For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ வீரமாமுனிவர்!

07:39 AM Feb 04, 2024 IST | admin
மறைப்பணியுடன்  தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ வீரமாமுனிவர்
Advertisement

ம் நாட்டுக்கு இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். அத்துடன் தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். தமிழ் அகராதித் துறைக்கு மூலவர். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர். தமிழின் மரபினையொட்டி `தேம்பாவணி’ என்ற சிறந்த காப்பியம் படைத்தவர். தமிழ் இலக்கண மரபுப்படி கவிதைகள் புனைந்தவர். தமிழ் மொழியில் பிரபந்தம், கலம்பகம், அம்மானை, கலிப்பா எனப் பதிகம் தொடங்கி, `பா’ வகைகள் பலவற்றில், செய்யுள் இயற்றியவர். தமிழில் உரைநடை படைத்தவர். தமிழ் இலக்கியங்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தவர். “தாமே தமிழானார்; தமிழே தாமானார்!” என்று தமிழ் இலக்கியவாணர்கள் போற்றும் வண்ணம், தமிழுக்காக வாழ்ந்தவர். அவர்தான் இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய `கான்ஸ்டண்டைன் ஜோசப் பெசுகி’ `வீரமாமுனிவர்’!

Advertisement

இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் 08.11.1680 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் கொண்டோல்போ பெசுகி. அவர் இளமையிலேயே தாய்மொழிக் கல்வி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். 1698 ஆம் ஆண்டு, தமது 18-ஆவது வயதில் துறவுபூண்டு, இயேசு சபையில் தொண்டராகச் சேர்ந்தார். சமயப் போதகருக்குரிய பயிற்சி பெற்றார். 1706 ஆம் ஆண்டு சமய வேதாகமங்களை முற்றாகப் பயின்று குருப்பட்டம் பெற்றார். இத்தாலி நாட்டில் தமது இளமைப் பருவத்திலேயே இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். தத்துவமும், இறையியலும் பயின்றார்.

Advertisement

தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்பிட, 1711 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, மணப்பாடு , மதுரை காமநாயக்கன்பட்டி முதலிய ஊர்களில் தங்கி சமயப்பணி ஆற்றினார். தமிழ் பயின்றதுடன், தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.அக்காலத்தில் தென்னாட்டில் சந்தா சாகிபு என்னும் முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். சந்தா சாகிபு வீரமாமுனிவரின் ஆழ்ந்த படிப்பையும், அறிவின் பரப்பையும், தூய வாழ்வையும், பெருமையையும் உணர்ந்து, அவருக்கு ‘இஸ்மாத்தி சந்நியாசி’ என்னும் பட்டமளித்துப் பாராட்டினார். ‘இஸ்மாத்தி சந்நியாசி’ என்றும் பாரசீகத் தொடருக்குத் ‘தூய துறவி’ என்பது பொருள். கான்ஸ்டண்டைன் ஜோசப்பு பெஸ்கி என்னும் தமது பெயரை ‘தைரியநாதர்’ என மாற்றிக் கொண்டார். அப்பெயரே, பின்னர் ‘வீரமாமுனிவர்’ என்னும் விழுமிய பெயராய் வழங்கலாயிற்று.

1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். அவரது தவத்தேடல் தமிழ்த்தேடலாக மலர்ந்தது. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை லத்தீனில் மொழிபெயர்த்தது இவரது சாதனைகளில் முதன்மையானது. கொடுந்தமிழ் என்று அழைக்கப்பட்ட பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்-லத்தீன்-போர்ச்சுகீசிய-ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் பொது அகராதி படைத்தவர். கல்லூரி என்ற சொல்லாக்கம் இவரால் செய்யப்பட்டது என்பர்.

தமிழில் நெடில் எழுத்துக்களை உருவாக்கியவர் வீரமாமுனிவர் ஆவார். ‘ஆ’ என எழுத ‘அர’ என இரண்டு எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ: அர, எ: எர) இந்த நிலையை மாற்றி ‘ஆ, ஏ’ என மாறுதல் செய்தவர் இவர். அந்தப் புதிய எழுத்து முறைகளை தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டு இன்றளவும் புழக்கத்தில் இருக்கிறது.

