தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள்! - வியக்க வைக்கும் கேமராமேன் தமிழ் ஏ அழகன்!

08:24 PM Jan 30, 2024 IST | admin
Advertisement

யக்குநர் பா.இரஞ்சித் பட்டறையைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் , இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவை மக்களும், ஊடகங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு கதையின் முக்கிய பகுதியாக வந்தாலும், அக்காலக்கட்டத்தில் அம்மக்கள் விளையாடிய தொழில்முறை அற்ற கிரிக்கெட்டை காட்சிப்படுத்திய விதம், அதே சமயம் இரண்டாம் பாதியில் தொழில்முறை கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்திய விதம் என அனைத்தையும் மிக சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

Advertisement

அரக்கோணத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் கதை 1990-களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கதையையும், அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களையும் மிக சரியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதைக்களத்துடன் பயணிக்கும் உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் வகையில் ஒளிப்பதிவு அமைந்திருப்பதாக, ஊடகங்கள் குறிப்பிட்டு எழுதி பாராட்டியிருப்பதால் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் ஒளிப்பதிவு என்பது மிக சாதாரணமானதாக அல்லாமல் மிகப்பெரிய சவலாக இருந்ததாக நம்மிடம் தெரிவித்த ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன், அப்படத்தில் பணியாற்றியது மற்றும் ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்துக்கொண்டது இதோ,

”மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பேருந்து, அதில் இருக்கும் பயணிகளின் திக்...திக்...நிமிடங்களை ’O2’ படத்தில் காட்சிப்படுத்திய போது எனக்கு சவாலாக இருந்தது. ஆனால், ‘ப்ளூ ஸ்டார்’ படம் அதை விட சவால் நிறைந்ததாக இருந்தது. காரணம், ’O2’ படத்தில் லைட்டிங் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் அனைத்துமே ஓப்பன் லைட்டிங் என்பதால் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. படத்தில் வெயில் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அந்த வெயிலை அனைத்து காட்சிகளிலும் கொண்டு வருவது சவலாக இருந்தது. முழு படமும் மூவ்மெண்ட்ல தான் இருக்கும். கேமராவை நான் கையில் வைத்துக்கொண்டு தான் காட்சிகளை படமாக்கினேன்.

இயக்குநர் ஜெயக்குமாரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் வாழ்ந்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சம்பவங்கள், அப்பகுதி இளைஞர்களின் காதல் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போன்றவற்றை மையமாக கொண்டு தான் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அதனால், ஒரு வாழ்வியலை சொல்லும் படமாக இருப்பதால், படம் பார்ப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே படம் மக்களிடம் சென்றடையும் என்பதால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.

படத்தில் கிரிக்கெட் போட்டி மிக முக்கியமானதாக இருக்கும். அதிலும், தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டு போட்டி அல்லாமல், அரக்கோண பகுதியில் அந்த இளைஞர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுவார்கள், ஆனால் அவர்களுடைய போட்டி தொழில்முறை கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்தவையாக இருக்காது. மிக சாதாரணமாக இருக்கும், அதை சரியான முறையில் காட்சிப்படுத்த வேண்டும். படத்தின் முதல் பாதி முழுவதும் அப்படிப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் தான் இடம்பெறும். இரண்டாம் பாதியில் தான் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும், அந்தக் காட்சிகளை பாண்டிச்சேரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தினோம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும், போட்டிகளில் இருக்கும் நுணுக்கங்கள் அவற்றுக்கு ஏற்றது போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறோம்.

இது ஒரு பீரியட் படம், 1990-களில் நடக்கும் கதை. 25 வருடங்களுக்கு பின்னால் செல்வதால், அந்த காலக்கட்டத்திற்கான விசயங்களை எடுத்து வந்திருக்கோம். அந்த காலக்கட்டத்தில், அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடியவர்கள் மட்டும் அல்ல, அதுபோல் இருக்கும் பல ஊர்களில் அப்போது கிரிக்கெட் விளையாடியவர்கள் தங்களை படத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம், இவை அனைத்தும் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்பது தான். ஆனால், அப்படி ஒரு வாழ்க்கையை நான் பார்த்ததில்லை, இருந்தாலும் அதை உணர்ந்து படமாக்கினால் மட்டுமே அது சரியான முறையில் ரசிகர்களிடம் சென்றடையும். அப்படிப்பட்ட விசயங்கள் எனக்கு சவலாக இருந்தது. இப்போது படம் பார்த்து அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் ஜெயக்குமார் உதவி இயக்குநராக பணியாற்றிய போது அப்படங்களின் ஆர்ட் டிபார்ட்மெண்ட் கவனித்து வந்ததால், இந்த படத்தில் அவர் அதை சரியாக செய்திருக்கிறார். அது எனக்கும் பெரிய துணையாக இருந்தது. பிரீயட் படம் என்பதால், டவர், நவீன வாகனங்கள் என இப்போதைய விசயங்கள் அனைத்தையும் தவிர்ப்பதோடு, அப்போதைய காலக்கட்டத்தில் பயன்படுத்தியவற்றை பயன்படுத்தியது, உடை போன்ற விசயங்களை சரியாக கொண்டு வர முடிந்தது.

