For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சில்லென்ற சிம்லா…குளு குளு குலு மணாலி…!தேவ பூமியில் 6 நாட்கள்!பகுதி - 2 =க.ராஜீவ் காந்தி

08:25 AM May 08, 2024 IST | admin
சில்லென்ற சிம்லா…குளு குளு குலு மணாலி… தேவ பூமியில் 6 நாட்கள் பகுதி   2  க ராஜீவ் காந்தி
Advertisement

ந்தியாவில் எந்த மொழிப் படமாக இருந்தாலும் குளுமையான மலைப் பிரதேசத்திலோ, பனி படர்ந்த மலைகளின் பின்னணியிலோ படமாக்கப்பட வேண்டும் என்றால் சிறந்தத் தேர்வு சிம்லாவும் மணாலியும் தான். நண்பன் படத்தின் ஒரிஜினலான த்ரீ இடியட்ஸ், கண்டேன் காதலை படத்தின் ஒரிஜினலான ஜப் வி மெட் உள்பட பல பாலிவுட் படங்கள் சிம்லாவில் எடுக்கப்பட்டவை. இதை அங்குள்ளவர்கள் சொன்னபோது தமிழில் எனக்கு அன்பே வா படமும் சிம்லா ஸ்பெஷல் படமும் தான் நினைவுக்கு வந்தன. மிதமான குளிரில் மலைப்பிரதேசங்களை ரசிக்க சிம்லா என்றால் கடுங்குளிரை த்ரிலுடன் அனுபவிக்க மணாலி.

Advertisement

சிம்லா நம் நாட்டின் தலைநகராக இருந்த ஊர் என்றால் நம்ப முடியுமா? சமீப ஆண்டுகளில் சூரியன் ஓவர் டியூட்டி பார்த்து வெப்பத்தை ஏற்றி பாடாய் படுத்துவதை நம்மாலேயே தாங்க முடியவில்லை. கடும் குளிர் பிரதேசமான இங்கிலாந்தில் இருந்து வந்து இங்கே இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் இந்தியாவின் வெப்பத்தை தாங்க முடியுமா? எனவே சிம்லா, குலுமணாலியைத் தான் சம்மர் கேப்பிடலாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 1864 முதல் 1947இல் விடுதலை அடையும் வரை இந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. விடுதலைக்கு பின்னர் சிம்லா பஞ்சாப்பின் தலைநகராக மாறியுள்ளது. பின்னர் இமாச்சல பிரதேசத்தின் தலைநகராக மாறிவிட்டது. ஆங்கிலேயர் தலைநகராகப் பயன்படுத்த போக்குவரத்துக்கு ரயிலைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த சிங்கிள் ரயில் டிராக்கில் இன்னும் ரயில் ஓடுகிறது. நம்மூர் ஊட்டி மவுண்டைன் ரயிலைப் போல சுற்றுலா ரயிலாக மட்டும்…

டிரைவர் தனது 6 வயது மகளை என்னவென்றே தெரியாத காய்ச்சலுக்கு பறி கொடுத்ததை சொன்னபிறகு தான் நாம் எந்த அளவுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தோன்றியது.

Advertisement

டெல்லியின் எல்லையைத் தொடுவதற்கு முன், ஒரு பாலத்தைக் காட்டி ”இதைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் சவுரவ். நெடுஞ்சாலையில் ஒரு பெரிய பாலம். சென்னைக்கு வருபவர்களை வரவேற்பதைப் போல தாம்பரத்தில் இப்போது திறந்திருக்கிறார்களே அது போன்றதொரு பாலம். பாலத்தை கடந்த பின்னர் சவுரவ்வே தொடர்ந்தார்.

”இதுதான் சிங்கு பார்டர். டெல்லிக்கான நுழைவாயில். டெல்லி – அரியானா எல்லையில் இருக்கிற இந்த பாலம் போன வாரம் வரை மூடப்பட்டு இருந்தது. காரணம் விவசாயிகள் போராட்டம். இந்த பாலத்தை மட்டும் இல்லை. இந்த பாதையையே அடைச்சிட்டாங்க…”விவசாயிகளின் போராட்டம் டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க என்னவெல்லாம் செய்தார்கள்? என்பது நினைவுக்கு வந்தது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களை கடக்கும்போது இரு புறமும் விவசாயம் நடப்பதைப் பார்த்தோம். அதிகமாக கோதுமை தான் விளைகிறது. சணல், சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட இதர பொருட்களும் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. டெல்லி முதல் அரியானா, பஞ்சாப் வரை அதிகமாக பார்த்தது சீக்கியர்களை. சவுரவ்வும் சீக்கியர் தான். தாடி வைக்காத, டர்பன் கட்டிக்கொள்ளாத சீக்கியர்.

