சண்டிகர் மேயர் தேர்தலில் கோல்மால் - சுப்ரீம் கோர்ட் அதிரடி!
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்கடுமையாக கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாக்ஷி ஆஜராகவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டாம்; ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை வைத்து மறு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அதிகாரி இத்தேர்தலை நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
போன ஜனவரி மாதம்.30ம் தேதி சண்டிகர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 36 இடங்களில், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப்குமார் 20 வாக்குகளை பெற்றிருந்தார். அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று கூறி, பாஜக வேட்பாளர், வெற்றிப் பெற்றதாக தேர்தல் அதிகாரி அனில் மாஷி அறிவித்தார். இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக, தேர்தல் அதிகாரி வாக்குசீட்டுகளில் திருத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மேயர் தேர்தல் வெற்றியை கண்டித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும் இந்த தேர்தல் முடிவை ரத்து செய்யக்கோரியும், மேயரான மனோஜ் சோன்கர் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரியும் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் சிங் பஞ்சாப்- ஹரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்ததைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை கடந்த 5-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வாக்குச் சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சிதைப்பது விடியோவில் தெளிவாக தெரிகிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்ற நீதிபதிகள், பிப்.7 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநகராட்சி கூட்டத்தையும் ஒத்திவைக்க உத்தரவிட்டதோடு, தேர்தல் அதிகாரி இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், தேர்தல் அதிகாரி அனில் மாஷி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை பார்த்து, “நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளிக்கவில்லை என்றால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும். இது ஒரு மிகவும் முக்கியமான மற்றும் தீவிரமான விஷயம். தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து நீங்கள் செய்தவற்றை வீடியோவில் பார்த்தோம். வாக்குச் சீட்டுகளில் எழுதும் போது கேமராவைப் பார்த்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு ஏன் எழுதினீர்கள்” என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர்.
இதையடுத்து, மேயர் தேர்தலில் 8 வாக்குச்சீட்டுகளில் x என குறிப்பிட்டு செல்லாத வாக்குகளாக மாற்றியதை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்துள்ளது. மேலும், தேர்தலில் பதியப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுகளையும் நாளை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.