For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சில்லென்ற சிம்லா…குளுகுளு குலுமணாலி…தேவபூமியில் 6 நாட்கள்! பகுதி- 3=க.ராஜீவ் காந்தி

09:26 AM May 21, 2024 IST | admin
சில்லென்ற சிம்லா…குளுகுளு குலுமணாலி…தேவபூமியில் 6 நாட்கள்  பகுதி  3 க ராஜீவ் காந்தி
Advertisement

ந்தத் தொடரை எழுதக் காரணமே சிம்லா, மணாலி டூர் திட்டமிடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான். நான் டூர் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்தது பட்ஜெட்டுக்குள் அடங்கி விடும் என்பதாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுமே என்ற பயத்தால் தான். சிம்லா, மணாலி டூர் பேக்கேஜ் அளிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பார்த்து சிறப்பான டூர் பேக்கேஜைத் தான் தேர்வு செய்தேன். சிம்லா, மணாலியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து கூட்டிச் செல்லும் டூர் நிறுவனங்களைவிட அங்கேயே இருக்கும் ஹிமாச்சல் பிரதேச நிறுவனங்கள் தான் சிறப்பாக தெரிந்தன. டிரைவர், கேப், சுற்றுலா என பெரும்பான்மையான விஷயங்களில் டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கிய டூர் நிறுவனம் ஹோட்டலில் மட்டும் சொதப்பியது.

Advertisement

சிம்லாவை நாங்கள் அடைந்தபோது 6.30. நிறுவனம் சொல்லி இருந்த ஹோட்டலை அடைந்து சாவி வாங்கி அறையை அடைந்தோம். அறை வித்தியாசமாக கீழே ஒரு டபுள் பெட், படி வழியே சென்றால் மேலே ஒரு டபுள் பெட் என பார்க்க அழகாக இருந்தது. ஆனால் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்கவில்லை. ஏஜென்சிகாரர்களுக்கு அழைத்து சொன்னதும் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்தே ஆள் வந்துவிட்டார். சுத்தம் செய்து கொடுத்தனர். வெளியில் வந்தோம். டிரைவர் சவுரப்பை பார்த்தால் காரிலேயே அமர்ந்திருந்தார். பொதுவாக இதுபோல ஹோட்டல்களில் தங்குபவர்களின் டிரைவர்கள் தங்குவதற்காகவே தனி ரூம்கள் தரப்படும். நம்மூரில் சில ஹோட்டல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிம்லா, மணாலியில் அந்த நடைமுறை இல்லை என்றும் காரிலேயே தான் படுத்துக்கொள்ள வேண்டும் என்று சவுரப் அடுத்த அதிர்ச்சியை அளித்தார். இந்தக் கடும் குளிரில் வெட்டவெளியில் காரிலேயேவா? அந்நியன் படத்தில் விக்ரம் டிடிஆர்… என்று ஹைடெசிபலில் கத்துவாரே அதுபோல ஏஜென்சிகாரர்களுக்கு போன் போட்டேன். அவர்கள் ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் இருந்தவரை அப்படி எதுவும் செய்யவில்லை. 5 நாட்களுமே காரில் தான் படுத்து உறங்கினார் சவுரப்.

Advertisement

அடுத்து சாப்பாடு. காலையில் ஷிவா தாபாவில் வட இந்திய உணவுகள் தானே கிடைத்தது. ஹோட்டல் தேர்வின் போதே நான் வெஜ் உணவு வேண்டும் என்றேன். ஏஜென்சி 3 ஸ்டார் பேக்கேஜ் எடுத்துக்கொண்டால் தருவதாக சொன்னது. ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் உங்கள் பேக்கேஜுக்கு நான் வெஜ் கிடையாது என்றனர். மீண்டும் டிடிஆர்… கடாய் சிக்கன் வந்தது. சிக்கன் வந்த பின்னர் தான் உயிரே வந்தது. டூர் என்பதே சாப்பிடுவதற்காகத் தானே… இதில் வட இந்திய உணவு அதுவும் சைவம் என்றால் இறங்குமா? இமாச்சல் முழுக்கவே மலைப் பிரதேசம் என்பதால் அங்கே அதிகமாக சாப்பிடுவது செம்மறி ஆட்டுக் கறி தான். அந்த ஊரில் தெரு நாய்களே சடை சடையாக முடியுடன் பார்ப்பதற்கு செம்மறி ஆடு போலத் தான் காட்சியளித்தன. சிக்கன் கீழிருந்து தான் மேலே வர வேண்டும். அந்தக் குளிருக்கு பிராய்லர் கோழியை வளர்க்க முடியுமா என்ன? சிம்லாவில் வேறு நான் வெஜ் கிடையாது. ஆனால் மணாலியில் ட்ராட் என்ற ஒரு வகை மீன் கிடைத்தது. மணாலியில் ஓடும் பியாஸ் என்ற ஆற்றில் பிடிக்கப்படும் மீன்.

