இந்திய அரசியலமைப்பு நாள் எனப்படும் தேசிய சாசன தினம்!
தேசிய சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) எனப்படும் அரசியல் சாசன நாள்/ இந்திய அரசியலமைப்பு நாள் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய - மாநில - யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அலுவலகங்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நிதி பற்றிய விதிகள் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் என ஒவ்வொரு செயல்பாடுகளையும், அங்குலம் அங்குலமாக மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ள ஒரு கட்டளையாகும்.இவை அனைத்தையும் போல ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கி இருக்கக்கூடிய உரிமைகள், என்ன கடமைகள் என்ன என தெள்ளத் தெளிவான வரையறைகளும் இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர அரசு மறுக்கக்கூடாது என பிரிவு 14-ன் படியும் சமயம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும், எந்த குடிமகன் இடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது என பிரிவு 15-லும் என வகுத்ததோடு சுதந்திரமாக சிந்திப்பதற்கும், பிரிவு 19 உட்பிரிவு ஒன்றின் கீழ் பரந்துபட்ட சுதந்திரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு நழுவி இருப்பது தான் நல்லுலகம் போற்றும் இந்திய அரசியல் சாசனம்.
இப்பேர்பட்ட நம் தேசிய சாசனம் சமூகத்தின் தேவைக்கேற்பவும் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 103 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நாடடின் போக்கை மாற்றிய சில திருத்தங்களை கீழே காணலாம்...
முதல் சட்டதிருத்தம்(1951)
நீதித்துறையின் தலையீட்டால் நில சீர்திருத்தம் மற்றும் இதர சில சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 3 நிபந்தனை வரம்புகள் சேர்க்கப்பட்டு அடிப்படை உரிமையான பேச்சுரிமையில் மாற்றம் செய்யப்பட்டது.
ஏழாவது சட்டதிருத்தம்(1956)
மொழிவாரியாக 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களாக நாடு பிரிக்கப்பட்டது. மொழியை பாதுகாக்கும் நோக்கில், தொடக்க பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டம் 350-A பிரிவு சேர்க்கப்பட்டது.
24ஆவது சட்டதிருத்தம்(1971)
அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மக்களவைக்கே உள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
42ஆவது சட்டதிருத்தம்(1976)
சோசியலிஸ்ட், மதச்சார்பின்மை, நேர்மை போன்ற வார்த்தைகள் அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டன. குடிமக்களின் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன. ரிட் மனுக்கள், மறு சீராய்வு மனுக்கள் ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் வரம்புகள் குறைக்கப்பட்டன. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
44ஆவது சட்டதிருத்தம்(1978)
அவசர நிலை பிரகடன விதிகளில், உள்நாட்டு கலகம் என்ற வார்தைக்கு பதில் ஆயுத புரட்சி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்காமல் குடியரசுத் தலைவரால் அவசர நிலை பிரகடனப்படுத்த முடியாது என்ற விதி கொண்டுவரப்பட்டது. அடிப்படை உரிமைலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது.
73ஆவது மற்றும் 74ஆவது சட்டதிருத்தம்(1992)
உள்ளாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்து, நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை அரசியமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. புதிதாக நகராட்சிகள் உருவாக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
86ஆவது சட்டதிருத்தம்(2002)
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கல்வியுரிமை அடிப்படை உரிமைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட்டது.
101ஆவது சட்டதிருத்தம்(2016)
அரசியலமைப்பு சட்ட பிரிவு 269-A, 279-A ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது.
102ஆவது சட்டதிருத்தம்(2018)
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்டு அரசியலமைப்புக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் புகார்களை விசாரிக்கவும் அவர்களின் நலதிட்டங்கள் குறித்து ஆராயவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
103ஆவது சட்டதிருத்தம்(2019)
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
வாக்குரிமைக்கான வயது வரம்பு 18ஆக குறைக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு, ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது 61ஆவது சட்டத்திருத்தம் மூலம் வாக்குரிமைக்கான வயது வரம்பு 21லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது. இதன் மூலம், இளம் தலைமுறையினர் தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டது.
மேலும் நம் அரசியல் சாசனம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:
* இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
* அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
* பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
* இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
* இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.
* கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
* அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
* இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.
* இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்