சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபில் 2024 சீசனின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆம், இந்த ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அனிடின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. ஐபிஎல் 17வது சீசன் தொடங்குவதற்கு முன்பே எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மார்ச் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு எதிர்க்கொள்ள உள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் தோனி ஒரு வீரராக விளையாடுவார். தோனி தனது முடிவால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சிஎஸ்கே தனது புதிய கேப்டனாக ரிதுராஜ் கெய்க்வாட்டை அறிவித்துள்ளது.
17-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்ட நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல் கோப்பை உடன் அணிகளின் கேப்டன்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது. அதில், 9 கேப்டன்கள் உடன் பஞ்சாப் அணியின் துணை கேப்டன் ஜிதேஷ் ஷர்மா என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.
2020 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட், ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 52 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 39.07 சராசரியிலும் 135.52 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1797 ரன்களை குவித்துள்ளார். 2021 சீசனில் ருத்தரதாண்டவம் ஆடிய ருது 16 போட்டிகளில் 45.35 என்ற அற்புதமான சராசரியில் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வாகை சூடினார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் எம்எஸ் தோனி. இது தவிர, தோனி ஐந்து முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தோனியின் தலைமையில் மொத்தம் 10 இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே விளையாடியுள்ளது. அவரது தலைமையின் கீழ் சென்னை அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம் 2008, 2012, 2013, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திந்தத்து குறிப்பிடத்தக்கது.