For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கோவை டீச்சிங் நிறுவன மூடலும்,மாற்று பாதையும்!

01:48 PM Jan 28, 2025 IST | admin
கோவை டீச்சிங் நிறுவன மூடலும் மாற்று பாதையும்
Advertisement

கோவை கணபதியில் சடுதியில் மூடப்பட்ட ஃபோகஸ் எஜுமேடிக்ஸ் என்ற ஆன்லைன் டீச்சிங் நிறுவனத்தை , ஊடகங்கள் பெயர் குறிப்பிடாமல் ஐடி நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர்,நாக்கை பிடுங்குவது போல கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் இப்படி பம்முவது எதற்கு?உண்மை பேசுபவனுக்கு பயம் எதற்கு ?இந்த ஃபோகஸ் எஜுமேடிக்ஸ் நிறுவனம் கோவையில் மட்டும் சுமார் 500 ஊழியர்களுக்கு மேலாக வேலையை விட்டு நீக்கி உள்ளனர்,சென்னை தரமணியிலும் இந்த நிறுவனத்துக்கு கிளை உண்டு, சென்னையில் இந்த நிறுவனம் எத்தனை பேரை வேலையை விட்டு நீக்கியது என தெரியவில்லை.

Advertisement

முதுகலை படித்த பட்டதாரி மாணாக்கர்களை, கல்லூரிக்கு சென்று கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி , வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தேர்வு செய்து பணி ஆணை வழங்குகின்றனர் , அவர்களுக்கு வளர்ந்த நாடுகளின் பள்ளி பாடத்திட்டங்களுக்கு ஏற்ப 75 நாட்கள் பயிற்சி வழங்குகின்றனர், அதற்கு சம்பளம் தராமல், வளர்ந்த நாடுகளில் ஹோம் ட்யூஷன் என சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து , இந்த ஆசிரியர்களை விட்டு மாணாக்கருக்கு ஒரு மணி நேரம் டெமோ பாடம் எடுக்க வைத்து அந்த வெளிநாட்டு பெற்றோர் நம்பிக்கையை பெற்று கட்டணம் வாங்கிய பின் தினசரி ஆன்லைனில் அந்த டெமோ வழங்கிய ஆசிரியரை விட்டு பள்ளிக்காலம் முழுக்க பாடம் எடுக்க வைக்கின்றனர், பெறும் கட்டணத்தில் 75% நிறுவனம் எடுத்துக் கொண்டு, 25% மட்டும் முதுகலை ஆசிரியருக்கு சம்பளமாக வழங்குவது இவர்களின் நிறுவன பாணி.

Advertisement

கூகுள் மேப் ரெவ்யூவில் பல வருடங்களாக ஊழியர்கள் தமக்கு சம்பள பாக்கி உள்ளது, திடீரென ஒரு மணி நேரம் முன்பு கூட வேலையை விட்டு நீக்கி விட்டனர், தொழிலாளர் ஷேமநல நிதி தரவில்லை, அனுபவ சான்றிதழ் தரவில்லை,கேண்டீனில் உணவு படு கேவலமாக உள்ளது என புட்டு புட்டு வைத்துள்ளனர், எந்த ஒரு நிறுவனத்தில் சேரும் முன்பும் கல்லூரி , பள்ளியில் சேரும் முன்பும் அதன் கூகுள் மேப்பில் சென்று ரெவ்யூஸ் படித்தால் , என்னைப் போன்றோர் அங்கே நேரம் செலவு செய்து நேர்மையான ரெவ்யூ எழுதியிருப்பர், அதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கும் அதன் மூலம் அந்த நிறுவனத்தில் சேராமல் தப்பலாம் .

இந்த நிறுவனம் அல்லது நிறுவனர் என யாருமே தண்டனை அடைய மாட்டர்,பணம் பாதாளம் வரை பாயும்.இதன் முன்னால் மாட்டியவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் தானே இவர்கள் தண்டிக்கப்படுவர், இனியேனும் கல்லூரி முடித்து வெளியேறிய மாணாக்கர்கள் இது போல தனியார் கோச்சிங் நிறுவனம், தனியார் பள்ளி, கல்லூரிகளை இனம் கண்டு பணியில் சேராமல் இருங்கள். கடுமையாக உழைத்து போட்டித் தேர்வுகள் விண்ணப்பித்து எழுதி மத்திய மாநில அரசுப்பணிகளில்,ஆசிரியர் பணிகளில், ரயில்வே,விஏஓ, வங்கிப்பணிகளில் சேருங்கள், அப்பணிகளுக்கு மட்டுமே நல்ல சம்பளமுண்டு, வேலை உத்திரவாதம் உண்டு, ஒளிமயமான எதிர்காலமுண்டு, இந்த புற்றீசல் நிறுவனங்களில் உடனே சேர்ந்து உடனே வெளியேறுவதற்கு பதில் அரசு வேலைகளில் சேர ஒரு வருட காலம் தேர்வுக்கு பயிற்சி செய்து எழுதி தாமதமாக இலக்கை அடைந்து நிரந்தரமாக பெருமையுடனும் கம்பீரமாகவும் பணியாற்றலாம்.

ஒரு நிறுவனம் பணியாளரை வேலையை விட்டு அனுப்பினால் எப்படி கௌரவமாக அனுப்ப வேண்டும் என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தை பார்த்து படிக்க வேண்டும். சமீபத்தில் சாம்சங் இந்தியாவின் 30% ஆட்குறைப்பு கொள்கையால் பணியிழந்த ஒருவர் சொன்னது இது.இரண்டு மாதம் நோட்டீஸ் பீரியட், நோட்டீஸ் பீரியடில் வேலைக்கு வர வேண்டாம்,முழு சம்பளம் உண்டு என்ற சலுகை, தவிர பத்து மாத சம்பளம் இழப்பீடாக தந்தனராம், தவிர பத்து வருடங்கள் பிடித்து வந்த ஷேமநல நிதித் தொகை, அனைத்தும் சேர்ந்து 45 லட்சம் ரூபாய் கிடைக்கும் என வெளிப்படையாக பகிர்ந்தார், 45 வயதில் பணியிழந்தாலும் இந்த 45 லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அடுத்த நல்ல வேலை கிடைக்கும் வரை சமாளித்து விடுவேன் என நம்பிக்கை ஒளியுடன் பேசினார், எந்த நிறுவனம் என்றாலும் சாம்சங் இந்தியா நிறுவனத்தை கண்டு படியுங்கள்.

கீதப்பிரியன் கார்த்திகேயன்

Tags :
Advertisement