தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

01:35 PM Nov 26, 2023 IST | admin
Advertisement

சாதாரண நாய்கள் போகிற வருகிறவர்களை எல்லாம் கடிக்காது. ரேபிஸ் என்பது ஒரு வைரஸ். இந்த தொற்று பாதிக்கப்பட்ட நாய்கள்தான் அப்படி கடிக்கும். அதற்குக் காரணம் அவற்றின் நரம்பு மண்டலம் அவற்றின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது முக்கிய காரணம். நாய்கள் கடித்து அதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய மனிதர்களும் இதையேதான் செய்வார்கள். ரேபிஸ் என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு கொடூர நோய். கொடும் சித்ரவதையில் இறுதி நாட்களைக் கடந்து கொடும் வலியுடன் வரும் மரணம் அது. சொல்லப் போனால் மரணம் என்பது உண்மையில் அங்கே விடுதலைதான்.

Advertisement

ரேபிஸ்சை தடுக்க இயலும். குணமாக்க இயலாது. எனவே ரேபிஸ் தாக்கிய நாய்களைப் பிடித்து கருணைக் கொலை செய்வதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி. ஆனால் அப்படி செய்வதற்கு முன்பு ஒரு கேள்வி கேட்க வேண்டும்: தெரு நாய்களுக்கு ரேபிஸ் தொற்று வருவது யாருடைய குற்றம்? இது மக்களாகிய நம்முடைய குற்றம். நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முயல்கிறோம். குப்பை சேர்ந்தால் அரசை சாடுகிறோம். அல்லது நாமே ஆள் வைத்து குப்பையை கூட்டுகிறோம். குப்பை கூளங்கள் தேர்தல் பிரச்சினையாக ஆகும் அளவுக்கு கோபம் கொள்கிறோம். நமக்கு உபயோகமான விலங்குகளான கோழி, பசு, ஆடு போன்றவற்றை நோய் நொடி எதுவும் தாக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

Advertisement

ஆனால் நாய்களும் நமது சுற்றுப்புறத்தை சேர்ந்தவைதான். ஆனால் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை. கோழி, பசு போல நாய்களும் விலங்குகள்தான். ஆனால் அவை நமக்கு உபயோகமானவை (!) இல்லை. எனவே அவற்றை குப்பையில் உழல விடுகிறோம். நோய்கள் தாக்கினால் கண்டு கொள்வதில்லை. நான் உணவிடும் தெருக்களில் உள்ள அனைத்து பெண் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். பெரும்பாலானவற்றுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டு இருக்கிறோம். எனவே எங்கள் தெருக்களில் உள்ள நாய்கள் இப்படி வெறி பிடித்து யாரையும் கடிக்காது. அப்படி ஏதோ ஒரு அரிய சந்தர்ப்பத்தில் கடித்து வைத்தாலும் பயப்படத் தேவையில்லை.

ஒரே ஒரு டிடி ஊசி போட்டுக் கொண்டால் போதுமானது. (அது கூட பத்து ஆண்டுகளுக்கு ஒன்று போட்டுக் கொண்டாலே போதும் என்கிறார்கள்.)இப்படி இந்தத் தெருக்களை பாதுகாப்பாக ஆக்க முடிந்ததற்குக் காரணம் அவற்றுக்கு உணவிடுவதுதான். அப்படி தினம் தினம் அவற்றுடன் பழகுவதினால்தான் அவை என்னிடம் நம்பிக்கையுடன் வருகின்றன. அவற்றை நான் பிடித்து அறுவை சிகிச்சைக்கு அனுப்ப முடிகிறது. அல்லது பிடித்து ஊசி போட முடிகிறது.

ஆனால் இதை தமிழ்நாடு முழுக்க செய்ய முடியாது. ஆனால் அரசாங்கத்தினால் செய்ய இயலும். செய்ய வேண்டும். நகராட்சிகள், மாநகராட்சிகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கருத்தடை சிகிச்சைகளை முன்னெடுத்து, தொடர்ந்து நாய்களுக்கு தடுப்பு ஊசிகள் போட்டுக் கொண்டு வர வேண்டும். என் போல நாய்களுக்கு உணவிடுபவர்களுக்கு அனுமதி கொடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும். அதற்கான சுற்றறிக்கைகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும். மழை நீர் சேகரிப்பு, கோவிட் தடுப்பு ஊசி போன்றவற்றுக்கு காட்டிய அளவுக்கான ஒருங்கிணைந்த முனைப்பை அரசு காட்ட வேண்டும். சமீபத்திய சம்பவத்துக்குப் பின் சென்னை மாநகராட்சி தடுப்பு ஊசி போடும் முனைப்பை எடுத்திருக்கிறது என்று இன்றைய ஹிண்டுவில் படித்தேன். இது நல்ல முனைப்பு. ஆனால் தொய்வின்றித் தொடர வேண்டும்.

