காலநிலை மாற்றம் என்ற முரட்டுக்காளை!
காளையை கட்டுவது இருக்கட்டும்... கயிற்றைத் தேடி கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே என்பாா்கள். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இதுவரை அப்படிப்பட்டதாகத்தான் இருந்தன. காலநிலை மாற்றத்தின் விளைவுதான் இம்மாதத்தின் தொடக்கத்தில் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும். கடந்த வாரம் நெல்லைச் சீமை வெள்ளதில் மிதந்ததற்கும் இதுவே காரணம். இது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி 31 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போது தான் துபையில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் (சிஓபி 28) பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆம், காலநிலை மாற்றம் எனும் காளையை கட்ட கயிற்றை தேடிக் கண்டுபிடித்திருக்கிறாா்கள்.
ஐ.நா.வின் 28-ஆம் காலநிலை மாற்ற மாநாடு மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் துபையில் கடந்த நவம்பா் 30 தொடங்கி டிசம்பா் 13 வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். உலகின் 198 நாடுகளின் தலைவா்கள், பல்வேறு அமைபுகளின் பிரதிநிதிகள் என 85,000 போ் பங்கேற்றனா். பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் 1991-92 -இல் தொடங்கின. அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து 2015-இல் பாரீசில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில்தான் தொழிற்புரட்சி காலத்திற்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையின் உயா்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியஸுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீா்மானிக்கப்பட்டது. அதன்பின் எட்டுஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெப்பநிலை உயா்வு இப்போதே 1.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டி விட்ட நிலையில், ஆக்கபூா்வமாக எதையாவது செய்தாக வேண்டிய கட்டாயம் உலகிற்கு இருந்தது. அந்த நெருக்கடிதான் படிம எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுவதற்கு காரணம்.
இந்த முடிவின் அடிப்படையில், காா்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை, கடந்த 2019-இல் இருந்த அளவைவிட 43% 2030-ஆம் ஆண்டிலும், 60% 2035-ஆம் ஆண்டிலும் குறைக்க வேண்டும். அவ்வாறு குறைப்பதன் மூலம் 2050-ஆம் ஆண்டில் கரிம சமநிலையை எட்ட முடியும் என்பதுதான் இந்த முடிவை எடுப்பதற்கான நோக்கம் ஆகும்.
இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டுவிட்டன. அவற்றை எட்டுவது எளிதானதா? காளையை கட்ட கயிற்றை எடுத்திருக்கிறோம், அந்தக் காளையை அடக்கி, கயிற்றால் கட்டுவது எவ்வளவு கடினமானதோ அதைவிட கடினமானது மேற்கண்ட இலக்குகளை எட்டுவது.பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து வளா்ந்த நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளன. அந்த வாக்குறுதிகள் 100% நிறைவேற்றப்பட்டால் கூட, 2030-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 2019-இன் அளவைவிட, 2% மட்டுமே குறைவானதாக இருக்கும். ஆனால், நமது புதிய இலக்கோ 43%. இலக்கிற்கும் எதாா்த்தத்திற்குமான இடைவெளி, மலைக்கும் மடுவுக்கும் இடையிலான இடைவெளியாகவே இருக்கிறது. இதை இட்டு நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
இன்னொருபுறம், உலகின் எந்த நாடும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தயாராக இல்லை. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, உலக நாடுகள் பயன்படுத்தும் படிம எரிபொருட்களின் அளவு 2019-இல் இருந்ததைவிட, 2030-இல் 110% அளவுக்கும், 2050-இல் 350% அளவுக்கும் அதிகமாக இருக்கும். இப்படி, இலக்கும் எதாா்த்தமும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும்போது, எப்படி இலக்கை எட்ட முடியும்? இலக்கை எட்ட எத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன என்ற வினாவிற்கு, நடந்து முடிந்த துபை காலநிலை மாற்ற மாநாட்டுத் தீா்மானத்தில் விடை இல்லை. காலநிலை மாற்றம் என்ற பேரழிவில் இருந்து பூவுலகைக் காக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால், அனைத்து நாடுகளுமே உலக நலனை ஒதுக்கிவைத்துவிட்டு, தங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதால், இலக்கை எட்டுவது இயலாத ஒன்றாகவே தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக, படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டு தீா்மானத்தின் நோக்கம். ஆனால், அதை மாநாடு நடைபெற்ற வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய் வள நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்த நாடுகளை ஐ.நா. சபை கட்டாயப்படுத்தவும் இல்லை. மாறாக, அந்த நாடுகளை திருப்திபடுத்தும் வகையில், படிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் (ஃபாஸ் அவுட் ஃபாஸில் ஃப்யூல்ஸ்) என்ற வலிமையான வாசகத்தை நீா்த்துப்போகச் செய்து, படிம எரிபொருட்களின் பயன்பாட்டில் இருந்து மாறவேண்டும் (ட்ரான்ஸிட்யோனிங் அவே ஃப்ரம் ஃபாஸில் ஃப்யூல்ஸ் இன் எனா்ஜி சிஸ்டம்ஸ்) என்ற உறுதியற்ற வாசகம் தீா்மானத்தில் சோ்க்கப்பட்டிருக்கிறது.