For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சில்லென்ற சிம்லா…குளு குளு குலு மணாலி…! தேவபூமியில் 6 நாட்கள்.!-க.ராஜீவ் காந்தி

09:48 AM May 05, 2024 IST | admin
சில்லென்ற சிம்லா…குளு குளு குலு மணாலி…  தேவபூமியில் 6 நாட்கள்   க ராஜீவ் காந்தி
Advertisement

ரசுப் பள்ளியில் என் மகள்கள் படிப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு தேர்ச்சி விகிதம் காட்டும் பள்ளி. மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறாள். தினமும் சிறப்பு வகுப்புகள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட முழு நேர பள்ளி என்று கடந்த ஓராண்டாகவே கடுமையாக உழைத்தாள். தேர்வு முடிந்தவுடன் வெளியில் செல்லலாம், கண்டிப்பா ஃப்ளைட்டில் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக இருந்ததால் நமக்கும் ஒரு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. ஒரு வழியாக தேர்வு, தேர்தல் இரண்டும் முடிந்தவுடன் திட்டமிடலில் இறங்கினோம். பட்ஜெட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் உள்நாடு தான். சிம்லா, மணாலியை தேர்ந்தெடுத்தோம். சிம்லா. மணாலி நினைத்தாலே பனி படர்ந்த மலைகளும் மரங்களும் தான் காட்சிக்கு வந்தன. எந்த பக்கமும் செல்ல விடாமல் எல்லா பக்கமும் சூரியன் காட்டு காட்டு என்று காட்டுவதால் சிம்லா, மணாலியே பெஸ்ட் என முடிவெடுத்தோம்.

Advertisement

சிம்லா, குலு, மணாலி (ஆமாம், குலு வேறு. மணாலி வேறு) மூன்றுமே இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்த சுற்றுலாத் தளங்கள். இமாச்சல பிரதேசமே மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மாநிலம். எனவே மாநிலத்தின் ஒரே வருவாய் சுற்றுலா மட்டும் தான். நாங்கள் ஒரு ஏஜென்சி மூலம் டூர் பேக்கேஜ் எடுத்தோம். அந்த பேக்கேஜில் டெல்லியில் இருந்து சிம்லா, சிம்லாவில் 2 இரவுகள் தங்குதல், சிம்லாவில் இருந்து மணாலி, மணாலியில் 3 இரவுகள் தங்குதல், சிம்லாவில் இருந்து டெல்லி, தங்கும் நாட்களில் எல்லாம் காலை உணவு, இரவு உணவு, கூடவே காரும் டிரைவரும் என ஒரு முழுமையான பேக்கேஜாக கொடுத்தார்கள்.

Advertisement

சென்னையில் இருந்து இமாச்சல பிரதேசம் டெல்லியில் இறங்கி காரில் பயணிக்கலாம். டெல்லி – அரியானா – பஞ்சாப் – இமாச்சல பிரதேசம் என 4 மாநிலங்களை இணைக்கும் சாலைவழிப் பயணம். இல்லாவிட்டால் நேராக சண்டிகர் சென்று அங்கிருந்து இமாச்சல பிரதேசம் அடையலாம். சண்டிகரில் இருந்து சென்றால் 5 மணி நேர பயணம் மிச்சம். பட்ஜெட் காரணமாக டெல்லி வழியையே தேர்ந்தெடுத்தோம்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு அதிகாலை 5.55 க்கு விமானம். டெல்லியை அடைந்தபோது மணி 9. சவுரவ் என்ற டிரைவர் வந்து பிக்கப் செய்துகொண்டார். இதுபோன்ற வட இந்திய பயணங்களில் ஆங்கிலம் தெரிந்த டிரைவர் அமைவது வரப்பிரசாதம். இவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். மருத்துவப் பிரதிநிதியாக இருந்தபோது வடமாநிலங்களுக்கு நேர்முகத் தேர்வு, பயிற்சிக்காக சென்று பல வாரங்கள் தங்கி இருக்கிறேன். 15 ஆண்டுகளில் தென்னிந்தியர்களை அவர்கள் பார்க்கும் பார்வை பல மடங்கு மாறியுள்ளது. 2 பெரியவர்கள், 2 சிறுமிகள் என்பதால் சுவிஃப்ட் கார் தான் பேக்கேஜில் வந்தது. மலைப் பிரதேசங்களில் பயணிக்க மாருதி தயாரிப்புகள் தான் பெஸ்ட். குறைவான பராமரிப்பு செலவு, நல்ல மைலேஜ், மலைப் பயணங்களில் கூட நல்ல பிக்கப் என்பதால் இமாச்சல பிரதேசம் முழுக்கவே மாருதி தயாரிப்புகளையே அதிகம் பார்த்தோம். அதிலும் ஆல்டோ வண்டி தான் 80 சதவீதம்.

