இங்கிலாந்து பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை!- பிரதமர் ரிஷி அதிரடி!
சர்வதேச அளவில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்து கின்றனர். அதிலும், பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான , 'ஆப்ஸ்' எனப்படும் செயலிகளைபதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டருக்கு மாற்றாக அதை பயன்படுத்துகின்றனர்... மாணவ, மாணவியர்களில், 16 சதவீதத்தினர் மட்டுமே, மொபைல் போனை, பேசுவதற்காக பயன்படுத்துகின்றனர்....!இப்போக்கை மாற்ற பல்வேறு நாடுகள் ஆலோசித்து வரும் சூழலில் இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்திலும் செல்போன்களுக்கு தடை விதித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.
வளரிளம் பருவத்து மாணவர்களின் கல்விக்கு செல்போன் எவ்வாறு ஊறு விளைக்கிறது என்பது சொல்லித் தெரிவதல்ல. ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கம் என பலதரப்பிலும், சிறார் கையிலிருக்கும் செல்போன்கள் பெரும் சவாலாக மாறி வருகின்றன. அதிக நேரம் ஸ்மார்ட்போன் திரைகளை பார்ப்பது பார்வைத்திறன், மூளை வளர்ச்சி, மனப்பாங்கு உள்ளிட்டவற்றை நேரிடையாக பாதிக்கின்றன. இவற்றுக்கு அப்பால் செல்போனில் கிடைக்கும் கட்டற்ற இணையம் அவர்களை தவறாக வழி நடத்தவும் காரணமாகிறது. சூது, பாலியல், போதை, வன்முறை என புதைகுழிகளில் சிக்கவும் வாய்ப்பாகிறது. இவற்றைத் தடுக்க வீடுகளில் பெற்றோர் மேற்பார்வையில் சிறாரின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம். ஆனால் வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் இன்னொரு விரலாக சேர்ந்திருக்கும் செல்போனை முடக்க அரசாங்கமே தலையிட வேண்டியதாகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், கலாச்சார பின்னணியிலான குலையாத குடும்ப அமைப்பு காரணமாக, பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிதாகிறது. பெரும்பாலான பள்ளிகளில் செல்போன் பயன்பாடு என்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளில் செல்போனை தவிர்க்க இயலாத பாதுகாப்பு அம்சமாகவும், தகவல் தொடர்புக்கான அத்தியாவசிய சாத்தியமாகவும் பார்க்கிறார்கள். எனவே அத்தனை எளிதாக பள்ளிகளில் செல்போனை தடை செய்வது இயலாமல் போனது.
We know how distracting mobile phones are in the classroom.
Today we help schools put an end to this. pic.twitter.com/ulV23CIbNe
— Rishi Sunak (@RishiSunak) February 19, 2024
சிறார் மீதான அதிகரிக்கும் செல்போன் வாயிலான பாதிப்புகளை அடுத்து, ஐரோப்பிய நாடுகள் வரிசையில் இங்கிலாந்தும் தற்போது பள்ளிகளில் செல்போனுக்கு தடை விதித்திருக்கிறது. இதனை சுவாரசியமான வீடியோ ஒன்றின் வாயிலாக பிரதமர் ரிஷி சுனக்கே, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ’மூன்றில் ஒரு மாணவரின் பள்ளிக்கல்வி செல்போனால் சீரழிவதாக’ ஆய்வு தரவினை மேற்கோள் காட்டும் ரிஷி சுனக், செல்போனின் தொந்தரவினை ஒரு தேர்ந்த நாடக நடிகரின் தோரணையோடு விளக்கியதில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.