படிம எரிபொருட்களின் பயன்பாட்டை ஏதேனும் நாடுகள் குறைக்கவில்லை என்றால், அதற்காக அந்த நாடுகளை ஐ.நா. கண்டிக்க முடியாது என்பதுதான் இதற்குப் பொருள்.படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கைவிடும்போது, அதற்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை மும்மடங்காகவும், மின்சாரத்தின் பயன் திறனை இரு மடங்காகவும் 2030-ஆம் ஆண்டிற்குள் உயா்த்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஆண்டுக்கு ரூ.345 லட்சம் கோடி (4.3 லட்சம் கோடி டாலா்) வீதம் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.2,215 லட்சம் கோடி முதலீடு செய்தாக வேண்டும். அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதை ஐ.நா. அமைப்பு இதுவரை தெரிவிக்கவில்லை.அதேபோல், வெப்பநிலை உயா்வுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான இலக்குகளை நிா்ணயம் செய்தல், அதற்காக முதலீடு செய்தல் ஆகியவை குறித்து துபை காலநிலை மாற்றத் தீா்மானத்தில் துல்லியமான தகவல்கள் இல்லை. புவிவெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகளையும், சேதங்களையும் சமாளிக்க தனி நிதியம் (லாஸ் அண்டு டேமேஜ் ஃபண்ட்) ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஏழை நாடுகளின் கோரிக்கையை ஏற்று, தனி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதியத்திற்கு உலக நாடுகள் வழங்கவிருக்கும் தொகை ரூ.6,563 கோடி (79.2 கோடி டாலா்) மட்டுமே. இது புவிவெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகள், சேதங்களைத் தடுப்பதற்காக தேவைப்படும் நிதியில் 0.1% கூட இல்லை என்பது வேதனையான உண்மை.
ஆனாலும், இவற்றையெல்லாம் காரணம் காட்டி காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பெருகுவதை அனுமதிக்க முடியாது. கயிற்றை எடுத்த நாம் காளையை அடக்காமல் ஓய முடியாது. அவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஏற்படும் பேரழிவைத் தாங்க முடியாது. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சென்னை ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கி விட்டது. முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறை மட்டுமே சென்னையைத் தாக்கி வந்த வெள்ளம், இப்போது அடிக்கடி அழிவை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது.
2005-க்கு பிறகு இதுவரை நான்கு முறை பெருவெள்ளம் சென்னையைத் தாக்கியுள்ளனது. ஒவ்வொரு வெள்ளமும் அதற்கு முந்தைய வெள்ளத்தை விட பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
2015-ஆம் ஆண்டின் வெள்ளத்தை விட மோசமான வெள்ளத்தை இனி பாா்க்கவே முடியாது என்று பலரும் கூறி வந்த நிலையில், அதை விட பயங்கரமான வெள்ளத்தை இம்மாதத் தொடக்கத்தில் சென்னை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறது. சென்னை வெள்ளத்தால் அனைத்துத் துறையினருக்கும் ஏற்பட்ட இழப்பின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொருபுறம் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான மழையை எதிா்கொண்டு வருகின்றன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ அளவுக்கும், இருநாட்களில் 116 செ.மீ அளவுக்கும் மழை கொட்டித் தீா்த்திருக்கிறது. இது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பெய்யாத மழை ஆகும். பாதுகாப்பான பகுதிகள் என்று கருதப்படும் விமான நிலையம், தொடா்வண்டி நிலையம், பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவையே வெள்ளத்தில் மிதந்ததை பாா்க்க முடிந்தது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் தென்மாவட்டங்களில் மழை சேதத்தை ஏற்படுவது கடந்த கால வரலாற்றில் நடக்காதது.
இனிவரும் காலங்களில் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இத்தகைய பெருமழை கொட்டும். அதுமட்டுமின்றி, புவிவெப்பமயமாதலால் பெருமழை இனி தொடா்கதையாகும்; சில மாதங்களின் மழை ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா். இவற்றைத் தடுக்க உள்ளூா் அளவிலிருந்து உலக அளவு வரை ஆக்கபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு, ‘2040-ஆம் ஆண்டுக்குள் கரிமச்சுழிம நிலையை (நெட் ஜீரோ) அடைவோம்’ என்ற முதலமைச்சரின் அறிவிப்பு செயலாக்கம் பெறவேண்டும். அனைத்து அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊரக உள்ளாட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டங்களிலும் காா்ப்பரேட் தனியாா் நிறுவனங்கள், பொது அமைப்புகள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிலும் காலநிலை மாற்ற செயல்திட்டத்தை (ஆக்ஷன் ப்ளான் ஃபாா் க்ளைமேட் சேஞ்ச்) உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதற்காக ஒவ்வொரு நிலையிலும் போா்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் துணைநிற்க வேண்டும்.துபை காலநிலை மாற்ற மாநாட்டுத் தீா்மானம் என்ற கயிற்றை எடுத்து விட்டோம்; காலநிலை மாற்றம் என்ற முரட்டுக்காளையை அடக்கியே தீருவோம்!