ஏற்கனவே விலங்கு நல வாரியத்தில் Community Feeder Certificate என்று வழங்குகிறார்கள். நானும் அரசு லைசென்ஸ் பெற்ற community feederதான். சமூக விலங்குகளுக்கு உணவிடுவது, அவற்றை பாதுகாப்பது போன்றவை அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்தியருக்கும் கொடுத்துள்ள கடமை. அவர்களைத் தடுப்பது உண்மையில் தண்டிக்கத்தக்க குற்றம். ஆனால் இந்தத் தெளிவு எனக்கு சில வருடங்கள் முன்புதான் கிடைத்தது. அதுவரை பயந்து பயந்துதான் இதனை செய்து கொண்டிருந்தேன். என்னை அடிக்க வந்த ஒரு கும்பலிடம் இருந்து தப்பி ஓடவெல்லாம் செய்திருக்கிறேன். இன்றைக்கு வந்தால் அவர்களைத் துணிவுடன் எதிர்கொண்டு யோசிக்காமல் எங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போடுவேன். (பல முறை செய்திருக்கிறேன். தெரு நாய்கள் மேல் வன்முறை காட்டுபவர்களையும் போலீசில் மாட்டி விட்டிருக்கிறேன்.)பெரும் தடைகள் தாண்டி எனக்குக் கிடைத்த இந்தத் தெளிவும் விழிப்புணர்வும் சமூகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு அரசுதான் முனைப்பு எடுக்க வேண்டும்.

கடைசியாக ஒரு பாயிண்ட். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லை, நாய்கள் மானுட வாழ்வின் அங்கம். அவற்றைக் காட்டில் இருந்து நான் கூட்டி வரவில்லை. நமது கொள்ளு, எள்ளு தாத்தாக்கள்தான் தங்கள் வேட்டைக்கு உபயோகமாக இருக்கட்டும் என்று கூட்டி வந்தார்கள். அப்படி வந்தவற்றின் கொள்ளு, எள்ளுப் பேரன், பேத்திகள்தான் நம்மிடையே இன்று உலவுகின்றன. இன்று நாம் வேட்டைக்குப் போவதில்லை என்பதால் அவற்றின் உபயோகம் தீர்ந்து போய் துரத்தி விட்டு விட்டோம். இப்போது அவை அநாதைகளாக தெருவில் குப்பை கிளறிக் கொண்டிருக்கின்றன.

மானுட சுயநலத்தின், மானுட அக்கறையின்மையின், மானுட அலட்சியத்தின் மாபெரும் வாழும் சாட்சிதான் 'தெரு நாய்கள்' எனப்படுபவை. நாம் எவ்வளவு கேவலமான ஜந்துக்கள் என்று தினம் தினம் நமக்குக் காட்டிக் கொண்டிருகின்றன. மானுடம் முன்னேற வேண்டியது குறித்து அக்கறை இருப்பவர்கள் அல்லது மானுட சுயநலம் குறித்து வெட்கம் இருப்பவர்கள் தெரு நாய்கள் குப்பையைக் கிளறுவதைக் கண்டு சிறிதேனும் குற்றவுணர்ச்சி கொள்வார்கள். 'என் கூந்தலுக்கு என்ன வந்துச்சு!' என்று கருதுபவர்கள் மட்டுமே 'இந்த எழவெடுத்த நாய்ங்க ஏன் நம்ம தெருவுல வந்து கெடக்குதுங்க?' என்று அங்கலாய்ப்பார்கள். என்ன, அந்த நாய்களுக்கு மட்டும் வாயிருந்தால் 'நான் எங்கடா வந்தேன். உன் தாத்தன்தான் எங்களை கூட்டிக்கிட்டு வந்தான்,' என்று சொல்லி முகத்தில் காறி உமிழும்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
dog bitedog scratchrabiesstreet dogs
Advertisement
Next Article