For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

செர்னோபில் பேரழிவின் நினைவு தினம் இன்று!

07:39 AM Apr 26, 2024 IST | admin
செர்னோபில் பேரழிவின் நினைவு தினம் இன்று
Advertisement

200 டன் அணுக்கழிவு... 90,000 பேர் மரணம்... செர்னோபில் அணு உலையில் அன்று நடந்தது என்ன ?

Advertisement

தான் உருவாக்கிய அணு ஆயுதம் தன் மக்களையே பதம் பார்த்த வரலாற்றின் மோசமான உதாரணம் சோவியத் யூனியனின் சுவர்களில் படிந்து கிடக்கிறது. ஏப்ரல் 26, 1986 - வரலாற்றில் மிக மோசமான அணு விபத்து பதியப்பட்ட நாள். வடக்கு உக்ரைனில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் (Chernobyl) நகருக்கு அருகில் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலை வெடித்து எரிந்தது. இரகசியங்களால் மூடப்பட்டு மறைக்கப்பட்ட இந்த சம்பவம் மனித வரலாற்றிலேயே அழிக்க முடியாத தழும்பாக மாறிப்போன ஒரு நிகழ்வானது. வல்லரசின் வளர்ச்சியின் அடையாளமாக தம்பட்டம் அடிக்கப்பட்ட அணு உலை, அதே வல்லரசின் வீழ்ச்சிக்கும் வித்திட்டது. நிகழ்ந்து 38 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டாலும் இந்த ஆலையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு இன்னும், குறைந்தது 20,000 ஆண்டுகள் வரை மனித உயிர் வாழக்கூடியதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இதுவரை வரலாற்றிலே பதியப்பட்ட மிகப்பெரிய அணு விபத்தான செர்னோபில் நிகழ்ந்தது எப்படி?

Advertisement

அந்த இரவு நேரத்தில், வெப்ப நிலை 10 டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது. இந்தியா போன்ற நாட்டவருக்கு அது கடும் குளிர் கொடுக்கக் கூடிய சீதோஷ்ணம் தான். ஆனால், அன்றைய ஒருங்கிணைந்த சோவியத்தின், செர்னோபில் பகுதி மக்களுக்கு, அது கடுமையான குளிர் இல்லை. 26-04-1986. அது ஒரு சனிக்கிழமை. நள்ளிரவு மணி 1. 15. செர்னோபில் அணு உலையின் 4 வது எண் கலனில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1.20 மணி... அதீத வெப்பத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. தண்ணீர் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஆவியாகத் தொடங்குகின்றன. மணி... 1.22 நிமிடங்கள், 30 நொடிகள். அதைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர்கள் முடிவெடுத்து முடிப்பதற்குள்... மணி 1.23... பெரும் சத்தத்தோடு உலை வெடிக்கிறது. கடுமையான வெப்பம். அதைப் பரிசோதித்த இருவரும் சம்பவ இடத்திலேயே சாகிறார்கள். தீ பற்றத் தொடங்குகிறது. பற்றி எரியத் தொடங்குகிறது. எந்தளவிற்கு என்றால்... அது தொடர்ந்து 9 நாட்களுக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

முதலில் இதை சாதாரண விபத்தாகத் தான் நினைக்கிறது சோவியத் அரசு. பின்னர், விபத்தின் வீரியத்தை உணர்ந்து ஹெலிகாப்டரில் பறந்து மண்ணையும், கரியத்தையும் வீசி அணைக்க முயற்சிக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள் , அணு உலையிலிருந்து தரை வழி வெளியேறும் அணுக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். 10 லட்சம் பேர் வரை இணைந்து முதற்கட்ட மீட்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். 200 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், 16 டன் அளவிற்கான யுரேனியம் மற்றும் புளுட்டேனியம் நிறைந்து கிடந்த அந்தப் பகுதியைப் பாதுகாக்க அதன்மீது ஒரு கான்கிரீட் வேலியை அமைக்கிறார்கள். விபத்து நடந்த அன்று மட்டும் 31 பேர் நேரடியாக இதில் மரணம் அடைந்தார்கள்.

விபத்து நடந்து 36 மணி நேரத்தில், 10 கிமீ சுற்றளவிலிருந்த கிட்டத்தட்ட 49 ஆயிரம் பேர் அந்தப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். மொத்தமாக 8 டன் அளவிற்கான கதிர்வீச்சு பொருள் வகைகள் வெளியேறின. பல லட்சம் பேருக்கு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. கேன்சர் பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. கதிர்வீச்சு பாதிப்புகளின் காரணமாக தோராயமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதில் 20% தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வாழ்வாதாரத்தைக் குலைத்து, மரணத்தை அளித்து, பல லட்சம் பேரை நடை பிணங்களாக்கி, மரம், செடி கொடிகளைக் கொன்று, லட்சக்கணக்கான கால்நடைகளைக் கொன்று என மனித இன வரலாற்றில், மனிதன் ஏற்படுத்திய ஆகப் பெரும் பேரிடராக பெரும் வலியோடு இதுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய உக்ரைன் நாட்டின் ப்ரிப்யட் நகர் அருகில் இருக்கும் செர்னோபில் அணு உலைப் பகுதியில் முப்பது ஆண்டுகள் கடந்தும் கூட, இன்றும் அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கதிர்வீச்சின் பாதிப்புகள் நாடுகள் கடந்து அயர்லாந்து வரை இன்றும் இருந்து வருகிறது. இதில் நாம் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் செர்னோபில் அணு உலை மற்றப் பகுதிகள் 2000ம் ஆண்டு வரைத் தொடர்ந்து இயங்கி வந்துள்ளன.

செர்னோபில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, உதவிகளை செய்து வருபவர் ரோஷே என்கிற பெண்மணி. ஐநாவிடம் இவர் தொடர்ந்து வைத்த கோரிக்கையின் பயனாக, இந்தாண்டு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி "செர்னோபில் பேரழிவின் நினைவு தினமாக" உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.

எங்கோ, என்றோ நடந்த அழிவு... அதில் இறந்தவர்களுக்காக நாம் ஏன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் எழலாம்... நமக்கான அதிவேக வாழ்வில் இதை செய்தியாகக் கூட கடக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த வெப்பத்தில் வெந்தவர்களுக்கு, வெந்து இறந்தவர்களுக்கு, கருகி செத்த மரம் , செடிகளுக்கு, எந்தத் தீங்கும் செய்திடாமல் இன்றளவும் முடமாகிப் பிறக்கும் சிசுக்களுக்கு... நாம் ஒதுக்கும் சில நொடிகள், அவர்களை நினைந்து நாம் சிந்தும் சில துளி கண்ணீர் தான் நமக்குள் எங்கோ ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தின் மிச்சமாக இருக்கக்கூடும். அந்த மனிதத்தின் மிச்சங்களை அவர்களுக்காகக் கொட்டுங்கள்...!

வாத்தீ.அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement