சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டத்தை அடுத்து மூடி சீல் வைக்க உத்தரவு..!
நம் சென்னையில் அமைந்துள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் வரலாறு உண்டு; பாரம்பர்யப் பெருமை உண்டு. அப்படிப் பழம் பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை. ஆசியாவின் மிகப் பழைமையான மருத்துவமனைகளில், ஸ்டான்லி மருத்துவமனையும் ஒன்று. 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான மருத்துவ சேவையைச் செய்துவருகிறது.வட சென்னைப் பகுதி மக்களால் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. 1782-ம் ஆண்டில் மணியக்காரர் என்ற செல்வந்தர் ராயபுரத்தில் வசித்துவந்தார். பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. பல இடங்களில் சிற்சில போர்களும் நடந்துகொண்டிருந்தன. போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் உணவளிக்க, தன்னுடைய தோட்டத்தில் ஒரு சத்திரத்தை கட்டினார் மணியக்காரர். அங்கே, பலருக்குக் கஞ்சி வழங்கினார். நாளடைவில் அந்த இடம் ‘கஞ்சித்தொட்டி’ எனப் பெயர் பெற்றது. அந்த இடத்தில் 1799-ம் ஆண்டில் ‘ஜான் அண்டர்வுட்’ என்ற மருத்துவர், சிறிய மருத்துவமனையை ஆரம்பித்தார். 1808-ம் ஆண்டில் அந்தச் சத்திரத்தையும் மருத்துவமனையையும் ஆங்கில அரசு ஏற்று நடத்தியது. பின்னர், 1910-ம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு, ‘ராயபுரம் மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1933-ம் ஆண்டில், அப்போது சென்னை மகாண ஆளுநராக இருந்தவர் ஜார்ஜ் ஃபிரெடரிக் ஸ்டான்லி (Sir George Frederick Stanley), இங்கே, மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். அதன் பிறகு, ‘அரசு ஸ்டான்லி மருத்துவமனை’யாக உருமாற்றம் அடைந்தது. இப்போது, 1,661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள், என மிகப் பெரிய அளவில் வளர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. இந்த மருத்துவமனையால், தினசரி 1,585 உள்நோயாளிகளும் 5,000 வெளிநோயாளிகளும் பயனடைகின்றனர். இப்பேர்பட்ட ஹாஸ்பிட்டல் கேண்டீனில் இருந்த திண்பண்டங்களை எலி சாப்பிட்ட நிலையில் அவற்றை பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விற்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கார சென்னையின் அடையாளமான ஸ்டான்லி மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சைகளுக்குத் தேவையான எண்ணற்ற உபகரணங்கள் இருக்கின்றன. 'ரேடியோதெரபி' (Radiotherapy), 'மேக்னடிக் ரிசோனான்ஸ் ஆஞ்சியோகிராம்' (Magnetic Resonance Angiogram), 'சி.டி ஸ்கேன்' (CT Scan), டிஜிட்டல் எக்ஸ்ரே, 'காத் லேப்' (Cath lab), 'எக்ஸ்ரே' (X ray), 'அல்ட்ரா சோனோகிராஃபி' (Ultra Sonography),'மேமோகிரஃபி' (Mammography), 'டயாலிஸிஸ்' (Dialysis), 'லித்தோகிராஃபி' (Lithography), 'வென்டிலேட்டர்ஸ்' (Ventilators)... என எண்ணற்ற நவீன சிகிச்சை சாதனங்கள் இருக்கின்றன. நோயாளிகளின் வசதிக்காக மயக்கவியல், இதயம், நரம்பியல், சிறுநீரகவியல், குழந்தைகளுக்கானச் சிகிச்சை ... எனப் பல துறைகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இங்கு, தீவிர அறுவைச்சிகிச்சைக்காக மட்டுமே 20 ஆபரேஷன் தியேட்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு உண்டு. குறிப்பாக, 'வாஸ்குலர் ' (Vascular)அறுவைச்சிகிச்சை , இதய அறுவைச்சிகிச்சை (Cardiothoracic surgery), சிறுநீரக அறுவைச்சிகிச்சை (Urology), கண், காது, தொண்டைச் சம்பந்தப்பட்ட அறுவைச்சிகிச்சை (ENT), கண் அறுவைச்சிகிச்சை (Ophthalmology) என தனித்தனியாக உள்ளன. மயக்க மருத்துவத் துறையில் 36 'இசிஜி' (ECG) மெஷின்கள் இருக்கின்றன. மேலும் சர்க்கரைநோய், யோகா, இயற்கை மருத்துவம் எனப் பல துறைகள் உள்ளன. 'நாங்கள் உங்களுக்கு உதவலாமா?' ( MAY I HELP YOU ) எனும் போர்டுக்குக் கீழே இளஞ்சிவப்பு நிறத்தில் கோட் அணிந்த பெண்கள் நோயாளிக்கு உதவுவதற்காக அமர்ந்திருக்கிறார்கள். சென்னை மக்கள் மட்டுமல்லாது, பிற மாவட்ட மக்களும், பிற மாநில மக்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தனியாருக்கு சொந்தமான கேண்டீன் உள்ளது. அங்கு நேற்று விற்பனை செய்யப்படும் உணவுப்பொருள் திண்பண்டங்களான பஜ்ஜி, வடைகளின் மீது எலி ஏறிச்செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதனை அடுத்து கேண்டீன் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உரிமையாளரோ, “இது விற்பனைக்கான பொருள் அல்ல. நாங்கள் அதைவிற்பனை செய்யமாட்டோம்” என விளக்கமளித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளத பொதுமக்கள் கேண்டீன் உரிமையாளரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் நடவடிக்கை எடுத்த பாலாஜி கேண்டீனை மூட உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைக்கு நிகரான தூய்மையுடனும், உயர்தர சிகிச்சை வசதிகளுடன் அரசு மருத்துவமனைகள் தற்போது இயங்கி வருகின்றன. ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனைகளை குறை கூற முடியாத அளவுக்கு தான் அவற்றின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது நடந்திருக்கும் சம்பவமானது மீண்டும் அரசு மருத்துவமனைகள் அலட்சியமான மனப்பான்மைக்கு திரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேண்டின்களையும் சுகாதாத்துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
நிலவளம் ரெங்கராஜன்