செயற்கை நுண்ணறிவுகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
சமீப காலமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு படைப்புகள், தயாரிப்புகள் பூதாகரமாக வளர்ந்து வருகின்றன. அவற்றின் மீதான கவர்ச்சியில், நேர்மறையை விட எதிர்மறையிலான பயன்பாடுகளே அதிகரித்து வருகின்றன. இதனால் அவற்றை பயன்படுத்துவோர் முதல் புழங்கும் பொதுவெளி வரை ஏஐ படைப்புகள் பல தரப்பையும் பாதிக்கச் செய்கிறது. சட்டம் ஒழுங்கு சார்ந்தும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், அரசாங்கத்திடம் உரிய ஒப்புதலைப் பெறுவது அவசியம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்றைய தினம்(மார்ச் 2) அறிவுறுத்தி உள்ளார்.
"ஏஐ மாடல்களை உருவாக்கும் நிறுவனங்கள் அவற்றை நேரடியாக பயனர் சந்தைக்கு எடுத்துச் செல்வதைவிட இந்த ஏற்பாட்டே சிறந்ததாக அமையும். பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் பொறுப்புத் துறப்புகள் இல்லாமல் அவை நடப்பதை அரசு விரும்பவில்லை. நம்பத் தகுந்தவை மற்றும் தகாதவை குறித்து நுகர்வோர் முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் இந்த ஏற்பாடு உதவும்” என, அரசின் தணிக்கை தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
இவை குறித்து அரசு விடுத்துள்ள அறிவுறுத்தலை பின்பற்றி டெக் நிறுவனங்கள் தங்கள் இணங்கலை அடுத்த 15 நாட்களுக்குள் உறுதி செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. டெக் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஏஐ உள்ளடக்கம் அல்லது மெட்டாடேட்டா சார்ந்தது என்பதை, தயாரிப்பின் மேலாக பார்வைக்கு அடையாளப்படுத்துவதும் இனி அவசியமாகிறது. மேலும் தங்களது வெளியீடு பிழை ஏற்படக்கூடிய மாதிரியாக இருப்பின் அல்லது சோதனையின் கீழ் இருப்பின் அவை தொடர்பாகவும் தயாரிப்பின் மீது அடையாளப்படுத்துவது கட்டாயமாகிறது.
அதனை தனியாக குறிப்பிட்டு அரசின் அனுமதியை பெறுவதும் அவசியம். மேலும் இது பிழை ஏற்படக்கூடிய தளம் என்று பயனரின் உறுதிப்படுத்தல் மற்றும் ஒப்புதலை வெளிப்படையாகப் பெறவும் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயனர் முன்னெச்சரிக்கை அடையவும் வாய்ப்பாகிறது. அசுரப் பாய்ச்சல் காட்டும் ஏஐ தயாரிப்புகளுக்கு கடிவாளம் இடவும், அவற்றை பயன்படுத்தும் பொதுமக்களை காக்கவும் அரசின் முன்னெடுப்பாக இந்த கட்டுப்பாடுகள் அமலாக இருக்கின்றன.