சென்னையை சூறையாடிய மிக்ஜாம் புயல் கரையை கடந்தது!
வங்கக் கடல் அந்தமான் அருகில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக உருமாறியது. இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக உருமாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக கடுமையாக கன மழையால் பாதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய கனமழை திங்கள்கிழமை காலை வரை இடைவிடாது கொட்டித்தீர்த்ததால் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு மிக்ஜம் புயல் சென்னையைக் கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைந்து இன்று காலையில் இருந்து வெயில் தலை காட்டத்தொடங்கியது.இதனால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் தொடர்பாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திர கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் ஆந்திராவின் பாபட்லா - ஓங்கோல் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மேலும் அடுத்த 2 மணி நேரத்துக்கு வடக்கு திசை நோக்கி, நகர்ந்து மிக்ஜாம் புயல் வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது பாபட்லா பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் சாயந்து விழுந்தன. மேலும், வலுவிழந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடும் சேதம் ஏற்பட்டது. புயலால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை.