சென்னை பெருமழை வெள்ளமும் குற்றவாளிகளும்!
‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’ -என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வான் சிறப்பு பற்றிப் பாடிய வள்ளுவனுக்குக் கோட்டம் அமைத்தது நுங்கம்பாக்கம் ஏரிப்பகுதியில். ஆம், அங்கிருந்த ஏரியைத் தூர்த்துத்தான் 18.09.1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான கால்கோள் விழா நடத்தப்பட்டது. அந்த விழா நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் நடத்தப்படுவதாகத்தான் அதற்கான அழைப்பிதழிலேயே அச்சிடப்பட்டிருந்தது. அந்த ஏரி தூர்க்கப்படும்போது, அங்கு தேங்க வேண்டிய மழைநீர் வேறெங்கே போகும் என்கிற விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அன்று யாருக்குமே இருக்கவில்லை.
நிலமதிப்பில் எக்கச்சக்கமாக உயர்ந்து கிடக்கும் இன்றைய வேளச்சேரி, 1979-ல் நான் சென்றபோது காட்டுப்பகுதிபோல்தான் என்னை மிரட்டியது. அன்று அங்கே பரந்து விரிந்து கிடந்த வேளச்சேரி ஏரி, அரசாங்கத்தின் அனுமதியோடு கட்டப்பட்ட வீடுகளாலும் கட்டடங்களாலும் சுருங்கிச் சுருங்கி, இன்று ஒரு சிறு குட்டைபோலாகிவிட்டது. வழக்கமாக அங்கே தேங்கிக் கொண்டிருந்த மழை நீர் இன்று எங்கே போகும்? போதுமான வடிகால் வசதி இல்லாதபோது அங்குள்ள வீடுகளில்தானே தஞ்சமடையும்.
1964-ல் நிறுவப்பட்ட ‘அசோக் பில்லர்’ காரணமாகத்தான் அதைச் சுற்றி இன்றைய அசோக் நகர் உருவாக ஆரம்பித்தது. ஓவியர் உமாபதி அங்குதான் வீடு கட்டியிருந்தார். 1980-ல் அவரை நான் எப்படி பார்க்கச் சென்றேன் தெரியுமா? அசோக் பில்லரிலிருந்து ஒற்றையடிப் பாதையில்தான் நடந்து சென்றேன். அன்று சாதாரணர்கள் சைக்கிள்தான் வைத்திருந்தார்கள். அன்றைய நடுத்தர மக்களின் கனவே, ஒரு ரெப்ரிஜிரேட்டர், கருப்பு-வெள்ளை டிவி, ஒரு டிவிஎஸ் 50. கொஞ்சம் வசதியானவர்கள் அனைவரும் ஸ்கூட்டர்தான் வைத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களைப் பார்ப்பதே அபூர்வம். அன்று மும்மூர்த்திகளைப்போல் வலம் வந்து கொண்டிருந்த மாலனும் பாலகுமாரனும் ஸ்கூட்டர்தான். என்ன காரணமோ, மூவரில் சுப்ரமண்யராஜு மட்டுமே மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அன்று கார் வாங்குவது பற்றி பணக்காரர்கள் தவிர, வேறு யாரும் யோசிக்கவேயில்லை.
அதனால், சாலைகளில் நகரப் பேருந்துகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், இடையிடையே ஆட்டோக்கள், அபூர்வமாக டாக்ஸிகள். கார்களை பார்ப்பதே அரிதாகத்தான் இருந்தது. போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சாலைகளில் தைரியமாக நடக்க முடிந்தது. சாலைகளின் தாராளம் போலவே நீர்வழிப் பாதைகளும் நெரிசலின்றியே இருந்தன. கரணம், மக்கள் தொகை.
அடியேன் சென்னையில் அடியெடுத்து வைத்த 1979-ல் கூட தெற்கிலிருந்து வருவோருக்கு, சென்னையின் நுழைவாயில் சைதாப்பேட்டைதான். கிண்டி புறநகர்தான். சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி செல்ல, அண்ணா சதுக்கத்திலிருந்து கிண்டி தொழிற்பேட்டைவரை ஓடிய 45பி எண்ணுள்ள ஒரேயொரு நகரப் பேருந்துதான். மற்றவை ரூட் பஸ்கள் என்பதால், அவை சைத்தாப்பேட்டையில் நிற்குமே தவிர, கிண்டியில் நிற்கா. மின்சார ரயிலே கதி. கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிய இயந்திரங்களைவிட பந்தைய மைதானத்தில் ஓடிய குதிரைகளே அதிகம் என்பதால் அங்கே சூதாடுவோரே ஈக்களாய் மொய்ப்பார்கள். அவர்களால், கிண்டி மின்சார ரயில் நிலையம் முழுக்க குதிரைப் பந்தயம் பற்றிய அட்டவணை நோட்டீஸ்களே சிதறிக் கிடக்கும். பந்தய மைதானத்தில் ஓடும் குதிரைகளின் குலமுறைகிளத்துப்படலம் பற்றியே ஒருவருக்கொருவர் அலசி ஆராய்வார்கள். நம் அனைவருக்கும் நமது மூன்றாம் தலைமுறையான பாட்டன், பாட்டியைத் தெரியும். நம்மில் எத்தனை பேருக்கு நான்காம், ஐந்தாம் தலைமுறைகளான பூட்டன்- பூட்டி, ஓட்டன் - ஓட்டிகளைத் தெரியும்? ஆனால் அவர்களுக்கோ ஓடும் குதிரைகளின் ஏழு தலைமுறைகளும் விரல் நுனியில் இருக்கும். இதன்காரணமாகவே, சாதாரணர்கள் கிண்டி போக நேரிடும்போது, தெரிந்தவர்கள் யாரும் தங்களைப் பார்த்துவிடுவார்களோ என்கிற கூச்சத்தோடுதான் செல்வார்கள். பந்தயம் இல்லாத நாள்களில் ரயில் நிலையம் மட்டுமல்ல; கிண்டியே வெறிச்சோடித்தான் கிடக்கும். மக்கள் நெரிசலில்லாத காலம் அது என்பதைச் சொல்லவே இத்தனை இராமாயணம்!
