இடிபடப் போகும் பிராட்வே பஸ் ஸ்டாண்டின் நதிமூல/ரிசி மூல ரிப்போர்ட்!
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் மிகவும் பிரபலமான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது.இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் இண்டகிரேஷன் போக்குவரத்து முனையம் அதனுடன் சேர்த்து அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தற்போது தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த திட்டமானது சுமார் 823 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என சட்டசபை பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற இருக்கின்றன. சமீபத்தில் தான் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்தானது மாற்றப்பட்டது. இந்நிலையில் மக்கள் அனைவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறி வந்தனர்.இவ்வாறு இருக்க பிராட்வே பேருந்து நிலையமானது எங்கு மாற்றப்படும் என்று கேள்வி எழுந்தது. தற்போது பிராட்வே பேருந்து நிலையத்தில் போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருப்பதால் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த பிராட்வேயின் நதி மூலம், ரிஷிமூலம் அறிந்து கொள்வோமா?
அப்போ மெட்ராஸாக இருந்த சென்னையின் முதன்மை வணிக சாலையாக கடந்த 19-ம் நூற்றாண்டில் உருவெடுத்த ‘போபாம்ஸ் பிராட்வே’ இன்றளவும் அரசியல், இலக்கியம், வணிகம், ஆன்மிகம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் தலைமை பகுதியாக விளங்குகிறது.குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், பர்மா பஜார், பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, சேலைகளின் மொத்த சந்தையான குடோன் தெரு, தங்க நகைகள் மற்றும் அனைத்து வித பொருட்களும் கிடைக்கும் காசி செட்டி தெரு என பிரதான வணிகப் பகுதியாக திகழ்கிறது பிராட்வே. கடந்த 2002-ம் ஆண்டு வரை தென் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் பிராட்வேயில் இருந்துதான் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமானால் மதராஸப் பட்டணத்தின் மீனவக்குப்பத்தை ஒட்டியிருந்த அந்த வெட்டவெளி இடம் ஒருநாளில் கடல் மட்டத்துக்கு நிகராக இருந்தது. அடிக்கடி கடல் அதுவரை வந்து அலைவீசும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட பிறகு, அதற்கு அருகே இருந்த நரி மேடு, கோட்டையின் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அந்தச் சிறிய குன்று தகர்க்கப்பட்டு அந்த மண் கொண்டுவந்து கொட்டப்பட்ட இடம்தான் மண்ணடி என பெயர் பெற்றது என முன்னரே பார்த்தோம். அந்த நரிமேட்டு மணல் மிச்சம்தான் இந்த பிராட்வே. இன்று பிராட்வே எனவும், பிரகாசம் சாலை என்றும் விவரிக்கப்படும் அந்த இடத்தில் ஓர் ஓடை இருந்தது. பெரிய நீர் ஓட்டம் எல்லாம் இல்லை. சாக்கடை ஓடை.
அந்த ஓடையின் அருகே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்த ஸ்டீபன் போபம் அவர்கள் வீடு இருந்தது. வீட்டின் முன்னால் இப்படி ஒரு சாக்கடை ஓடை இருந்ததால், அந்த நரிமேட்டு மண்ணை வைத்து சரி செய்துகொள்ள விரும்பி, மண்ணுக்கு விண்ணப்பித்தவரும் அவர்தான். மேலும் சென்னையில் காவல் துறையை ஏற்படுத்த முழு முதல் காரணமாக இருந்தவர்ரும் அவர்தான் என்பதெல்லாம் 18-ம் நூற்றாண்டின் கதை. அந்த ஓடை சுமார் 12 அடி உயரம் வரை உயர்த்தப்பட்டு சாலை ஆக்கப்பட்டது.
அந்த சாலையை ஒட்டி ஏராளமான உணவகங்கள் உருவாகின. அன்றைய வெள்ளையர்களின் பிரதான சாயங்கால வேலை கூடல் இடமாக இருந்தது வெங்கடாசலம் என்பவர் நடத்திவந்த மிளகு ரசம் கடை. மிளகுக்காக இந்தியாவைத் தேடி வந்தவர்கள்தானே ஆங்கிலேயர்கள். இன்னொரு முக்கியமான ஓட்டலும் அங்கே வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஹாரிசன் ஓட்டல் என்று பெயர். இன்றும் நுங்கம்பாக்கம் ஸ்பர்டாங்க் சாலையை ஒட்டிய பாலத்துக்கு அருகே ஒரு ஹாரிசன் ஓட்டல் உள்ளது.
ஆரம்ப பேராவில் சொன்னது போல் நிறைய ஓட்டல்கள் முளைத்தது போலவே பின்னாளில் அங்கு நிறைய பதிப்பகங்கள் தோன்றின. சைவ ரத்ன நாயகர் அண்டு சன்ஸ் பிரசுரம், சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், மறைமலை அடிகள் நூலகம், பூம்புகார் பிரசுரம், பாரி நிலையம், யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் என எண்ணற்ற நூல் வெளியீட்டு நிறுவனங்கள் அங்கே தோன்றின.
இப்பேர்பட்ட சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வந்தது. சில ஆண்டுகாளாக ஆலோசனையில் இருந்த இன்றும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களை எதிர்கொள்ளும் இந்த பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்றப்படுவதாக இப்போது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பிராட்வேயைச் சுற்றி மெட்ரோ ரயில் பாதை மற்றும் 7 நடைமேம்பாலங்கள் கட்டவேண்டி உள்ளதால், தற்காலிகமாக தீவுத்திடலுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது பேருந்து நிலையம் உள்ள இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதுடன் 9 மாடியில் வணிகவளாகமும் அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக இந்தத் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்த உள்ளது என்றும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு. இந்த பிராட்வே போக்குவரத்து முனையத்தின் முக்கிய அம்சங்கள் என்று வந்த செய்தி இதோ:
பிராட்வே பேருந்து நிலையம் ரூ.900 கோடி செலவில் 21 மாடிகள் வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையமாக மாற உள்ளது.
ஒரே நேரத்தில் 97 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைய உள்ளது.
கீழ் தளத்தில் 53 மற்றும் கீழ் தரை 44 பேருந்துகளை நிறுத்த முடியும்.
அடுத்த 2 தளங்களில் இரு மற்றும் நான்கு சக்கர பார்கிங் வசதி அமைய உள்ளது.
மீதம் உள்ள தளங்கள் வணிக வளாகமாக பயன்படுத்தப்படும்.
கோட்டை ரயில் நிலையம், உயர் நீதிமன்ற மெட்ரோ, மாநகர பேருந்து ஆகிவற்றை ஒருங்கிணைந்து இது அமைய உள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்