மொபைல் நெட்வொர்க்கை கையகப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம்!
இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்ப காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசர சூழல் போன்ற காரணங்களுக்காக, 'மொபைல்போன் நெட்வொர்க்' உட்பட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை, மத்திய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய தொலைத்தொடர்பு மசோதா,2023 இன்றை தாக்கல் செய்து நிறைவேற்றியும் கொண்டது. இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர நிலை, பேரிடர் நிர்வாகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, மொபைல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை, ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு அல்லது அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள் கையகப்படுத்த வழி ஏற்பட்டுள்ளதாம்.
இதைத் தவிர, அச்சுறுத்தலாக உள்ள தகவல் பரிமாற்றங்களை தடுத்து நிறுத்துவது, தொலைத் தொடர்பு சேவையை துண்டிப்பது போன்ற அதிகாரமும் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்து கொள்ள முடியும். ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அனுப்பும் செய்திகளில் அரசுகள் தலையிடாது. அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பை மீறுவதாக இருந்தால் மட்டும் அதில் அரசுகள் குறுக்கிட முடியும்.
கடந்த இரு தினங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘தொலைத் தொடர்பு மசோதா 2023’ நிறைவேறியுள்ளது. நவீன காலத்துக்கு ஏற்ப தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், குற்றங்களுக்கான வாய்ப்புகள் உட்பட நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் நோக்கிலும் புதிய மசோதா வழிசெய்கிறது. தொலைத்தொடர்பு சேவை முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு வரை பல்வேறு புதிய மாற்றங்களை புதிய தொலைத்தொடர்பு மசோதா ஒருங்கிணைத்துள்ளது.
’தொலைத் தொடர்பு மசோதா 2023’ சிம்கார்டு மோசடிகளைத் தடுக்கவும், தவிர்க்கவும் முன்னுரிமை செய்கிறது. ஒருவரது செல்போன் எண் என்பது, அவரது வங்கிக்கணக்கு தொடங்கி பல்வேறு தனியுரிமை தரவுகளை அணுக உதவக்கூடியது. அந்த செல்போன் எண்ணை மோசடியாக கைக்கொள்வதன் மூலம், பெரும் குற்றங்கள் நிகழ காரணமாகிறது. தனிநபருக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் விதமாய் சிம் கார்டு விற்பனையில் தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.இதன்படி சிம் கார்டு வாங்க விரும்புவோருக்கான கேஒய்சி நடைமுறைகள் மேலும் கெடுபிடிகளை சேர்க்கின்றன. இன்னொருவரின் அடையாளத்தை பயன்படுத்தி, அவரது சான்றுகளை சமர்ப்பித்து, முறைகேடாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். எவரேனும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதே சமயம் தொலைபேசியை சட்டவிரோதமாக ஒட்டுகேட்போருக்கு மூன்று ஆண்டுகள் சிறை, 2 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தின்படி, தொலைத் தொடர்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் அமைப்பும், ஆணையமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதுதொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ’சிம் பாக்ஸ்’ கொண்டு முறைகேடாக தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துவோருக்கு, 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இவை உட்பட பல்வேறு புதிய மாற்றங்களை உள்ளடக்கிய ‘தொலைத் தொடர்பு மசோதா 2023’ மசோதா, புதன் அன்று மக்களவையிலும், வியாழன் அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை அறிமுகம் செய்ததும், குரல் வாக்கெடுப்பின் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.