சின்னபிள்ளைத்தனமான குரலிது!
"தமிழகத்தில் ஒரு பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் ஒருபோதும் முதல்வராக முடியாது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.தொல்.திருமாவளவன் ஒரு ஆதங்கக் குரலை எழுப்பி இருக்கிறார். அவருடைய குரல் அவர் செய்து வருகிற அரசியலுக்கு முற்றிலும் நியாயமானது, அதிகாரத்தை நோக்கி விளிம்பு நிலை மக்களை நகர்த்த வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் பொது நீரோட்டத்தில் கலந்து கண்ணியமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது டாக்டர் திருமாவளவனின் நீண்ட கால இலக்கு. அதற்காக அவர் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார். அவருடைய இந்தக் கலகக் குரலை நேர்மையாக அரசியல் தளத்தை அணுகுபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், இந்த ஒரு ஆதங்கக் குரலை நாம் வேறொரு கோணத்தில் அணுக வேண்டியிருக்கிறது, தமிழகத்தில் பல்வேறு சாதிகள் இருக்கிறார்கள். வன்னியர்களும், பறையர்களும் மிகப் பெரும்பான்மையானவர்கள். அடுத்த நிலையில் நாடார்கள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் பரவலாக தமிழகமெங்கும் வசிக்கிறார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தை ஆண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களில் யாரும் மேற்கண்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் இல்லை. .ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் அல்ல, அவர்கள் இருவரும் நியமன முதல்வர்கள். இதில் விதிவிலக்கானவர் ஐயா காமராசர் மட்டும்தான். அவரையும் தமிழக மக்கள் அவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் முதல்வராக்கவில்லை. மாறாக விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியால் முன்னிறுத்தப்பட்ட தமிழக மக்களின் எளிய பிரதிநிதி. அவரை சாதி மயப்படுத்துவது நேர்மையானதல்ல. சாதிக்கு அப்பாற்பட்ட அப்பழுக்கற்ற தலைவராக எளிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த மகோன்னதமான மனிதர் கருப்பு காந்தி காமராசர்.
பிற புகழ்பெற்ற முதல்வர்களான கலைஞர் கருணாநிதி கண்ணுக்குப் புலப்படாத ஒரு சாதியைச் சேர்ந்தவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மொழிச் சிறுபான்மை இனமான கேரள மேனன், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கன்னட பார்ப்பனர். ராஜாஜி சிறுபான்மை பார்ப்பனர்.தமிழகம் சாதிப் பெரும்பான்மை இனத்தவர்களையோ, சாதியை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களையோ முதல்வர் பதவிக்கு இதுவரை முன்னிறுத்தியதில்லை. அரசியலில் இந்த சாதிப் பெரும்பான்மை வாதத்தை முன்னெடுத்து நகரும் எவரையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறுத்தி விடுவதில் தமிழக மக்கள் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். பெரும்பான்மை வன்னியர் சமூகத்தின் டாக்டர்.ராமதாஸ் அவர்களையோ, அவரது வாரிசான அன்புமணி ராமதாஸ் அவர்களையோ தமிழக மக்கள் ஒரு எல்லைக்கு மேல் வளர்ச்சி அடைய இதுவரை அனுமதிக்கவில்லை.
அதைப் போலவே பெரும்பான்மை பறையர் சமூகத்தின் தலைவர்களையும் தமிழக மக்கள் ஒரு எல்லைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். டாக்டர் திருமாவளவனை தமிழக மக்கள் இந்த சமூக முதிர்ச்சியைத் தாண்டி ஆதரிக்கிறார்கள், அவரை ஒரு பொதுவான தமிழ் சமூகத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதன்மைக் காரணம் அவருடைய பிற சமூகங்களுடன் கூடிய நல்லிணக்கமும், அவர் தனது இயக்கத்தில் பிற சமூகங்களுக்கு வழங்கும் Inclusiveness ம் தான் என்பது எனது நம்பிக்கை. எம்.ஜி.ஆர் எந்தக் கவன ஈர்ப்பும் இல்லாத கேரள மேனன், ஆனால், அவர் தமிழகத்தின் சாமானிய உழைக்கும் மனிதனின் பிரதிநிதியாகத் தனது பிம்பத்தை திரைப்படங்களின் வழியாகக் கட்டமைத்துக் கொண்டவர். எந்த சாதிப்பிரிவும் அவரைத் தங்கள் பிரதிநிதியாக அடையாளம் செய்ய முடியாத அளவில் இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர். ஜெயலலிதா ஒரு கன்னட பிராமணராக இருந்தாலும் அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி, வெளிப்படையாக சாதியை மையமாக அரசியல் செய்யவில்லை.அப்படி செய்ய முயன்றால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.
கலைஞரின் அரசியல் அணுகுமுறையிலும் இத்தகைய ஒரு Remote Inclusiveness இருந்ததை நம்மால் பார்க்க முடியும், பல்வேறு விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கு வாழ்நாள் எல்லாம் உழைத்தவர் கலைஞர். தமிழ் என்கிற மொழிவழி அரசியலையும் தாண்டி அவர் மொழிச் சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்காக திட்டங்களையும் தீட்டியவர். ஆகவேதான் மேற்கண்ட மனிதர்களைத் தமிழக மக்கள் சாதியைச் தாண்டி தங்கள் மாநிலத்துக்கான தலைவர்களாக அடையாளம் கண்டு இன்றுவரை போற்றுகிறார்கள். இதே வழியில்தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பார்க்கிறார்கள். தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகளுக்கு கட்சிகள் பிரதிநிதித்துவம் அளிப்பது என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது, அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி அமைக்கவும், விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்கிற தொலைநோக்குப் பார்வையில் தான் நமது அரசியல் சாசனத்தில் தனித் தொகுதிகளை வடிவமைத்தார் சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர். தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அதிகாரமிக்க பதவிகளை திராவிடக் கட்சிகள் வழங்கி இருக்கிறது. இன்னும் ஆழமாகப் பேச வேண்டுமென்றால் தங்கள் அறிவாற்றலாலும், தனித்திறன்களாலும், பெருமை மிகுந்த அதிகாரப் பதவிகளை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் அடைந்திருக்கிறார்கள். ஆ.ராசா கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு ஆளுமை. தலித் என்கிற அடையாளத்தைத் தாண்டி தமிழகத்தின் அறிவார்ந்த உறுதிமிக்க ஆளுமையாக இந்தியாவின் அஸ்திவாரமாக விளங்கும் சனாதனவாதிகளின் கோட்டைகளில் நின்று ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக அடையாளமாக முழக்கமிட்டவர் ஆ.ராசா.
