, இந்திய அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை 1,54,965 என்று ஏழு மடங்காக அதிகரித்து விட்டது. கிராமப்பகுதிகளில் மட்டும் 1,39,067 அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சராசரியாக, 21.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்றும், இந்திய மக்கள் தொகையில் 7753 நபர்களுக்கு ஓர் அஞ்சலகம் எனும் அளவிலும் இருந்து வருகிறது.
நம் நாட்டின் அஞ்சல் துறை தபால், மணி ஆர்டர், பார்சல் மற்றும் சேமிப்பு மற்றும் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தி சேவை மூடு விழா கண்டது. தபால் சேவையில் மிக முக்கியமாக கருதப்படுவது பதிவு அஞ்சல் சேவையாகும் .பாதுகாப்பு, உத்தரவாதம், பதிவுச் சான்று ஆகிய கூடுதல் வசதி கொண்டவையாக இருக்கும் பதிவு அஞ்சல்களை, கண்காணிக்கும் வசதியும், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே அதைப் பெறும் வசதியும் இருப்பதால் இன்றும் நம்பிக்கைக்குரிய சேவையாக பதிவு அஞ்சல் சேவை திகழுகிறது.
இந்திய அஞ்சல் துறையில் பதிவுத் தபால் முறை கடந்த 1849 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதிதான் அறிமுகப்படுத்தப்பட்டது., இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரண தபால்கள் பெரும்பாலும் அதிகளவில் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், முக்கிய ஆவணங்களை அனுப்பி வைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தது. இந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டுதான் பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் போன்றவை தற்போது பதிவுத் தபால் முறையில் அனுப்பப்படுகின்றன. முன்பு பதிவுத் தபால் முறையில் எண்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பார் கோடு வசதிகளுடனும் இணையத்தின் வாயிலாக டிராக்கிங் செய்யும் வசதியும் செய்யப்பட்டு, டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் வந்த தகவல் :
அஞ்சலகம் மூலம் பதிவு தபாலுக்கு ஜிஎஸ்டி.ஆம்.. இனி ரிஜிஸ்டர் தபால் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி 18% செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.