தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மாணவர்களிடையே சாதிச் சர்ச்சை-சந்துரு குழு சிபாரிசுகள் விபரம்!

09:31 AM Jun 19, 2024 IST | admin
Advertisement

திருநெல்வேலி டிஸ்ட்ரிக் நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் அந்த நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை அரசுக்கு தெரிய வந்தது.

Advertisement

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாகவும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் இக்குழு அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பல்வேறுத் தரப்பினரிடம் கருத்துகளை கேட்டது. மேலும் திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட மாணவரையும், பிறரையும் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தது. மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது. பல்வேறுத் தரவுகளை உள்ளடக்கிய தனது ஆய்வறிக்கையை மே மாதம் 31 ந் தேதி இறுதிச் செய்தது.

Advertisement

சாதி அடையாளங்கள்:இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் ஒய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, தனது 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று அளித்துள்ளார். அதில் முக்கியமாக 20 பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மூன்று பரிந்துரைகளை நீண்டகாலத்தில் நிறைவேற்றலாம் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். மாணவர்கள் எந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தார்கள் என்ற விவரத்தை பதிவேடுகளில் இருந்து நீக்குதல், பள்ளிகளில் மாணவர்களால் சாதியை குறிக்கும் வகையில் உள்ள வண்ண கயிறுக் கட்டுதல், மோதிரங்கள், நெற்றியில் போட்டு வைத்தல் , சைக்கிள்களில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல் போன்றவை முக்கியமான பரிந்துரைகளாக அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அறநெறி வகுப்புகளை நடத்துதல், சாரணர், சாரணியர் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதிய மாணவர் படையை நிறுவுதல், மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்துதல், பள்ளி பாடத்திட்டத்தை கண்காணித்தல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற பரிந்துரைகளையும் நீதிபதி கே.சந்துரு குழு தமிழக அரசுக்கு அளித்துள்ளது.

Tags :
CasteChandruCommitteeriotsstudentsசந்துருசாதிஜாதிபள்ளிமாணவர்
Advertisement
Next Article