பியாஸ் ஆறு இமாச்சல பிரதேசத்தில் உருவாகி பஞ்சாப் மாநிலத்தை வளத்தில் கொழிக்க வைத்து சட்லஜ் ஆற்றுடன் கலக்கும் மிகப் பெரிய ஆறு. மணாலி முழுக்கவே இந்த ஆற்றின் கரையில் தான் அமைந்துள்ளது. இந்த பியாஸ் ஆற்றில் தான் படகு சவாரி செய்யப்போகிறோம் என்றார் சவுரப்.மறுநாள் காலை 9 மணிக்கே கிளம்பி விட வேண்டும் என்றார் சவுரப். காரணம் டிராபிக். குஃப்ரி என்ற ஏரியாவுக்கு சென்று அங்கு குதிரை சவாரி உள்ளிட்ட அட்வென்சரில் ஈடுபடுவது திட்டம். காலை 10 மணி ஆகிவிட்டால் 10 கிலோ மீட்டரை கடக்க ஒரு மணி நேரம் ஆகுமாம். மலைப்பாதை என்பதால் ஒரு வரிசை என்றால் அந்த வரிசையில் தான் நிற்கிறார்கள். இடையில் புகுந்து சென்று குழப்பத்தை உண்டாக்க முடியாது.

டிராபிக்கை விட பெரிய பிரச்சினை சிம்லா, மணாலியில் பார்க்கிங். மலைச்சரிவுகளில் வீடு கட்டியவர்களால் அவர்கள் கட்டிய வீட்டுக்கு காரை எடுத்துச் செல்ல முடியாது. எனவே சாலைகளில் தான் பார்க்கிங் செய்ய வேண்டும். வீடு ஓரிடத்தில் இருக்கும். காரை ஓரிடத்தில் பார்க்கிங் செய்தாக வேண்டும். வேறு வழி இல்லை. 9 மணிக்கே கிளம்பி விட வேண்டும் என்று சவுரப் சொல்லி விட்டதால் 8 மணிக்கே ரெடி ஆகிவிட்டோம். ஆனால் ரெஸ்டாரண்டில் சொதப்பியதால் காரை கிளப்பியபோது மணி 9.50. செல்லும் வழியில் ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கே இரண்டு யாக்குகள் அலங்கரிக்கப்பட்டு நின்றன. இமாச்சலின் பாரம்பரிய உடையில் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். யாக்கில் அமர்ந்தும் படம் எடுத்துக்கொள்ளலாம். ஆர்வமாக சென்று ஆடையை வாங்கி அணிந்தோம். போட்டோகிராபர் வரிசையாக கிளிக்கித் தள்ளினார். யாக்கில் அமர வைத்தும் படங்கள் எடுத்தனர். இப்போது விலை பேசும் தருணம். ஒரு போட்டோ ப்ரிண்ட் போட 250 ரூபாய். மொத்தம் 24 படங்கள் 6000 ரூபாய். 5000 ரூபாய் கொடுத்தால் சலுகை விலையில் ப்ரிண்ட் போட்டு தருகிறேன் என்றார். நம்மைப் பற்றித் தெரியாமல்..!

இமாச்சலை பொறுத்தவரை ஏற்கனவே சொன்னதுபோல மாநிலமே சுற்றுலாவைத் தான் நம்பி இருக்கிறது. எனவே இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் இருந்து குதிரையேற்றம், போட் சவாரி, பாராகிளைடிங் என அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் தான். அரசுக்கும் ஒரு பங்கு போய்விடும். என அரசே கட்டணத்தை நிர்ணயித்துள்ளது என்பார்கள். ஆனால் பேரம் பேசியே ஆகவேண்டும். எல்லா இடங்களிலுமே பேரம் பேசலாம். உடன் இருக்கும் டிரைவர்கள் கமிஷனுக்காக நம்மை பேரம் பேச வேண்டாம் என்று சொல்வார்கள். சவுரப்பும் சொன்னார். ஆனால் நான் விடவில்லை. இந்த பாரம்பர்ய உடை போட்டோஷூட்டுக்கு நான் ஒதுக்கி இருந்த தொகை ஆயிரம் தான். எனவே 500 இல் தொடங்கினேன். கடைசியாக 4 படங்கள் 1000 த்தில் முடித்தோம். அப்போது மிச்ச படங்கள்? அவர்கள் எடுத்துக்கொண்டிருந்தபோதே எனது ஐபோனில் எடுத்தாகி விட்டது. அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். சில இடங்களில் சாஃப்ட் காப்பியாக நமது போனில் ஏற்றிக்கொள்ளலாம். அதற்கு ஒரு போட்டோவுக்கு 50 ரூபாய் கேட்பார்கள். ஆனால் மொத்தமாக பேசி ஒரு சின்ன தொகையில் இருந்து தொடங்கவேண்டும். எடுத்த படங்களை அவர்களால் என்ன செய்ய முடியும்?

