கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: முதல்வர் திறந்து வைத்தார்!
தமிழக தலைநகரான சென்னை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது இங்குள்ள போக்குவரத்து நெரிசல் தான். காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் அலுவலகம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் பொது போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்களில் செல்வதால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது.அதிலும் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசின் சார்பிலும்,காவல் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் .சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் சென்னை புறநகரில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்ட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பேருந்து நிலையத்துடன் கூடிய முனையம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.இதையடுத்து 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்தநிலையில் திறக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், பஸ் நிலையத்தின் முன்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் வெளியேற முடியாமல் தேங்கியது. இதையடுத்து மீண்டும் பஸ் நிலைய வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டது. 1,200 மீட்டர் தூரத்துக்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவதுமாக முடிந்தன. இதையடுத்து பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 840 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும். இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது 4 உணவகங்கள், 100 கடைகள், 12 இடங்களில் குடி நீர் வசதி, 520 கழிவறை வசதிகள் மற்றும் முதல் தளத்தில் 260 கார்கள், 568 பைக்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது..அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் – டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும், புறகாவல்நிலையம் நிரந்தரமாக அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்தான் இன்று முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து வைத்து பேட்டரி வாகனம் மூலமாக பஸ் நிலையத்தை சுற்றி பார்த்தார். அதை அடுத்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையமானது இன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்படவுள்ளது. எனவே மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல எதுவாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படவுள்ளது. இரவு நேரப் பேருந்துகளுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:
🚌தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் இதுவே. 88.52 ஏக்கரில் இப்புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
🚌உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது. பயண சீட்டு பெறுமிடம், பயணிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல கை வண்டிகள், மின் வாகனங்கள், தூய்மை இயந்திரங்கள், மின் தூக்கிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு உணர்வு தரையமைப்பு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
🚌இதுதவிர, பேருந்து முனையத்தில் 100 கடைகள், இரண்டு அடி தளங்களில் 2769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கான ஒப்பனை அறைகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
🚌தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனித்தனியாக 140 (100 40) ஓய்வறைகள், ஓட்டுநர்களுக்கு தனியாக 340 ஓய்வறைகள் (படுக்கை வசதியுடன்), ஏடிஎம் வசதி, வரைபட வசதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
🚌பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
🚌SETC, TNSTC, ஆம்னி பேருந்துகளுக்கு 16 நடைமேடைகளை கொண்ட 215 பேருந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
🚌கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.
🚌சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
🚌6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
🚌ஒரேநாளில் 2310 பேருந்துகளை இப்பேருந்து முனையத்தில் இருந்து இயக்க முடியும்.
🚌சுமார் 800க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
🚌அரசுப் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன.
🚌சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு MTC பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் மாநகர போக்குவரத்து கழக
முனையம் ஜி.எஸ்.டி சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
🚌பூங்காக்கள், நீர் வளங்கள், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, முக அடையாளம் காட்டும் கேமிராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🚌நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
🚌மாநிலத்தில் முதல்முறையாக 15 வருடத்துக்கு இப்பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பினை ஒரு தனி செயல்பாட்டாளரிடம் ஒப்பந்த வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்