அன்றைய மழைக் காலங்களில், அடையாற்றில் ஓடும் வெள்ளத்தை சைதாப்பேட்டையிலுள்ள மறைமலை அடிகளார் பாலத்தின்மீது நின்றபடி மக்கள் ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பார்கள். ஆற்றங்கரையோரத்திலிருந்த சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டதைத் தவிர, வேறெந்த பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்பட்டதில்லை. ஒரேயொருமுறை மட்டும் (1985 என்று நினைவு) அடையாற்றில் கரைபுரண்ட வெள்ளம், ராமாபுரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆர் வீட்டுக்குள் நுழைந்து, முதல்வரான அவரையே மனைவி ஜானகி அம்மையாரோடு கன்னிமாரா ஓட்டலில் தஞ்சம் புக வைத்தது. காரணம், அன்று அரசு மட்டும்தான் ஆக்கிரமித்ததே தவிர, மக்கள் ஆக்கிரமிக்க அரசு அனுமதி வழங்கவில்லை.
சொல்லப்போனால் அப்போதுதான அடுக்குமாடிக் குடியிருப்புகள் பற்றிய சிந்தனையே வர ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில், சென்னையில் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த பெரிய கட்டடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று அண்ணாசாலையிலுள்ள எல் ஐ சி கட்டடம். மற்றொன்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் கிண்டியில் கட்டப்பட்ட ஸ்பிக் பில்டிங். அன்றைக்கு, சாலைப்போக்குவரத்து வசதிக்கான பணிகள் நடந்து பார்த்திருக்கிறேனே தவிர, நீர்வழிப் பாதைகளை அகலப்படுத்துவதற்கான பணிகள் நடந்து பார்த்ததேயில்லை. அன்று அரசுக்கும் சரி, மக்களுக்கும் சரி, நிகழ்காலம் பற்றிய சிந்தனை மட்டும்தான் இருந்ததே தவிர, எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லை.
வெட்கத்தை விட்டுச் சொன்னால், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வே அன்றைக்கு அரசுக்கும் இல்லை; மக்களுக்கும் இல்லை. இருந்திருந்தால் கூவம் நதியைச் சாக்கடையாக்கி இருப்போமா? கொசுக்கள்தான் படையெடுக்குமா? என்றாலும் கூவத்தின் உண்மை வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? திருவள்ளூர் மாவட்டத்திலுள்ளது கூவம் கிராமம். கூவம் நதி உற்பத்தியாகும் இந்த கிராமம், சென்னையிலிருந்து 72 கி.மீ தூரத்திலுள்ளது. அங்குள்ள திரிபுரந்தகேசுவரர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. அக்கோவிலுக்கான அபிஷேக நீர் இன்றைக்கும் கூவம் நதியிலிருந்துதான் தினந்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது.
கூவம் நதியோரமுள்ள கோமளீஸ்வரம்பேட்டை (இன்றைய சிந்தாதிரிப்பேட்டை) யில்தான் வள்ளல் பச்சையப்ப முதலியார் வசித்து வந்தார். அவர் தினசரி நீராடியது, கூவம் நதியில்தான். சென்னையிலிருந்த ஆங்கில பிரபுக்கள் கூட கூவத்தில் குளித்திருக்கிறார்கள். அடுத்து, அடையாறு. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலுள்ள மணிமங்கலத்தில் உற்பத்தியாகும் இது, 42.5 கிமீ பயணம் செய்து, சென்னை அடையாறு பகுதியில் கடலில் கலக்கிறது. மூன்றாவதாக கொசஸ்தலையாறு. ஆந்திராவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் உற்பத்தியாகும் இது 136 கி.மீ நீளம் கொண்டது. ஆந்திராவிலிருந்து நமது வேலூர் மாவட்டத்தில் புகுந்து, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, சீமாபுரம் அணைக்கட்டு, வள்ளூர் அணைக்கட்டு ஆகியவற்றை நிரப்பி, பாசனத்திற்குப் பயன்படும் இது, கடைசியாகத்தான் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. அங்கே நிரம்பிய பிறகுதான் சென்னைக்குள் நுழைந்து, இறுதியாக எண்ணூரில் கடலில் கலக்கிறது.