டிரைவர் சவுரவ்விடம் மாருதி எர்டிகா சொந்தமாக இருக்கிறது. கம்பெனிக்காக ஓட்டுகிறார். அவர்கள் தரும் காரைத் தானே ஓட்ட வேண்டும். டெல்லியின் நெரிசலான போக்குவரத்தில் பயணம் தொடங்கியது. காரின் முன் சீட்டில் நான். பின்னால் மனைவியும் மகள்களும். அதிகாலை 3 மணிக்கு எழுந்தது, பயணம் என களைப்பில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தனர்.

வட மாநிலங்களில் சென்று அங்கு தங்கும்போது அவர்கள் நம்மை நடத்தும் விதத்தில் எனக்கு அனுபவங்கள் இருந்தாலும் குடும்பத்துடன் சென்றிருப்பதால் ஒருவித அலெர்ட்னெஸ் இருந்து கொண்டே இருந்தது. தூக்கமும் வரவில்லை. வியாழன் என்பதால் ஆன்லைனில் விகடன் வாசித்துக்கொண்டே ஓரக்கண்ணால் டிரைவரை பார்த்தேன். என் இளைய மகள் தீக்‌ஷனாவை அடிக்கடி பார்க்கிறார். வயது 45இல் இருந்து 50க்குள் இருக்கலாம். அடுத்த 5 நாட்கள் இவருடன் தான் பயணிக்க வேண்டும். பேச்சு கொடுத்து பார்ப்போம். நல்லவராகத் தெரிந்தால் இருக்கட்டும். இல்லை என்றால் ஏஜென்சியில் சொல்லி மாற்றி விடலாம். சில நிமிடங்களில் இடதுபுறத்தில் நீண்ட சுவர் தொடங்கியது.

டிரைவரிடம் பேச்சு தரலாம் என்று “திகார் ஜெயில்?” என்றேன்.

”ஆமாம், இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளே தான் இருக்கிறார்” என்றார்.

ஏனோ உடனே எனக்கு  அண்ணன் பேரறிவாளனை சந்திக்க புழல் சிறைக்கு சென்ற அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. அரவிந்த் கெஜ்ரிவால் - விவசாயிகள் தற்கொலை, மரணங்கள் பற்றிய என்னுடைய கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்து அதைப் பாராட்டி பகிர்ந்த தலைவர். நான் வேண்டுகோள் வைக்காமலேயே இதை செய்தவர்.

”பார்க்க முடியுமா?” என்று கேட்க நினைத்தேன். பின் சீட்டில் குடும்பம் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தது.

அடுத்த ஒரு வாரத்திற்கு அரசியல், போனுக்கெல்லாம் குட்பை சொல்லிவிட வேண்டும் என்று மகள்கள் பிராமிஸ் வாங்கி இருந்தனர். தனியாகவோ, நண்பர்களுடனோ வந்திருந்தால் முயற்சித்திருக்கலாம்.

டிரைவரின் சொந்த ஊர், குடும்பம் பற்றி விசாரித்து மெல்ல பேச்சு கொடுத்தேன்.

இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமான தர்மசாலா தான் சொந்த ஊர். ஒரு மகன். தர்ம்சாலா என்று தான் சொல்கிறார்கள். தர்மசாலா என்ற உடன் மலைகளுக்கு நடுவே ஓர் உயர்ந்த மலையில் ஓவியம் போல காட்சியளிக்கும் கிரிக்கெட் மைதானம் தான் நினைவுக்கு வந்தது.

”சச் எ பியூட்டிஃபுல் பிளேஸ்… மகன் என்ன படிக்கிறான்?”

”6ஆம் வகுப்பு சார்”

”இப்போது கோடை விடுமுறை அல்லவா? மகனை ரொம்ப மிஸ் பண்ணுவீங்களே?”

”இல்லை சார். எங்களுக்கு கோடை விடுமுறை கிடையாது. குளிர் விடுமுறை தான். நவம்பர் இறுதியில் இருந்து ஃபிப்ரவரி முதல் வாரம் வரை. அந்த காலகட்டத்தில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. மே மாதம் சில நாட்கள் மட்டும் விடுமுறை விடுவார்கள். தேர்வு முடிந்தபிறகு….”

சில வினாடிகள் மவுனம். எதற்காகவோ காத்திருந்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

“எனக்கு ஒரு பொண்ணு இருந்தா சார். 8 வயசுல இறந்துட்டா…”

அதிர்ச்சியில் இருந்து மீளாமல் “எப்படி?” என்றேன்.

“காய்ச்சல் அடிச்சுச்சு சார். கீழே கொண்டு போறதுக்குள்ள முடிஞ்சுடுச்சு. மலைப் பிரதேசம் என்பதால் குளிர் காலங்கள்ல உயர் மருத்துவ வசதிகள் வேண்டும் என்றால் கீழே தான் செல்ல வேண்டும். என்ன காய்ச்சல்னு கூட தெரிஞ்சுக்க முடியலை…”

சிந்தனை தேங்கியது. மனது கலங்கியது. கண்களும்…!

(பயணம் தொடரும்)

✍️ராஜீவ் காந்தி

Tags :
Advertisement