குடியுரிமைத் திருத்தச் சட்டம் ! -வெறுப்பு அரசியலின் குழந்தை.!!
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில் ஒன்றான கோல்புரா மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதிக்கரையில் தேயிலைத் தோட்டங்களைக் கடந்த மரப்பாலம் ஒன்றைத் தாண்டி அமைந்த மாட்டியா என்ற சிறு நகரில், 10 அடி கோட்டைச் சுவர்களின் நடுவே 46 கோடி பொருள் செலவில் கட்டப்பட்டத் தடுப்பு முகாம் 3000 மனிதர்களைத் - ஆண்கள், பெண்கள் என்று - தனித்தனியாக அடைக்கும் வசதி கொண்டது. அதுவே குடியுரிமையற்றவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரியத் தடுப்பு முகாம் . அந்தத் தடுப்பு முகாம் உள்ளே பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்து இருக்கும். இந்த முகாமுக்குள் அடைக்கப்படும் மனிதர்களில் சிலர் முகாமுக்குள்ளேயே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முலாக 68 பேர்கள் அந்த முகாமில் அடைக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 45, பெண்கள் 21 மற்றும் குழந்தைகள் இரண்டு பேர்கள் . முகாம்களில் செலவழிக்கப் போகும் இது போன்றவர்களின் எண்ணிக்கை இனி கூடிக்கொண்டே போகும் . தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாத இந்தியர்கள் எல்லோரும் மாட்டியா முகாம் போன்ற ஆயிரக் கணக்கான முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். 2019 ஆம் ஆண்டு இறுதியில் அஸ்ஸாமில் மட்டும் 19 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர். அங்கு மட்டுமே 633 முகாம்கள் குறைந்தது தேவைப்படும். அஸ்ஸாம் முகாம்களுக்கான பொருட் செலவு முப்பதாயிரம் கோடி செலவு ஒரு புறமிருக்க, தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு இரண்டிலும் விடுபட்டுப் போன இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வெளி நாட்டினர் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான தீர்ப்பாயங்களில் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கொகாய் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அமர்வின் 2013ஆம் ஆண்டு தீர்ப்பின்படி அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் அஸ்ஸாமில் வசிக்கும் இந்தியக் குடிமக்களைக் கணக்கெடுத்தபோது 19 லட்சம் பேர் குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெற இயலவில்லை. அவர்களில் வங்காள மொழி மற்றும் இந்தி பேசும் 12 லட்சம் பேர் இந்துக்கள். அவர்கள் தீர்ப்பாயங்களில் தங்கள் உரிமையை நிரூபிக்காவிட்டால் முகாம்களில் அடைக்கப்பட இருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் 2019 ஆம் ஆண்டுக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பலன்கள் ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 31.12.2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் , சமணர்கள், பௌத்தர்கள், ஆகியோருக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். ஏறத்தாழ எட்டு லட்சம் இந்துக்களும், ஏழு லட்சம் இஸ்லாமியரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தவறினால் முகாம்களில் அடைக்கப்படுவர்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை உள்நாட்டுப் போரால் இந்தியாவிற்குள் நுழைந்தனர். கிட்டத்தட்ட 132 முகாம்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து எவ்விதக் குடியுரிமையும் இல்லாமல், சுகாதார வசதிகள் ஏதும் இல்லாத முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவற்றில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு முகாம் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. அதே முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் போன்று அதே எண்ணிக்கையில் முகாமுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மத்தியப் பதிவேடு ஆகியவற்றின்படி அவ்வாறான குடியுரிமையற்ற தமிழ் அகதிகள் எனக் கண்டறியப்பட்டால் அவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கக்கூடிய சூழல் உருவாகும். ஏனென்றால் கனடாவைப் போன்று அகதிகளுக்கு என்று எவ்விதச் சட்டமும் இந்தியாவில் இல்லை. இலங்கைத் தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 35 முதல் 40 வருடங்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்த போதிலும் அவர்களுடைய குழந்தைகள் இங்கு பிறந்தபோதும் அவர்கள் குடியுரிமையற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். தமிழகத்திலே பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான சூழலும் இலங்கையில் இல்லை. அஸ்ஸாமில் வங்காளியர் மீதான வெறுப்பு அரசியல் போல் அல்லாமல் தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களை வெறுக்கும் நச்சுச் சூழல் இல்லை.