இந்த பாஜக அரசில் விவசாயிகளின் போராட்டம் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது. 2017 – 2018 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவிய கடும் வறட்சியும் அதனைக் கண்டுகொள்ளாத மோடி – எடப்பாடி அரசுகளின் அலட்சியமும் போராட தூண்டின. கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட விவசாயிகள் வறட்சியினால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டும் மடிந்தனர். அரசாங்கம் வெறும் 82 தான் என்றும் அவர்களும் சொந்தக் காரணங்களுக்காகத் தான் இறந்தனர் என்றும் மழுப்பியது. நியாயமாக இங்கு தான் விவசாயிகள் போராட்டம் வெடித்திருக்கவேண்டும். ஆனால் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் அளவுக்கு பெரிய அளவில் எழுச்சி பெறவில்லை. பஞ்சாப்பும் தமிழ்நாடு போலவே விவசாயத்துக்கு பேர் பெற்ற மாநிலம். ஆனால் அங்கு இருக்கும் விவசாயிகளில் பெரும்பான்மையானோர் வசதி படைத்தவர்கள் என்றார் சவுரவ்.

விவசாயிகளின் போராட்டம் என்பது விவசாயம் என்னும் தொழிலில் இருக்கக் கூடியவர்களின் போராட்டமாக பார்க்கிறோம். இல்லை. அது உணவு அருந்தும் ஒவ்வொருவரின் பிரச்சினை. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகளின் மீது தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுத்து நிறுத்த பயன்படுத்தும் வழிமுறைகளை இந்த அரசு கையாண்டது. மீண்டும் பாஜக வந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் இந்த மாநில விவசாயிகளிடம் இருக்கிறது.

நாம் அரியானாவுக்கு வருவோம்… அதிகாலையிலேயே எழுந்து கிளம்பியதால் பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. பொதுவாகவே விமானங்களில் தரப்படும் உணவுகள் எனக்கு அலர்ஜி. விமானத்தில் தரப்படும் சாண்ட்விச்கள் விமானம் தரையில் இறங்கிய பின்னரும் வயிற்றில் இறங்காமல் அடம் பிடிக்கும். இதனாலேயே ஒரே ஒரு ஃபுட் மட்டும் டிக்கெட் போடும்போது ஆர்டர் செய்துவிட்டு 3 பாக்கெட்டுகள் கப்போ நூடுல்ஸ் வாங்கி வைத்துக்கொண்டோம். கப்போ நூடுல்ஸ்க்காக சுடுநீர் கேட்டால் மிதமான சூட்டில் தான் வந்தது. அந்த ஐடியா வொர்க் ஆகவில்லை. ஆனால் இந்த முறை சாண்ட்விச் நன்றாக இருந்தது.

மணி 10.30 ஐ நெருங்கியது. நம் ஊர் ஹோட்டல்களில் என்றால் மாவை எடுத்து இரவுக்கு வைத்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கான சமையலை தொடங்கும் நேரம். சவுரவ்விடம் வாயை விட்டு கேட்டே விட்டேன். ஒரு தாபாவுக்கு கூட்டி செல்கிறேன். 10 நிமிடங்களில் வந்துவிடும் என்றார்.

