பார்லிமெண்டில் ஜனாதிபதி உரையில் சர்ச்சைகள்!
இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மொத்தம் 51 நிமிடங்கள் உரையாற்றிய ஜனாதிபதியின் உரையின் போது வெறும் 6 முறை மட்டுமே எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி திரையில் காட்டப்பட்டதாக காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
51 நிமிட ஜனாதிபதி உரையில் யார் யார் எத்தனை முறை காண்பிக்கப்பட்டனர்?
சபைத்தலைவர் நரேந்திர மோடி – 73 முறை
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி – 6 முறை
அரசு – 108 முறை
எதிர்க்கட்சி – 18 முறை
சன்சத் டிவி என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை நடவடிக்கைகளை ஒளிப்பரப்புவதற்காக தானே தவிர, கேமராமேன் தனது விருப்பத்தை ஒளிபரப்ப அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திரௌபதி முர்மு இன்று மக்களவைக் கூட்டத்தில் தனது உரையின்போது, ``1975, ஜூன் 25-ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் மற்றும் இருண்ட அத்தியாயம். இதன் சீற்றத்தை முழு நாடும் உணர்ந்தது" என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் திரௌபதி முர்முவின் உரையின்போது எதிர்க்கட்சி எம்.பி-க்கள், மணிப்பூர், நீட், அக்னிவீர் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், இன்றைய பிரச்னைகள் குறித்து ஜனாதிபதி ஏன் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வியெழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்திடம் பேசிய சசி தரூர், ``ஜனாதிபதி தனது உரையில் 49 வருட எமெர்ஜென்சியைப் பற்றி பேசுவதில் எந்த லாஜிக்கும் இல்லை. இன்றைய பிரச்னைகள் குறித்து அவர் பேசியிருக்க வேண்டும். அவர் உரையில் நீட் தேர்வு, வேலையில்லா திண்டாட்டம் என எதுவும் எங்கள் காதில் விழவில்லை. திரௌபதி முர்மு மற்றும் மோடியிடமிருந்து மணிப்பூர் என்ற வார்த்தையே வரவில்லை. இந்தியா-சீனா எல்லை பிரச்னை அவர் உரையில் இடம்பெற்றிருக்க வேண்டும்" என்றார்.
அத்துடன் ஜனாதிபதி ஆற்றிய உரையில் 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையைக் கேட்டேன். நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் ‘400 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெறுவோம்’ என்ற முழக்கத்தை நிராகரித்துவிட்டனர். அதைவிட குறைவாக வெறும் 272 இடங்களையே அளித்துள்ளனர். பிரதமர் மோடியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பிரதமர் மோடி எதுவும் மாறவில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார். ஆனால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மாநிலங்களவையில் நான் பேசுகையில் இது பற்றி விரிவாக சொல்வேன். அதற்கு முன்னதாக சில விஷயங்களை குறிப்பிடுகிறேன்.
நீட் முறைகேட்டில் கண்துடைப்பு எடுபடாது. கடந்த 5 ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமை நடத்திய 66 தேர்வுகளில், வினாத்தாள் கசிவு, முறைகேடு என 12 தேர்வுகள் மீது புகார்கள் எழுந்துள்ளது. இதனால் 75 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கூறிவிட்டு, பிரதமர் மோடி அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பி ஓட முடியாது.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்கிறார்கள். இதற்கு மத்திய கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும். இரண்டு இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கின்றனர். வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான எந்த தகவலும் குடியரசுத் தலைவர் உரையில் இல்லை. ஒட்டுமொத்த உரையிலும், ஐந்து முக்கிய பிரச்னைகள் பேசப்படவில்லை.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், பயணிகள் ரயில்கள் உள்பட நாட்டில் நிகழும் பயங்கர ரயில் விபத்துகள், ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு போன்ற ஐந்து முக்கிய பிரச்னைகள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை.
ஒட்டுமொத்தமாக, கடந்த மக்களவைத் தேர்தலில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பொய்களை எல்லாம், கடைசியாக ஒரு முறை நாடாளுமன்றத்தில் சொல்லி சில கைதட்டல்களையாவது பெறலாம் என்று பிரதமர் மோடி அரசு முயன்றுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.