சில நிமிடங்களில் குஃப்ரியை அடைந்தோம். குதிரை சவாரி. அந்த பாய்ண்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஒரு கரடுமுரடு, சேறும் சகதியுமான பாதை வழியாக குஃப்ரி வியூ பாய்ண்டை அடையலாம். அங்கே நிறைய அட்வென்சர்கள் இருக்கும். மொத்தமாக இங்கேயே டிக்கெட் எடுத்துவிட வேண்டும் என்றனர். குதிரை சவாரிக்கு 500, அட்வென்சருக்கு 2500 என 12000 கேட்டனர். அட்வென்சர்களை குறைத்து பேரம் பேசி மொத்தமாகவே 5 ஆயிரத்தில் முடித்தேன். குதிரை சவாரி உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. மலைப்பாதையில் சுமார் 100 குதிரைகளுடன் மலையேறினோம்.

மேலே பார்த்தால் மொத்த சிம்லாவும் தெரியும் அளவுக்கு அழகான வியூ. இந்த வியூ பாய்ண்டை ஆப்பிள் வியூ பாய்ண்ட் என்கிறார்கள். ஆங்காங்கே ஆப்பிள் மரங்கள் தென்பட்டன. ஆனால் இது சீசன் இல்லையே… எனவே காய், பழங்களை பார்க்க முடியவில்லை. இந்த குஃப்ரி நாங்கள் சென்றபோது நல்ல க்ளைமேட்டில் இருந்தது. ஆனால் எப்போதுமே அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாதாம். சில சமயங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும். எனவே சிம்லா, மணாலியைப் பொறுத்தவரை தெர்மல்வேர் என்னும் உள்ளே அணியும் ஆடை அவசியம்.

ஆக்டிவிட்டீஸ் முடிந்த பின்னர் திரும்பும் வழியில் ஸ்னாக்ஸ் கடைகள் இருந்தன. வட மாநிலங்களில் இப்போது அதிகமாக தென்படும் ஸ்னாக்ஸ் மோமோஸ். 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மோமோஸ் தாக்கம் அதிகரிக்கவில்லை. சாட் ஐட்டங்கள் அதிகமாக தென்படும். ஆனால் இமாச்சல் மட்டுமல்லாது டெல்லியிலும் கவனித்தேன். மோமோஸ் கடைகள் அதிகமாகி இருந்தன. மலைப்பகுதி என்பதால் மேகி, மோமோஸ், பஜ்ஜி என்ற பெயரில் பகோடா கிடைக்கின்றன. இட்லி, தோசையும் உண்டு. ஆனால் சாம்பாரில் கொட்டப்படும் சர்க்கரையும் சட்னியும் வற வற இட்லி தோசையும் நமக்கே நமது உணவுகளை வெறுக்க வைத்துவிடும்.

ரிட்டர்ன் வருவதற்கு குதிரை வேண்டுமே… டோக்கனில் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அழைத்தோம். 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. ரிட்டர்னுக்கு நான் சவாரி ஏறிய குதிரை பெயர் கவுரி. உடன் நடந்து வரும் குதிரைகாரர்கள் வேண்டுமென்றே குதிரையை உசுப்பேத்துவார்கள். அது மிரண்டு போய் ஓடும். நமக்கு த்ரில் அளிப்பதற்காக அவர்கள் செய்வது.  இந்த குஃப்ரி விசிட்டில் அதிகமாக நம்மூர் ஆட்களைப் பார்த்தோம். ஏப்ரல் இறுதி வாரம் என்பதால் கோடை வெயில் தமிழ்நாட்டை பதம் பார்த்துக்கொண்டிருந்த நேரம். ஊட்டி, கொடைக்கானல் என நம்மூர் குளிர் பிரதேசங்களில் சூரியனார் ஓவர் டியூட்டி பார்த்ததால் எங்களைப் போலவே சிம்லா, மணாலி திட்டமிட்டு இருந்தனர். ரிட்டர்ன் வரும்போது ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிம்லாவின் மால் ரோடு மார்க்கெட்டுக்குள் நுழைந்தோம்.

(பயணம் தொடரும்)

தேவபூமியில் 6 நாட்கள் பகுதி - 2

தேவபூமியில் 6 நாட்கள் பகுதி - 1

ராஜீவ்காந்தி

Tags :
Advertisement