சக்கர வியூகம் - ரகசியங்கள் இதோ!
சக்கர வியூகம் என்பது நாம் காண்பதெல்லாம் உண்மை அல்ல, உண்மையை நாம் காண்பதில்லை, என்ற தத்துவத்தின் அடிப்படையில் இருக்கும். உள்ளே சென்றவர் நாம் வெளியே வந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணி போர்புரியும் பொழுது, அவர் மேலும் மேலும் உள்ளே இழுக்கப்படுவார்..இது ஒரு போர் தந்திர முறை....!அதாவது பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன. அதில் ஒன்றுதான் ‘சக்கர வியூகம்’ எனப்படுகிறது. இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைக் (சக்கர) கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம். இதில், ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் (Helix) சுழன்று அமையும். அது உள்ளே செல்லச் செல்ல இறுக்கமாக மூடிக் கொள்ளும். ஒரு வீரர் இதன் உட்பகுதிக்கு முன்னேறும்போது பெரும் குழப்பமும், சோர்வும் அடைவார். இதன் இறுதிச் சக்கர அடுக்கில் தலை சிறந்த வீரர்கள் உள்ளே வருபவரைக் கடுமையாகத் தாக்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
சக்கரம் என்றால் வட்டம்.வியூகம் என்றால் 1. Division of an army, படை வகுப்பு ; 2. multitude, collection, திரள் ; 3. herd, flock, விலங்கின் கூட்டம் என்று பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. பொதுவாக வியூகம் என்ற சொல்லுக்கு படை அணி வகுப்பு என்று பொருள் கொள்ளலாம்..!சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்ற பெயரும் உண்டு!
முன்னரே சொன்னது போல் மகாபாரதத்தில் சக்கர வியூகம் மிக முக்கியதுவம் வாய்ந்தது. சிலர் இந்த வியூகத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் அர்ஜுனன் மட்டுமே இந்த வியூகத்தை உடைத்து வெற்றிகண்டதாக மகாபாரத்தம் சொல்கிறது!சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். வியூகத்திற்குள் ஒருவர் நுழைந்து விட்டால் வீரர்களைக் கொல்லக் கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்றுகொண்டிருப்பர். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, திசை தெரியாமல் குழம்பி விடுவார்.
சக்கரவியூகத்தை முறியடிக்கும் கணக்குத் தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும்!மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்கப்பட்டதாகவும், இரு முறை அர்ஜூனன் இதை உடைத்து வெற்றிபெற்றதாகவும், ஒரு முறை இந்த சக்கர வியூகத்தினை அபிமன்யூ உடைத்துச் சென்று, பின்பு வெளியேறத் தெரியாமல் மாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது!
பாரத தேசத்தில் உள்ள கோயில்களின் சிற்பக்கலை அழகு நம்மை மெய் சிலர்க்க வைப்பதுடன் பல உண்மைகளையும் கூறக் கூடியது. சக்கர வியூகத்தைப் பற்றிய ஒரு சிற்பத்தை கர்நாடக மாநிலம், ஹலபேடு என்னும் ஊரிலுள்ள ஹொய்ஸ்சலேஸ்வரர் கோயிலில் காணலாம்.
12ம் நூற்றாண்டில்(பொது ஆண்டு) ஹொய்ஸ்சல அரசனான விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்ட ஹொய்ஸ்சலேஸ்வரர் சிவன் கோயிலை அந்த ஊரின் பெயரைக் கொண்டு ஹலபேடு கோயில் என்றும் அழைக்கிறார்கள்!
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்