தேம்ஸ் என்னும் ஒற்றை நதி ஓடும் லண்டன் மாநகரமே அத்தனை அழகாயிருக்கும்போது, மூன்று நதிகள் ஓடும் சென்னைப் பெருநகரம் எத்தனை அழகாயிருக்க வேண்டும்! நதிகளைப் புனிதமாக வணங்கிய நாம், இன்று அவற்றை மனிதமாகக்கூட பார்க்காமல் சாக்கடையாக்கியது எப்படி? கீழடி அகழ்வாராய்ச்சி என்ன சொல்லுகிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது மூதாதையர்கள், கழிவுநீர்ப் பாதைகளோடு நகரங்களை உருவாக்கிய நிலையில், இன்று அவர்களை விடவும் நாம் சிறப்பாகச் செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
நாம் இயற்கையை வழிபட்டுக் கொடிருந்தவரையில் இயற்கை பாதுகாக்கப்பட்டது. என்றைக்கு ஒரு சிறு கூட்டம் தங்களின் சுயநலத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் இயற்கையோடு இரண்டரக் கலந்திருந்த கடவுளைத் தனியாகப் பிரித்தெடுத்து வந்து கோவில்களுக்குள் குடியமர்த்தியதோ, அன்றிலிருந்துதான் அழிவுகாலம் ஆரம்பமானது. புனிதமாக வணங்கப்பட்ட நதிகளில், எந்தவிதக் குற்ற உணர்வுமில்லாமல சாக்கடைகளும் ஆலைக் கழிவுகளும் கலக்கப் பட்டன. இப்படித்தான் சென்னையில் ஓடும் மூன்று நதிகளும் சாக்கடைகளாயின.
கலைஞர் மு. கருணாநிதி காலத்தில் கூவம் நதியைச் சுத்தப்படுத்துவதற்காக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. படகுத் துறைகள் கூட கட்டப்பட்டன. மிக நல்ல திட்டம்தான். என்றாலும் நதியில் கலக்கும் சாக்கடைகளைத் தடுக்காமல் படகுத்துறை கட்டி என்ன பயன்? திட்டம் படுதோல்வியில் முடிந்ததால், ‘அது பணம் பார்ப்பதற்காகவே தீட்டப்பட்ட ஒரு கோமாளித் திட்டம்’ என்கிற கேலிக்கும் கிண்டலுக்கும்தான் உள்ளானது. உண்மையைச் சொல்லப்போனால், சென்னைப் பெருநகரின் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், அது திட்டமிடப்படாத நகரமாகவே வளர்ந்ததுதான். சிறுசிறு கிராமங்களுக்கான இடைவெளிகளில் மக்கள் தங்களிஷ்டம்போல் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசாங்கமும் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாமல், அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. மக்களோடு சேர்ந்து அரசும் நீர்நிலைகளைத் தூர்த்து கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது. இப்படித்தான் சென்னை நகரம் மாநகரமாகி, பெருநகரமானது.
ஆனால், கடல் மட்டத்திற்கும் சென்னைக்குமான உயரம் மிக மிகக் குறைவு என்பதால், இது மாநகரமாகவும் பெருநகரமாகவும் வளர்வதற்கான தகுதியற்றது என்று வல்லுநர்கள் சொன்னதையெல்லாம் ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தவேயில்லை. அந்த ஒருவர் யார் தெரியுமா? அவர்தான் எம்ஜிஆர். ஆம்; அவர்தான் சென்னையின் நெரிசலையும் குடிநீர் பிரச்னையையும் தவிர்ப்பதற்காக,1983-ல் தமிழ்நாட்டின் தலைநகரைச் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை முன்வைத்தார். அது தமிழ்நாட்டின் மையத்திலிருப்பதால், அனைத்து மக்களும் வந்துபோக வசதியாக இருக்குமென்றார். அதற்குக் கலைஞர் முதல் அத்தனை எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் மட்டுமா? ‘துக்கடா’ பத்திரிகையாளனான என்னிலிருந்து ‘படா’ பத்திரிகையாளரான ‘துக்ளக்’ சோ வரை அத்தனை பத்திரிகையாளரும் எம்ஜிஆரை இஷ்டத்திற்கும் கிண்டலடித்தோம். எதிர்ப்புக்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறியாகத்தான் இருந்தார். என்றாலும் வேறு பல காரணங்களால் அவரால் செயல்படுத்த முடியாமலே போய்விட்டது. எம்ஜிஆருடைய திட்டம் அன்று செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்றைய சென்னையில் இத்தனை பிரச்னைகளும் இருந்திருக்காது. நெரிசலும் இருந்திருக்காது. அன்று எம்ஜிஆரை கிண்டலடித்ததற்காக இன்று வருந்துகிறேன். இன்றுகூட வருந்தாமலிருந்தால் அது மகா பாவமாகிவிடும்.