சென்னை டூ ஸ்ரீலங்கா & சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் சொகுசு கப்பல்கள் இயக்க திட்டம்!.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக நாகை விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாகை துறைமுகம் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாகவும் திகழ்ந்தது.பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ஆகிய கப்பல்கள் நாகை துறைமுகத்துக்கு வந்து சென்றன. காலமாற்றத்தால் 1980-க்குப் பின்னர் இந்த கப்பல்கள் சேவையை நிறுத்தின. மலேசியாவிலிருந்து நாகைக்குஇயக்கப்பட்டு வந்த எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலில் 1984-ல் தீ விபத்து நேரிட்டதால், அந்தப் கப்பலும் சேவையை நிறுத்திக் கொண்டது. 1991 செப்டம்பர் மாதம் நாகையிலிருந்து எம்.வி.டைபா என்றகப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே கடைசி ஏற்றுமதியாக இருந்தது. 1999 முதல் நாகை துறைமுகம் வழியாக பாமாயில் மற்றும் தேங்காய் புண்ணாக்குஇறக்குமதி நடைபெற்றது. பிறகுபோதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், நாகை துறைமுகம் செல்வாக்கை இழந்தது. எனவே, நாகை துறைமுகத்திலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பால் சேவை தொடங்கப்பட்டு சில குளறுபடிகளால் நின்று போயுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையிலிருந்து அந்தமானுக்கு மட்டுமே கப்பல் இயக்கப்படுகிறது. இது 60 மணிநேரப் பயணமாகும். சென்னையிலிருந்து போர்ட் பிளேர் கப்பலில் டீலக்ஸ் கேபினுக்கு 10240 ரூபாய், 1ம் வகுப்பு அறைக்கு 8490 ரூபாய், 2ம் வகுப்பு கேபினுக்கு 6750 ரூபாய், மற்றும் பங்க் கிளாஸ் இருக்கைக்கு 2630 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை துறைமுக நிர்வாகம் தனியார் நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இருக்கிறது.
மேலும் சென்னையில் இருந்து, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சொகுசு கப்பல்களை இயக்கும் வகையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம், 'லிட்டோரல் குரூஸ் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது ஐ.நாவின் பாரம்பரிய இடங்கள் சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளதாலும், பயணியர் விரும்பும் வகையிலான கட்டணம், சுற்றுலாப் பயணியரை நட்புடன் உபசரிப்பதாலும், சென்னை துறைமுகம் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. எனவே பயணியர் சேவையை மேம்படுத்தும் வகையில், லிட்டோரல் குரூசெஸ் லிமிடெட் நிறுவனத்துடன், சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுனில் பாலிவால் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து திரிகோணமலை, கொழும்பு, மாலத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும், 800 முதல் 1,200 பயணியரை ஏற்றிச்செல்லும் வகையில் சொகுசு கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. அத்துடன், 22 - 30 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு படகுகளின் இயக்கமும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் துவங்க உள்ளது. இதனால் சென்னை துறைமுகம் மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் துறைமுகமாக மாறும். சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் அதிக பயனும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என கூறப்படுகிறது.