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் இந்துக்களுக்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால் குடியுரிமை வழங்கப்படும்போது அதே பலன்கள் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என்ற நியாயமான கேள்விக்கு மத்திய அரசிடம் எந்த உண்மையான பதிலும் இல்லை. மாறாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து லட்சம் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அனைவரும் இருநூறு வருடங்களுக்கு முன்பாக இலங்கைக்குத் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்யப் போன இந்தியத் தமிழர்கள் ஆவர். 1966 ஆம் ஆண்டிலிருந்து 1984 வரை சிரிமாவோ - சாஸ்திரி 1964 ஒப்பந்தத்தின் மூலமும் 1974 இந்திரா காந்தி - பண்டார நாயக ஒப்பந்தப்படியும் இந்தியாவிற்குள் மண்டபம் முகாம்கள் வழியாகத் தாயகம் திரும்பியோர். (Repatriates ) அவர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் (Refugeees) வேறுபாடு உள்ளது. ஆனால் தாயகம் திரும்பிய குடியுரிமை பெற்றவர்களுக்கும் 1983 ஆம் ஆண்டு இனப்படுக்கொலையில் அகதிகளாக நுழைந்த இந்துக்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைக் கூட மத்திய உள்துறை அமைச்சர் அறியாமல் ஐந்து லட்சம் தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியதாகக் கூறுகிறார்.
1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டப்படி ஒருவர் பிறப்பாலோ, அதாவது 26.01.1950 ஆம்ஆண்டுக்கு பின்னரோ அல்லது 01.07.1987ஆம் ஆண்டுக்கு முன்னரோ பிறந்தவராக இருந்தாலோ அல்லது அவரது பெற்றோர்கள் இந்தியக் குடியுரிமை உள்ளவர்களாக இருந்திருந்தாலோ அல்லது பெற்றோரில் ஒருவர் குடியுரிமை பெற்றவராகவோ மற்றவர்கள் சட்ட விரோதக் குடியேறியாக இல்லாமல் இருந்திருந்தலோ அல்லது மரபு வழியிலோ அல்லது பதிவின் மூலமாகவோ அல்லது இயல்பான வாழ்க்கை மூலமாகவோ குடியுரிமை பெற இயலும். 1985ஆம் ஆண்டு அஸ்லாம் ஒப்பந்தம் என்ற ஒப்பந்தம் மைய அரசுக்கும் அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் இயக்கத்திற்கும் இடையே நிறைவேறியது. போராட்டக்காரர்களின் முழக்கம் 1966 - 1971ஆம் ஆண்டு வரை நடந்த வங்கதேசப் போரின்போது இந்தியாவிற்குள், குறிப்பாக அஸ்ஸாமிற்குள் வட கிழக்கு மாநிலங்களுக்குள்ளும் ஏராளமான வெளிநாட்டினர் குடியேறியதாகவும் அந்தச் சட்ட விரோதக் குடியேறிகளை மறுபடியும் அவர்களது சொந்த நாட்டிற்குள் திரும்ப அனுப்புவதாகவும் இருந்தது. அவ்வாறு சட்ட விரோதமாகக் குடியேறிவர்களில் கணக்கெடுத்து அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பவோ அல்லது வாக்குரிமையை இழக்கச் செய்ய வேண்டி நடந்த போராட்டத்தின் விளைவாக அஸ்ஸாம் ஒப்பந்தம் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்திக்கும், அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்களின் குறிப்பாக அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையே 15.08.1985 புதுடெல்லியில் வைத்து அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1979 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த வன்முறைக் கிளர்ச்சியாளர்களின் போராட்டங்கள் அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் படி முடிவுக்கு வந்தன. அவ்வாறு அஸ்ஸாமுக்குள் வந்தவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள். அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்கள் 01.01.1966ஆம் ஆண்டுக்கு முன்பு அஸ்ஸாமில் குடியேறிய வங்க தேசத்தினரை ஏற்றுக் கொள்வது எனவும், 01.01.1966-லிருந்து 25.03.1971 ஆம் ஆண்டு வரை குடியேறிய வங்க தேசத்தினரை வாக்குரிமை இல்லாமல் ஏற்றுக் கொள்வது எனவும், 25.03.1971க்குப் பிறகு குடியேறிய வங்க தேசத்தவரை மறுபடியும் நாடு கடத்துவது எனவும் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டனர்.
அவ்வாறாகக் குடியுரிமைச் சட்டம் 1955ல் உரிய திருத்தங்கள் 07.12.1985 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகும் குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள் 07.01.2004-ல் மேற்கொள்ளப்பட்டன. அத்திருத்தம் 03.12.2004-லிருந்து நடைமுறைக்கு வந்தது. அத்திருத்தத்திலிருந்து 01.01.1966 அஸ்ஸாமுக்குள் வந்த இந்தியப் பூர்வ குடிகள் (இந்தியப் பூர்வீகக் குடி என்பது பிரிவினையற்ற இந்தியப் பெற்றோர்களில் ஒருவர் பிறந்திருந்தால் போதும்) தொடர்ச்சியாக அஸ்ஸாமில் வாழ்ந்து வந்தார்கள் எனில் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள் எனவும், 01.01.1966-லிருந்து 25.03.1971 வரை அஸ்ஸாமிற்குள் நுழைந்த இந்தியப் பூர்வீகம் கொண்ட மக்கள் குடியுரிமைச் சட்ட விதிகளின்படி பதிவு செய்து கொண்டு தொடர்ச்சியாக அஸ்ஸாமில் வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுடைய பெயர் சட்ட மன்ற, பாராளுமன்ற வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் ஒருவேளை அவ்வாறு பதியப்படும் நபர் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் சட்டம் 1964 இன்படி வெளிநாட்டினர் எனக் கண்டறியப்படும் போது அவருக்கு 8 வருடத் தடுப்புக் காவல் வழங்க இயலும் எனவும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2003ன்படி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்படுத்தப்பட்ட சட்ட விரோதக் குடியேறிகள் (தீர்மானிக்கும் தீர்ப்பாயம்) சட்டம் 2005 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. அஸ்ஸாமிய மொழி பேசாத, வங்க மொழி பேசத் தெரிந்த குடியேறிகள் அனைவரையும் திரும்பி அனுப்புவதே அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்களின் நோக்கமாகக் கொண்டிருந்தன. அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்கள் வங்காள மொழி பேசும் இந்து - இஸ்லாமியர் இருவரையுமே வெளியேற்ற வேண்டுமெனக் கூறினர். அங்கு இந்து இஸ்லாமியர் பாகுபாடு இல்லை. ஆனால் குடியேறிய இந்துக்கள் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளனர் . தேசியக் குடியுரிமைப் பதிவேடு இந்தியாவில் அஸ்ஸாமில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. அக்குடியுரிமைப் பதிவேடு 2013ஆம் ஆண்டு அஸ்ஸாமை சேர்ந்த ரஞ்சன் கொகாய் உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அமர்வு உத்தரவின்படி அஸ்ஸாமில் உள்ள மூன்று கோடி 30 லட்சம் பேர் தாங்கள் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
31.08.2019 அன்று 19 லட்சம் அஸ்ஸாம் வாசிகள் இந்தியக் குடிமக்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்கள் சொன்ன 50 லட்சம் சட்ட விரோதக் குடியேறிகள் எண்ணுக்கு இது குறைவானது ஆகும். 24.12.1971ஆம் ஆண்டுக்குப் பிறகு அஸ்ஸாமிற்குள் குடியேறியவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதப்பட்டனர். இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் நான்கு இலட்சம் இந்துக்களும் அடங்குவர். ஏறத்தாழ 5.45 லட்சம் இந்து, வங்காள மொழி பேசும் அஸ்ஸாம் குடியேறி வாசிகள் கண்டறியப்பட்டனர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கூற்றுப்படி அஸ்ஸாமில் 5.42 லட்சம் இந்து - வங்க தேசத்தினர் குடியுரிமை பெறுவர். கிட்டத்தட்ட 40 லட்சம் பேர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவர், அவர்களில் 28 லட்சம் வங்க தேச இந்துக்களும் 10 லட்சம் வங்க தேசத்து இஸ்லாமியரும் அடங்குவர். அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்குக் கிளர்ச்சி செய்த அஸ்ஸாம் மக்கள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அகில் ஓகாய் மற்றும் சமுச்சல் பட்டாச்சாரி ஆகியோர் 70 லட்சம் முதல் ஒரு கோடி இந்து வங்காளிகள் அஸ்ஸாமில் இருப்பதாக மதிப்பீடு செய்கின்றனர். மேற்சொன்ன இந்து - வங்காளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டு வங்கியாக உள்ளனர்.
