ரயில்வே ஆப்-பில் மாற்றம்: பயணிகள் வரவேற்பு!.
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுக்கும் யூடிஎஸ் செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நடைமேடை, ரயில் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடியும். இதற்கு பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற டிக்கெட் கவுன்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் 'யூடிஎஸ்' என்ற மொபைல் போன் செயலி பயன்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை பெற முடியும்.
இருப்பினும் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த செயலியை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஏனெனில் வெளிப்பகுதியில் இருந்து டிக்கெட் பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாட்டு எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதன் காரணமாக யூடிஎஸ் செயலி வாயிலாக ரயில் நிலையத்தின் அருகே அல்லது வீட்டில் இருந்தே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்து விட வேண்டும். மேலும், ரயில் நிலையத்தின் உள்பகுதியில் டிக்கெட் எடுக்க முடியாது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ,``வெளிப்பகுதியில் யூடிஎஸ் செயலி வாயிலாக புறநகர் ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் ஜியோ பென்சிங் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது, இந்த கட்டுப்பாடுகளை ரயில்வே நீக்கியுள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை செயலி வாயிலாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும்.`` என்றனர்