இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்!
Numbeo என்ற இணையதள நிறுவனம் BBC, Time The Week, The Telegraph, The Age, The Sydney Morning Herald, China Daily, The Washington Post, USA Today மற்றும் பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதுவும் ‘கூகுள்’ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், போஸ்னியா-ஹெர்சகோவினா, பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக். என்பவ்ர்தான் செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
இந்நிறுவனம், உலகின் முக்கிய நகரங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127-–வது இடத்தையும் பிடித்துள்ளது. இதர மெட்ரோ நகரங்களான மும்பை (161), கொல்கத்தா (174) மற்றும் புது டில்லி (263) ஆகியவை சென்னைக்கு அடுத்து இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை போலீஸ் மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.