இந்தியாவில் 12.12.2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் குடியமர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த, சமணர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்குகிறது. அவர்கள் 31.12.2019 முன்பாக மதத் தாக்குதல் காரணமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்றால் அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகாரம் செய்ய வழிவகை செய்கிறது. 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டம் பழைய பர்மா அல்லது மியன்மாரிலிருந்து புத்த மதத் தாக்குதலுக்கு உள்ளான வந்த இஸ்லாமியர், ஸ்ரீலங்காவில் புத்த மதத்தினரால் வன்கொடுமைக்கு உள்ளான இந்துக்கள் அல்லது சீன இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட திபெத் புத்த மதத்தினர் ஆகியோரைக் கணக்கில் கொள்ளாதது தமிழர்களை இன ரீதியாகவும் இஸ்லாமியர்களை மத ரீதியாகவும், புத்த மதத்தினரை ஒரு சில நாடுகளுக்கு மட்டும் தனிமைப் படுத்தியும் கூறுவது தர்க்க முரணாக உள்ளது.
மேலும் 2003 குடிமக்கள் பதிவேடு மற்றும் அடையாள அட்டை வழங்கல் விதிகள் படி இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும், குடிமக்கள் பதிவேட்டில் பதிவுக்குள்ளாகி அடையாள அட்டை பெற வேண்டும்.; அவ்வாறு யாரேனும் விடுபட்டு; இருந்தால் அவர்கள் பதிவாளர் தலைவரிடம் மேல் முறையீடோ அல்லது வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் இரண்டாவது மேல் முறையீடு செய்ய முடியும். ஒருவேளை அவ்வாறு கண்டறியப்பட்ட வெளி நாட்டினர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எனக் கருதப்படுகிறார்களோ அந்த நாட்டுக்கு வெளியேற்றப்படுவார்கள் அவ்வாறு தவறான தகவல்களைக் குடியுரிமைக்காகக் கொடுப்பது ஐந்து வருட காலத் தண்டனைக்குரியது குற்றம். அவ்வாறு வெளிநாட்டிற்கு அனுப்புவது வரையில் அவர்கள் தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்படுவர் என 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் வழிவகை செய்கிறது.
பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரெயில்வே, பெட்ரோலிய நிறுவனங்கள், எல்.ஐ.சி, ஏர்போர்ட்கள், துறைமுகங்கள், காடுகள் ஆகியவற்றைத் தனியார் மயமாக்குதல் அல்லது விற்பனை செய்யும் சூழ்நிலை இருக்கும் இந்தியாவில் ஆயிரக் கணக்கான தீர்ப்பாயங்களும் ஆயிரக் கணக்கான கோடி பொருட்செலவிலும் தடுப்பு முகாம்கள் அஸ்லாமிற்குள் மட்டுமே தேவைப்படுகின்றன. யார் கண்டது ஏர் போர்ட்கள் தனியார் மயமானது போலவே தடுப்பு முகாம்களும் அதானி மயமாகலாம். மற்ற மாநிலங்களிலும் இத்தீர்ப்பாயங்கள் அமைய இருக்கின்றன. அஸ்ஸாம் மாநில கோல்பாரா மாவட்டத்தில் மாட்டியா முகாம் 30000 குடியுரிமை அற்றவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க 46 கோடி செலவில் பள்ளி மருத்துவமனை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஹிட்லரின் நாசி வதை முகாம்களை நினைவூட்டும். இந்த முகாம்கள் நாடெங்கிலும் கட்டப்பட இருக்கின்றன. இதனால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேடு இந்தியர்கள் அனைவரையும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து தாக்கும்.
எனவே அரசியலமைப்புச் சட்டத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உறுப்பு 14 லில் சொல்லப்பட்ட சம உரிமைக் கோட்பாட்டுக்கு எதிரான, 15இல் சொல்லப்பட்ட மத ரீதியான பாகுபாடு கூடாது என்ற உரிமைக்கு முரணான இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை விதிகள் ஆகியனவற்றை இரத்து செய்வதன் மூலமாக மட்டுமே ஒருங்கிணைந்த இந்தியாவைக் காப்பாற்ற இயலும். குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின்படி தேசியக் குடிமக்கள் மற்றும் தேசியக் குடியுரிமை மக்கள் கணக்கெடுப்புப் பதிவேடுகளில் யாரேனும் விடுபட்டால், வெளி நாட்டினர் சட்டம் (Foreigners Act ) 1946ன் படி அவர் வெளிநாட்டினைச் சார்ந்தவரா இல்லையா என நிரூபிக்கும் பொறுப்பு வெளி நாட்டினர் என்று கருதப்படும் நபரைச் சாரும்.
வெளி நாட்டினர் சட்டத்தினை மீறும் ஒருவரை ஐந்து வருடம் சிறையில் அடைக்க இயலும். மேலும் ஒருவேளை அந்நபர் இந்தியாவில் உள்ள தடை செய்யப்பட்ட (லடாக், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம் போன்ற) பகுதிகளில் நுழையவோ அல்லது வசிக்கவோ செய்ததால் குறைந்தது இரண்டு வருடச் சிறைத் தண்டனையில் இருந்து அதிகபட்சம் எட்டு வருடங்கள் வரை வழங்கப்படலாம். வெளி நாட்டினர் சட்டத்தின் கீழ் வெளி நாட்டினர் தீர்ப்பாயங்கள் தொடர்பாக 30.05.2019 ஆம் ஆண்டு அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு திருத்துதல் உத்தரவு ஒன்று வெளியிட்டது. அவ்வுத்தரவின்படி தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் சேர்க்கப்படாத ஒரு நபர் வெளி நாட்டினர் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். அத்தீர்ப்பாயத்தில் குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்ய இயலாத நபர் வழக்கறிஞர் மூலமாக மேல் முறையீடு செய்யும்போது மாவட்ட நடுவரான மாவட்ட ஆட்சியாளர் தரப்பில் அரசு வழக்கறிஞர் வழக்கை நடத்துவார். அத்தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் கருத்துரை வழக்கிற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்த 120 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒருவேளை தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின்படி பதிவில் இடம் பெற முடியாத ஒருவர் மேல் முறையீடு வழக்குத் தொடர விரும்பாமலோ அல்லது முடியாமலோ இருந்தால் மாவட்ட நடுவர் மேல் முறையீடு செய்ய இயலாதவருக்காக 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யக் கடமைப்பட்டவர் ஆவார்.
அஸ்ஸாமைப் பொறுத்த வரையில் அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைந்த சட்ட விரோதக் குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பான 1950 ஆம் வருடச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைந்த சட்ட விரோதக் குடியேறிகளை இந்தியாவிலிருந்து வெளியேற்ற அதிகாரம் உள்ளது. அச்சட்டத்தின் கீழ் மூன்று வருடம் வரை சிறைத்தண்டனை வழங்க இயலும். சர்பனாந்தா சோனாவால் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2005) 5 SCC 665 என்ற வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைந்த சட்ட விரோதக் குடியேறிகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட சட்ட விரோதக் குடியேறிகள் தீர்மானிக்கும் தீர்ப்பாயச் சட்டம் 1983, உச்ச நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அத்தீர்ப்பில் இந்தியா முழுவதிலும் 10.83 மில்லியன் அல்லது 1 கோடியே 8 லட்சம் சட்ட விரோதக் குடியேறிகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் சட்ட விரோதக் குடியேறிகள் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது தவிர மேற்கு வங்கத்தில் 54 லட்சம் பேர்கள் அவ்வாறு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் சர்பனாந்தா சோனாவால் வழக்கின் தீர்ப்பில் சட்ட விரோதக் குடியேறிகளை வெளி நாட்டினர் தீர்ப்பாயம் மூலம் அவ்வழக்குகளைக் கையாள வேண்டும் எனவும் 1983ஆம் ஆண்டு சட்ட விரோதக் குடியுரிமை தீர்மானிக்கும் தீர்ப்பாயம் சட்டம் செல்லாது எனவும் அறிவித்தது. 2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பெற்றோர் நலம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தில் பிரிவு 19தின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசால் நடத்தப்படும் ஒரு முதியோர் விடுதி இயங்க வேண்டும். அவ்விடுதி மருத்துவ வசதி கொண்டதாகவும் முதியோர்களுக்கான மருந்துகள், கவனிப்பு உதவி ஆகியவற்றைக் கொண்டதாகவும் குறைந்தது 150 மூத்த குடிமக்கள் வசிக்கும் வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்று வரை ஒரு விடுதி கூட 2007ஆம் ஆண்டு சட்டப்படி அமைக்கப் படவில்லை. நிதி நிலையைக் காரணம் காட்டி அது மறுக்கப்படுகிறது.
இது போன்றே ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டம் என்ற சிறார்கள் நீதிச் சட்டம் 2015ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்கம் சிறார்களுக்கான விடுதிகள் பிரிவு 50ன் கீழ் அவ்விடுதிகள் சிறார்களுக்குக் கல்விப் பயிற்சி மறு வாழ்வுக்கான பயிற்சி செய்யப்பட வேண்டும். ஆனால் சட்டக் கடமைகளை நிதி நிலையைக் காட்டி செய்ய மறுக்கும் அரசுகள் இன்று சாமானிய மக்களைக் குடியுரிமைப் பதிவேற்றத்திற்காக நீதி மன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் வாசலில் காத்திருக்கச் செய்வதுடன் அவர்களைத் தடுப்புக்காவலில் வைக்க ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவழிக்கத் தயாராக இருப்பது மிகப் பெரிய நகை முரண்.
பாஜக வின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் மாநிலங்களின் உரிமைகளைத் தரையில் போட்டு மிதித்து மாநிலங்களின் உரிமைகள் மீது காறி உமிழ்கின்றது. சிஏஏ விவகாரத்தில் அஸ்ஸாமும் தமிழ்நாடும் ஒன்றல்ல, மேற்கு வங்கமும் கேரளாவும் ஒன்றல்ல, அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும் உள்ள வங்காள தேசக் குடியேறிகளை அங்கிருந்து அகலுமாறு அம்மாநில மக்கள் கூறுகிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள தமிழ் பேசும் இலங்கைத் தமிழ்க் குடியேறிகள் அங்கு நடந்த உள்நாட்டுப் போரின் விளைவாக இந்தியா வந்தவர்கள். இலங்கையில் இனச் சிக்கல்களைக் கிளறி ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சியளித்துப் படைக்கலன்களை வழங்கிய இந்தியாவுக்கு 1983 - 2009 காலகட்டத்தில் இந்தியாவில் குடியேறிய இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் தார்மீகக் கடமை இந்தியாவுக்கு உண்டு.
