காவல்துறையின் போக்குக்கு கடிவாளம்!?
'காவல் நிலையம் என்றால் ஏன் மக்கள் பயப்படுகிறார்கள்?' என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கேட்டிருக்கிறார். ஒரு வழக்கின் விசாரணையின் போது எழுந்த கேள்வி இது. 'நீதிமன்றம், மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் போவதற்கெல்லாம் யாரும் தயங்குவதில்லை. ஆனால் காவல் நிலையத்தைப் பார்த்தால் மட்டும் அந்த பயம் வந்து விடுகிறது,' என்று சொல்லி இருக்கிறார். அப்படி வருவதற்கு இருக்கும் முக்கிய காரணம் 'தடுப்புக் காவல்' என்று நீதிபதி கருத்து சொல்லி இருக்கிறார். '
'முணுக் என்றால் யாரையும் கைது செய்து விசாரணையே இன்றி உள்ளே தள்ளுவதில் காவல்துறை தயங்குவதே இல்லை. அப்படி உள்ளே போனவர் அது இது என்று முட்டி மோதி ஜாமீன் வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஆறு, ஏழு மாதங்கள் கழிந்து விடுகின்றன. 'தடுப்புக் காவல் என்பது மிக மிக அரிதாக உபயோகிக்க வேண்டிய ஒன்று. ஒருவர் வெளியே இருந்தால் அவரால் சமூக அமைதிக்கு கேடு நிகழும், அவர் வன்முறைகளை பிரயோகித்து பாதிப்புகளை ஏற்படுத்த முனைவார் என்ற நிலை இருந்தால் மட்டுமே அந்த நபர் மீது தடுப்புக் காவல் பிரயோகிக்க வேண்டும். ஆனால் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது ஸ்கோர் கணக்கிடுவதில் அடித்துக் கொண்டு அதில் ஒருவர் இறந்து போனால் கூட அவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுகிறீர்கள். அந்த நபர் பின் எந்தக் குற்ற வரலாறும் இருந்திராது. அவரை நம்பி ஒரு குடும்பம் வேறு இருக்கும். அனாவசியமாக அவரையும் உள்ளே தள்ளி அவர் குடும்பத்தையும் தெருவுக்குக் கொண்டு வருகிறீர்கள்.' என்று நீதிபதி கூறி இருக்கிறார். மிக மிக முக்கியமான கருத்து என்று இதைக் கருதுகிறேன்.
இதை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்திய சிறைகளில் வாடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக் கைதிகள். அவர்களில் பலரும் பல மாதங்களாக, பல ஆண்டுகளாகவும் சிறையில் வாடுபவர்கள். இந்தியாவில் குற்ற நிரூபண விகிதம் 57%. அதாவது போலீஸ் கைது செய்யும் 100 பேரில் 43 பேர் நிரபராதிகள். ஆனால் தீர்ப்பு வருவதற்குள் இவர்களில் முக்கால்வாசி பேர் பல மாதங்களோ ஆண்டுகளோ சிறையில் கழித்து விடுகிறார்கள். இவர்கள் குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்து விடுகிறது. சிறைக்குப் போனவன் என்ற பிம்பம் நமது சமூகத்தில் அழுத்தமாக இருப்பதால் அந்த நபர் வெளியே வந்தாலும் வேலை கிடைப்பதோ, நண்பர்கள், உறவினர்களுடன் சகஜமாக இயங்குவதோ கடினமாகி விடுகிறது. இவர்களில் பலரும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என்பது முக்கிய பிரச்சினை. இந்திய சிறையில் வாடுபவர்களில் தலித், பழங்குடி மற்றும் முஸ்லிம் மூன்று சமூகத்தினரும் சேர்த்து சுமார் 60% வருகிறது.
இதுதான் காவல்துறை குறித்த நமது மக்களின் ஆதார பயத்துக்கு உள்ள முதல் காரணம். 'அங்கே போனால் நமது வாழ்வே நாசமாகி விடக் கூடும்,' என்பது நம் மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது. (இரண்டாம் காரணம் காவல்துறையினர் பிரயோகிக்கும் சட்ட விரோத வன்முறை. ஆனால் அது குறித்து வேறொரு பதிவில் பேசலாம்.) இந்திய சமூகத்தின் கேவலங்களில் ஒன்று'தடுப்புக் காவல்' எனும் மனித உரிமைக்கு எதிரான இந்த முன் கூட்டிய கைது. அதற்குக் கை தட்டி வரவேற்கும் நமது சமூகத்தின் அறியாமை. என்னைப் பொருத்தவரை இதற்கு எதிராக நீதிமன்றம் சும்மா கருத்து மட்டுமே சொல்லாமல் இதன் பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர, மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
முத்தலாக், தேச விரோத சட்டம் போன்றவற்றுக்கு சட்டம் வடிவமைக்க அரசுகளை நிர்பந்தித்த மாதிரி இதற்கும் செய்ய வேண்டும். அந்தப் புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி சில நிஜ குற்றவாளிகள் தப்பித்து விடக் கூடும். ஆனால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அப்பாவிகள் வாழ்க்கை பாதிப்புறாமல் காப்பாற்றப்படக் கூடும். 'முதிர்ச்சி அடையாத தெற்காசிய வன்முறை சமூகம்' எனும் நிலையில் இருந்து 'முதிர்ந்த அறிவார்ந்த சமூகம்' எனும் அடுத்த நிலையை நோக்கி இந்தியா பயணிக்கவும் இது உதவும்.