அரக்கோணம் வெயில் அதிகம் தெரியும் பகுதி என்றாலும், அது தான் அந்த பகுதிக்கு அழகு. அங்கிருக்கும் வெயில் மற்ற பகுதிகளில் இருப்பது போல் இருக்காது, சிவப்பு வண்ணம் கலந்த வெயிலாக இருக்கும். காரணம், அங்கு செங்கல் சூளை அதிகம். அந்த தூசு எப்போதும் அங்கே பரவிக்கொண்டே இருக்கும். அதனால், அப்பகுதி மைதானங்களில் மட்டும் அல்ல, அந்த வெயிலில் விளையாடுபவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் முகத்திலும் அந்த வண்ணம் தெரியும், அதை இதில் சரியான முறையில் நான் கொண்டு வந்திருக்கிறேன். இதுபோன்ற சாயல் பிலிம் கேமராவின் மூலமாக தான் கொண்டு வர முடியும். ஆனால், டிஜிட்டல் கேமராவில் இப்படி ஒரு சாயலை கொண்டு வருவது என்பது சவாலான விசயம் என்றாலும், அதை சரியான முறையில் செய்திருக்கிறேன், என்று அனைவரும் குறிப்பிட்டு பாராட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தில் கிரிக்கெட் மிக முக்கியமானது, முழு படத்தில் சுமார் 45 நாட்கள் கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பாதியில் வரும் கிரிக்கெட் மற்றும் அதன் லைட்டிங் அனைத்தும் ஒரு மாதியாகவும், இரண்டாம் பாதியில் வரும் கிரிக்கெட் மற்றும் அதன் நுணுங்கள் அதற்கு ஏற்ற லைட்டிங் என ஒளிப்பதிவின் மூலம் வேறுபாட்டை காட்டியிருப்போம். அதற்கு இயக்குநரின் மெனக்கெடலும் ஒரு காரணம். அவர் தான் விளையாட்டு இயக்குநர் துருவை அழைத்து வந்தார். கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படங்களில் விளையாட்டு இயக்குநராக சிலர் பணியாற்றுவார்கள். இந்தியாவில் அப்படி ஒன்று இரண்டு பேர் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் துருவ். இவர் தான் 83, 800 போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரைப் பற்றி தெரிந்துக்கொண்ட இயக்குநர் அவர் என்ன செய்கிறார் என்பதை நேரில் பார்த்து, இந்த படத்திற்காக அழைத்து வந்தார். கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதற்காக தான் இத்தகைய முயற்சியை இயக்குநர் மேற்கொண்டார். அவர் சொல்லிய நுணுக்கங்கள் மற்றும் அதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி என்னுடைய ஒளிப்பதிவு மூலம் சரியான கிரிக்கெட் போட்டிகளை காட்ச்சிப்படுத்தினோம்.

படத்தின் ஒரு கதாபாத்திரம் போல் கதைக்களம் வருகிறது, அது தான் அரக்கோணம் பகுதி. அரோக்கணம் நான் போனதில்லை, ஒரு களம் சார்ந்த கதை என்றாலே படம் பார்ப்பவர்களும் அந்த ஊரில் பயணிக்கும் உணர்வு ஏற்பட வேண்டும். அது தான் சவால், அதை சரியாக செய்தால் மட்டுமே முழு படமும் சரியாக வரும். குறிப்பாக நான் என் வேலையை சரியாக செய்தால் மட்டுமே படத்தின் மற்ற பணிகளும் சரியாக இருக்கும். அதை வைத்து தான் இசையமைப்பாளரால் பின்னணி இசை அமைக்க முடியும். அரக்கோணத்தில் ராணுவ விமானத்தளம் இருக்கிறது. அது தொடர்பான விசயங்கள் அங்கே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. போர் விமானங்கள் திடீரென்று வருகிறது, ஹெலிகாப்டர் வருகிறது. இவை அனைத்தும் படங்களில் வரும் போது அவற்றை சரியான முறையில் காட்சிப்படுத்தினால் தான், அதற்கு ஏற்ப பின்னணி இசை கொடுக்க முடியும் என்பதால் எனக்கு இருந்த கூடுதல் பொறுப்பை நான் உணர்ந்துக்கொண்டு அதற்கு ஏற்ப பணியாற்றினேன்.

அதேபோல், அரக்கோணத்தில் ரயில் பயணம் என்பது மிக முக்கியம். அங்கு பழமையான ரயில் நிலையம் இருப்பது மட்டும் அல்ல, அந்த ஊர் மக்கள் ரயில் போக்குவரத்தை தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். எனவே, ரயில் போக்குவரத்து மற்றும் ரயில் பயணங்கள் அவற்றுடன் அந்த மக்களின் பிணைப்பு ஆகியவையும் மிக இயல்பாக இருக்க வேண்டும் என்பதால், பல விசயங்கள் எனக்கு சவலாகவே இருந்தது. அதற்காக நானும் படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். இன்று அந்த உழைப்புக்கு பெரிய அங்கீகாரம் கொடுப்பது போல் ஊடகங்களும், ரசிகர்களும் பாராட்டுவது உற்சாகத்தை மட்டும் அல்ல, இதை விட எவ்வளவு பெரிய சவால் நிறைந்த படங்கள் வந்தாலும் அதை சிறப்பாக கையாள முடியும் என்ற உத்வேகமும் கிடைத்திருக்கிறது.”

என்று உற்சாகமாக பேசிய ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன், தற்போது ஐஸ்வர்யா, யோகி பாபு நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகியிருப்பவர் அப்படங்கள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேசுகிறேன், என்று கூறி விடைபெற்றார்.

Tags :
Amazing CameramanBalablue starCinematographypaa ranjithTamil A Azhagan!techniques
Advertisement
Next Article