இஸ்ரேலின் அநீதிகளுக்கு உடந்தையாக இருந்து விட்டு இப்பொழுது ரஷ்யாவிற்கு கண்டனமா?
உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையின் மீது ரஷ்ய ராணுவம் அண்மையில் நடத்திய ஏவுகனை தாக்குதலில் 32 ற்கும் அதிகமான பொதுமக்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் பல மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை மீது ஏவுகனை வீசி குழந்தைகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்த ரஷ்யாவிற்கு வன்மையான கண்டனங்கள். இந்த தாக்குதலுக்கு மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பையும், கண்டங்களையும் பதிவு செய்து வருகின்றனர். மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர் ஆணையர் வோல்கர் டர்க்கும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவிக்கையில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது போர் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், இந்த சம்பவம் ரஷ்யாவின் மிருகத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கும் இதே ஜோபைடன் தான் உள்நாட்டில் வாழும் மனிதப் பற்றாளர்களின் எதிர்ப்பையும், உலகின் பிற நாடுகளில் உள்ள மனிதப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருபவர். இவர்கள் வழங்கிய ஆயுதங்கள் தான் பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், மக்களின் இருப்பிடங்கள், அப்பாவிக் குழந்தைகள் உட்பட பல லட்சம் மனித உயிர்களின் அழிவிற்கு காரணமாக இருந்துள்ளது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத எண்ணிக்கையில் படுபயங்கரமான ஆயுதங்களை ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து வாரி வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது.
ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகளுக்கு ஜோபைடன் மட்டுமல்ல பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவிப்பதுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியும் வழங்கியவர்கள் தான். அக்டோபர் 7-ற்கு பிறகு மட்டும் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் மனித உயிர்கள் ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலால் கொல்லப்பட்டதுடன் என்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நிரந்தர ஊனம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இடிபட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் அல்லது பிணமாக உள்ளனர். உலகத்தின் கண்முன்னே அந்த மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உட்பட அனைத்தும் ஆக்ரமிப்பு பயங்கரவாத சியோனிஸ ராணுவ நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போரில் காயம்பட்ட மக்களுக்கு உதவ வந்த 200-ற்கும் அதிமான சர்வதேச மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். ஐநூறுக்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களும் ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் மொத்தமாக இருந்த 32 மிகப்பெரிய மருத்துவமனைகள் (அல்ஷிபா, அல்நாசர் மருத்துமனைகள் உட்பட) ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலின் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. அதில் 28 மருத்துவமனை கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பிரசவத்திற்காக காத்திருந்த பெண்களும் பொதுமக்களும் அதே இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலின் இந்த கொடூர அநீதிகளுக்கு எல்லாம் உடந்தையாக இருந்து விட்டு இப்பொழுது ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்க இவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்பது புரியவில்லை.