ஆகவே தமிழகம், அரசியலில் ஒரு மிகப்பெரிய முதிர்ச்சியை எட்டி தங்கள் தலைவர்களைக் தேர்வு செய்வதில் எப்போதும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது. எந்த வகையான சாதியக் குரலையும் தனது Perceptional Inclusiveness வழியாக எதிரொலிக்கிற மாநிலமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.அப்படியா? தமிழகத்தில் சாதிய அரசியலே இல்லையா? அவ்வளவு மேம்பட்ட சமூகமாக தமிழ் சமூகம் என்கிற உங்கள் குரல் எனக்கு நன்றாகக் கேட்கிறது. எல்லா மாநிலங்களையும் போல இன்னமும் சாதிய சமூகமாகத்தான் தமிழகம் இருக்கிறது. ஏன், இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பள்ளர்களாக இருந்த ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று தேவேந்திர குல வேளாளராகப் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. பார்த்தாலே தீட்டு என்றிருந்த சானார் சமூகம் இன்று கண்ணியமான ஆதிக்க நாடார் சமூகமாக வலுவடைந்திருக்கிறது.பறையர் சமூகம் பரவலாக வளர்ச்சி அடைந்த சமூகமாக மாறி இருக்கிறது. ஆனால், புதிரை வண்ணார் சமூகமோ, அருந்ததியர்களில் ஒருவராக இருக்கும் சக்கிலியர்களோ, பகடைகளோ, சவுண்டிப் பார்ப்பனர்களோ வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா? என்றால்... இல்லை என்பதுதான் இங்கே அடிப்படை உண்மை.
இங்கே, சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்து மற்றும் பிறப்பால் அவர்கள் அடைகிற உயர் அடையாள அந்தஸ்து குறித்து நான் பேசவில்லை. அதிகாரமிக்க முதல்வர் பதவிகளைப் போன்ற பதவிகளை அடைவதற்கு சாதிய அளவுகோள் எப்பட செயல்படுகிறது என்ற நிலையில் இருந்து மட்டுமே பேசுகிறேன். மொழிச் சிறுபான்மையினராக இருக்கும் பெரும்பான்மையாக தூய்மைப் பணிகளில் ஈடுபடும் அருந்ததியர் இனமக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கண்ணியமான இடத்தை பொது சமூகத்தில் அடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் தீர்க்கமான நடைமுறை உண்மை. இந்த நிலையில் டாக்டர் திருமாவளவன் எழுப்பி இருக்கும் பட்டியலின சாதி மக்களால் முதல்வர் பதவியை அடைய முடியாது என்ற குரல் பெரும்பான்மை சாதியவாதத்தின் குரல் என்று நான் நம்புகிறேன்.
டாக்டர் ராமதாஸின், வன்னியர் இனத்திலிருந்து முதல்வர் என்ற குரலுக்கும், ஆண்ட பரம்பரையான முக்குலத்தோரில் இருந்து முதல்வர், கொங்கு வேளாளர்களின் ஆதிக்கக் குரலுக்கே முதல்வர் பதவி போன்ற முழக்கங்களைப் போலவே டாக்டர்.திருமாவளவன் குரலை ஒரு பொது மனிதனாக நின்று பார்க்க முடிகிறது. மாறாக, இதுவரை டாக்டர்.திருமாவளவன் துணிச்சலாகவும், பொது சமூகத்தின் பிரதிநிதியாகவும் நின்று எப்படி ஒரு Remote Inclusiveness ஐ உருவாக்கி வளர்த்தெடுத்தாரோ அதைப்போல பொது சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். சக சமூகங்களின் வாக்குகளைக் கவர்வது மட்டுமில்லாமல் அவர்களின் இதயத்தை வென்றெடுக்க முயற்சி செய்தால் உறுதியாகத் தமிழக மக்கள் அவரை தங்களின் முதல்வராக ஏதாவது ஒரு வழியில் தேர்வு செய்து அழகு பார்ப்பார்கள் என்பதுதான் எனது நம்பிக்கை.
இடையில் உருவாகிற இத்தகைய பெரும்பான்மை சாதிக்கான உரிமைக்குரல் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், டாக்டர் திருமாவளவனின் உயரிய சிந்தனைகளையும் குறுக்கி பிற சாதிக் கட்சிகளைப் போல உருமாற்றமடையச் செய்யும் அபாயம் இருக்கிறது. அவருடைய அரசியல் அறிவோடும், அரசியல் சமூகப் பணிகளோடும் ஒப்பிடும்போது எனது இந்த எளிய குரல் சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால், இதுதான் தமிழ் சமூகத்தின் குரல். சாதிமதமற்ற சாமானியனாக எந்த வெறுப்புணர்வும் இல்லாத அறத்தின் பக்கமாக நிற்கிற தமிழனின் குரல்.