தஞ்சைக்கு அருகில் உள்ள ஏலாக்குறிச்சிக்கு வருகை தந்து, அங்கு தங்கி சமயப் பணிகளை மேற்கொண்டார். அங்கு ஒரு திருச்சபையை நிறுவினார். புதிய ஆலயம் அமைத்து, அதில் அன்னை மேரியின் திருவுருவை நிறுவனார். அந்த ஆலயம் ‘அடைக்கல மாதா ஆலயம்’ என்றழைக்கப்படுகிறது. ஏலாக்குறிச்சியில் சமயப்பணி ஆற்றிக்கொண்டு இருந்த போது, சித்த மருத்துவ பணியிலும் ஈடுபட்டார். அரியலூர் பெருநிலக்கிழார் அரங்கப்ப மழவராயரின் இராச பிளவை என்னும் நோயைக் குணமாக்கி, நூற்று எழுபத்தைந்து ஏக்கர் நிலத்தை 05.08.1735 அன்று நன்கொடையாக பெற்றார். அதற்குரிய கல்வெட்டு இன்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அடைக்கல அன்னையைப் பொன்நகை அணிந்து புன்னகைக்கும், ஒரு தமிழ்ப் பெண்ணாக வடிவமைத்து இவ்வடிவத்தையே சிலையாக வடித்து மணிலாவிலிருந்து வரவழைத்து, ஏலாக்குறிச்சியில் கோயில் எழுப்பினார் அடிகள். இத்தாலிய ஆலயக் கட்டுமான முறையில் எழிலோடு திகழ்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல்மாடத்தில், வீரமா முனிவர் காலத்தில் ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருட் கள் உள்ளன. அவற்றின் வடிவமும் செய்நேர்த்தியும் ஆச்சரியமாக உள்ளன. பலமொழிப் புத்தகங்கள், அதிசயமான அச்சு நூல்கள் அங்கே கண்ணாடிப் பேழைகளில் அவர் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ளன.கொள்ளிடம் கரைபுரண்டோடி, எங்கும் பசுமைத் தோட்டங் களாகவும் குளிர்ச்சியான மரநிழல் கூட்டங்களாகவும் ஏலாக்குறிச்சி திகழ்ந்தது. கவிதைகள் புனைய வீரமாமுனிவருக்கு ஏலாக்குறிச்சி ஏற்ற இடமாயிற்று. கொள்ளிடம் கரைபுரண்டு ஓடும் ஆறுமாதங்களும் தனது குடிலில் அமர்ந்து எழுதியபடி இருப்பார் அடிகள். அடிகள் சிலநேரம் அய்யம்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பாதை ஒன்று அய்யம்பேட்டை அருகில், வீரமாமுனிவர் வெட்டி என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது.

தஞ்சையில் சரபோஜி மன்னரின் நோயைத் தமது மூலிகை மருத்துவத்தால் குணப்படுத்தினார். அதுவரை கிறித்தவர்கள், போதகர்கள் ஆகியோர்மீது சரபோஜி மன்னர்கள் காட்டிய வெறுப்பு மறைந்தது. அடிகள் தமது மறைப்பணியை தஞ்சாவூரில் தடையின்றி மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது போல் ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார், ராஜபிளவை என்னும் தீராத நோயால் துன்புற்றார். ஆங்கில மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப்போயின.வீரமாமுனிவர் மன்னரின் வேதனை கண்டு அடைக்கல மாதாவை வேண்டிப் பச்சிலை தேடிச் சென்றார். கடுங்கோடைக்காலம் அது. புல்லும் பொசுங்கிய கட்டாந்தரையில் பச்சிலை எப்படிக் கிடைக்கும்? ஓரிடத்தில் தண்ணீர் குபுகுபுவென்று கொப்பளித்து வந்தது. அந்த நீரோடு சேற்றை அள்ளி மன்னரின் ராஜபிளவையில் வைத்துப் பூசினார். அரசர் அன்றே குணமடைந்து நன்றாகத் தூங்கினார். இச்செய்தி கல்வெட்டில் பொறிக்கப் பட்டு, நோய் தீர்த்ததற்குக் காணிக்கை யாக அரசன், அடைக்கல அன்னையின் ஆலயத்துக்கு நிலம் அளித்த செய்தி ஆலயத்துக்குள் காட்சியளிக்கிறது.

வீரமாமுனிவர் மேனாட்டு மொழிகள் பலவற்றை கற்றுத் தேர்ந்த பண்டிதர். அவர் அம்மொழிகளில் உள்ள வசன நூல்கள் பலவற்றைப் படித்து மகிழ்ந்தவர்; அம்மொழிகளைப் போல தமிழ் மொழியிலும் வசன நூல்கள் பெருகுதல் வேண்டும் என்னும் விருப்பம் கொண்டார் அவ்விருப்பத்தால் வசன நூல்கள் பல எழுதித் தமிழ் மொழியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டார்.வீரமாமுனிவர் எழுதி அளித்த வசன நூல்களுள் ‘பரமார்த்த குரு கதை’ என்னும் நூல் தலைச்சிறந்தது ஆகும். அந்நூல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, தெலுங்கு கன்னடம் உட்பட 54 மொழிகளில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. `பரமார்த்த குரு கதை’ யைத் தமிழில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்நூல் `எள்ளல் சுவை’ மிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், `உரைநடைச் செம்மல்’ எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு, அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர்! அவர் எழுதிய `வாமன் சரித்திரம்’ அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப்பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் இதே 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.

வீரமாமுனிவர் மறைந்தபோது, ஏலாக் குறிச்சியைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ பறந்து சென்ற தினமின்று

வாத்தீ. அகஸ்தீஸ்வரன்.

Tags :
Advertisement