சென்னை பையன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!
கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னை பையன் அஸ்வின். தான் வீசும் ஒவ்வொரு திருப்பத்திலும் (டர்ன்), உறுதிப்பாடு மற்றும் திறமையின் கதையை பின்னுகிறார். அவரின் இந்த சாதனை ஓர் உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது. மாயாஜால சுழலால் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துகள். இன்னும் அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் பெற வேண்டும் எங்களின் ஜாம்பவானே!" என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரவிச்சந்திர அஸ்வின் படைத்துள்ளார்.
98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தினார்.
அதேநேரம், இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இரண்டாவது பவுலர் ஆனார் அஸ்வின். அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,166 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 3வது பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார்.