டெல்லி டூ சிம்லா சாலையில் வரிசைகட்டி நிற்கின்றன தாபாக்கள். பாலிவுட் நடிகர்கள் கூட இங்கு தாபாக்கள் வைத்துள்ளனர். பார்த்தால் அரண்மனையின் முகப்பு அளவுக்கு பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக காட்சியளிக்கின்றன. ஆனால் அது முகப்பு தான். பக்கவாட்டில் பார்த்தால் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கும் பழைய பில்டிங்கின் நிலை புரியும். கிட்டத்தட்ட சினிமா செட் போல…!சவுரவ் ரெகுலராக பயணிப்பவர் என்பதால் நல்ல தாபாவுக்கு தான் கூட்டிச் சென்றார். பெயர் ஷிவா தாபா. 10.45க்கு கூட நல்ல கூட்டம். அரியானா மாநிலத்தில் முர்தல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ஒரு டேபிளில் அமர்ந்து மெனு கார்டை புரட்டினால் வெறும் பராந்தாவாகத் தான் இருந்தன. ஒரு வழியாக தென்னிந்திய உணவு மெனுவில் ஒரு தோசையையும் வட இந்திய உணவுகளில் பூரி சப்ஜி, 2 பராந்தாக்களை ஆர்டர் செய்தோம். சவுரவ்வை சாப்பிடத் தேடினால் சக டிரைவர்களுடன் அருகிலேயே தனி டேபிளில் அமர்ந்திருந்தார். டிரைவர்களுக்கு என்று தனி இடம். இலவசமாகவோ சலுகை விலையிலோ வழங்குகிறார்கள். உடன் சாப்பிடுங்கள் என்று எவ்வளவோ வற்புறுத்தியும் சவுரவ் கேட்கவில்லை. கிட்டத்தட்ட முக்கால்வாசி ஓட்டல்களில் இப்படி டிரைவர்களுக்காக என்று தனி செட்டப் இருக்கிறது. இலவசமா? இல்லை சலுகை விலையா? என்று கேட்க தோன்றியது. அது அவரை சங்கடப்படுத்துமோ என்று எண்ணி கேட்கவில்லை.

பராந்தா என்பது ரொட்டி. பராத்தா என்றும் சில இடங்களில் சொல்கிறார்கள். ஆலு சப்பாத்தி போல இருக்கிறது. அதில் நிறைய வெரைட்டிகள். மூன்று வேளையும் கூட இந்த ரொட்டியை சாப்பிடுகிறார்கள். ஊறுகாயும் தயிரும் சைட் டிஷ். பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பண்ணைகளில் நேரடியாக வரும் பால், தயிர் என்பதால் பால், தயிர், சீஸ், பட்டர் என அனைத்துமே நல்ல சுவையாகவும் மணமாகவும் இருந்தன. தோசை நம்ம ஊர் ரோஸ்ட். சட்னி சகிக்கவில்லை. சாம்பாரில் சர்க்கரையை அள்ளிக் கொட்டி இருந்தனர்.

சாப்பிட்டு முடித்த பின்னர் கண்டிப்பாக கீர் சாப்பிடுங்க… என்று சவுரவ் சொல்லி இருந்தார். ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை இல்லை. காலை 11 மணிக்கே அந்த கீர் முடிந்து விட்டிருந்தது. சாப்பிட்டு முடித்து காரில் ஏறி லேசாக கண் அயர்ந்தோம். அடுத்த 4 மணி நேரத்தில் சிம்லா எங்களை வரவேற்றது. சிம்லாவை நெருங்கும் வரை வெயில் தான். சிம்லாவில் மலைப்பாதையில் செல்லும்போது லேசாக குளிரத் தொடங்கியது. மலைப்பாதையில் எங்களுடனேயே அந்த மலை ரயில் பாதையும் தொடர்ந்தது பார்க்க அழகாக இருந்தது.

டூர் பேக்கேஜ் நிறுவனம் இரண்டு தேர்வுகளைக் கொடுத்தார்கள். 2 ஸ்டார் ஓட்டல்கள் என்றால் 4 பேருக்கும் சேர்த்து 45 ஆயிரம் தான். 3 ஸ்டார் ஓட்டல்கள் என்றால் 51 ஆயிரம் ரூபாய். பேச்சிலராக சென்றால் 2 ஸ்டார் ஓட்டல்கள் என்ன… மேன்ஷனில் கூட தங்கிக்கொள்ளலாம். குடும்பமாக செல்லும்போது பாதுகாப்பு முக்கியம் என்று 3 ஸ்டார் ஓட்டல் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் ஓட்டல் அறையில் எங்களுக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.

(பயணம் தொடரும்) முதல் பகுதி 👈யை படிக்க க்ளிக் செய்யவும் 

✍️ராஜீவ்காந்தி 

Tags :
Advertisement