தமிழ் நாட்டில் அவ்வாறு குடியமர்ந்த இரண்டு இலட்சம் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமா எனப் பொது வாக்கெடுப்பு நடத்தினால் தமிழ்நாட்டு மக்கள் 97 விழுக்காடு ஆம் என்றே கூறுவார்கள். ஆனால் அஸ்ஸாமில் வங்காளக் குடியேறிகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலே அரசியலாக இருக்கிறது. அங்கு பாமரர் முதல் படித்தவர் வரை வன்முறை அரசியலின் முதுகெலும்பாக உள்ளனர்.
பாபர் மசூதி தீர்ப்பைச் சுமக்கும் ஐந்து நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாயின் வாழ்க்கை வரலாற்று நூல் முழுக்க அகதிகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பு அரசியலைக் காண முடியும். அகதிகள் தொடர்பான சர்வதேசச் சட்டங்கள் நமது மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவது போன்றே உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவருக்கும் ஏற்படுத்துவது தமிழ் நாட்டை ஆச்சரியப்படுத்தும். 13.03.2023 ஆம் நாள் ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி மற்றும் கலைமதி நாகர் கோவிலில் ஏற்பாடு செய்த கூகிள் கூட்டமொன்றில் தமிழ்நாடு அரசின் சட்டமன்றத் தீர்மானப்படி மைய அரசின் சட்டத்தைத் தமிழ்நாடு அரசால் நிறுத்த முடியுமா என வினவப்பட்டது . சீப்பை ஒளித்துக் கல்யாணத்தை நிறுத்த முடியாது என பதில் கூறியிருக்கலாம். ஆனால் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டு விதிகள், அடையாள அட்டை விதிகள் , வெளி நாட்டினர் சட்டம், முகாம்கள் என அனைத்துச் சட்டங்களிலும் மாநில அரசின் மாவட்ட ஆட்சியாளர்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை மத்திய அரசுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இச்சட்டங்களை நிறைவேற்ற முடியும். எனவே மாநில அரசு இச்சட்டத்திற்குச் சட்ட ரீதியான முட்டுக் கட்டைகளைப் போட முடியும்.
எனவே சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்த முடியும். சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள்தொகை 88 இலட்சங்கள். அங்கு இந்தியாவின் மாநிலங்களையொத்த ஜூரிக், பெர்ன், லுசர்ன் என 26 கேன்டன்கள் உண்டு. பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி பேசும் 26 கேன்டன்களுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையுண்டு. அது போன்று இந்தியாவில் குடியுரிமைச் சிக்கல்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி தன்மை கொண்டவை. அதுபோன்று குடியுரிமை வழங்கும் உரிமைக்காக மாநிலங்களும் இணைந்து போராட வேண்டியது அவசியம். அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டால் போதும். இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடர் வெறும் வெற்றுக்கூச்சல் அல்ல.
பாபர் மசூதி தீர்ப்பிற்குப் பிறகும் இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லலாம் என ஆலோசிப்பதற்குப் பதிலாக சிங்கத்தின் குகைக்குள் ஆட்டைக் கட்டிப்போட்டு அதை சிங்கம் பாதுகாக்கும் என நம்பலாம். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கும் அதிமுகவின் முதுகெலும்பற்ற அரசியலுக்கும் பிறந்த குழந்தையான குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ் பேசும் தமிழ்நாட்டு இலங்கை இந்து அகதிகளைக் கேட்பாரற்ற அனாதைகளாக்குகிறது. ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பௌத்தர் எல்லோரையும் கொம்புள்ள குதிரைகளாக்கி உலகின் இரண்டாவது முஸ்லிம் மக்கள் திரளைக் கொண்ட இந்திய முஸ்லிம்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குகிறது. மக்கள் திரள் போராட்டம் ஒன்றே இச்சட்டத்தைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் வழி.!
தி.லஜபதிராய்
கொடைக்கானல்
படங்கள்:
அஸ்ஸாம் மாநில மாட்டியா தடுப்பு முகாம்.