For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு!.

06:10 PM Mar 11, 2024 IST | admin
தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
Advertisement

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார். தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் ஆணையரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்ற நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்திருந்தது.

Advertisement

அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவில் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். தேடுதல் குழு அனுப்பி வைக்கும் பரிந்துரை பட்டியலில் இருந்து ஒருவரை இந்த தேர்வுக்குழு தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையை ஏற்று அவரை தேர்தல் அதிகாரியாக ஜனாதிபதி நியமிப்பார்.

மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக இருப்பதால், ஒவ்வொரு பதவிக்கும் தலா 5 பேரின் பெயர்களை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான தேடுதல் குழு பரிந்துரை செய்யும். இந்த இரண்டு பட்டியலில் இருந்தும் தலா ஒருவரை பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து பரிந்துரை செய்ய உள்ளது. தேர்வுக்குழு வரும் 15ம் தேதி கூடி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 2 தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிப்பதற்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும் நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த உத்தரவை ஜெயா தாகூர் தனது மனுவில் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த உத்தரவின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி உத்தரவிடவேண்டும் என்றும் ஜெயா தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
Advertisement