தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பெரியார் புகழ் பாடிய டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாடமி விருதா?-ரஞ்சனி & காயத்ரியின் எதிர்ப்பும், சர்ச்சையும்!

02:16 PM Mar 21, 2024 IST | admin
Advertisement

எம்.எஸ் முதல் மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகில், பெரியபெரிய ஜாம்பவான்கள் பெற்றுள்ள மிகப்பெரிய விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் வழங்கும் சங்கீத கலாநிதி விருது. கர்நாடக இசை கச்சேரிகளில் கலந்து கொள்ளும் பாடகர்களின் கனவாக விளங்கும் இந்த சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசை பாடகர்களால் ஆஸ்காருக்கு சமமாக கருதப்படுகிறது. மியூசிக் அகாடமி சார்பாக வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது வருடந்தோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

அப்படி சென்னை மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் ’சங்கீத கலாநிதி’ விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இந்தாண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98 ஆவது ஆண்டு மாநாட்டை ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகியுள்ள டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவார்.

பாரம்பரிய கர்நாடக இசை மட்டுமின்றி கர்நாடக இசையின் தனித்துவத்தை மக்கள் மொழியில் பாடுவதில் டி எம் கிருஷ்ணா வல்லவராக திகழ்கிறார். குறிப்பாக கர்நாடக இசை ஆன்மீகத்திற்கும் ஒரு சில ஆராதனைகளுக்கும் இசைக்கப்படும் இசையாக இருக்கும் நிலையில் டிஎம் கிருஷ்ணா முதல்முறையாக கர்நாடக இசையை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கான இசையாகவும் மாற்றினார். உதாரணத்துக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய பாடலாக கர்நாடக இசை ராகத்தை பயன்படுத்தி சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக பாடினார்.

Advertisement

மேலும் அவர் எழுதிய செபாஸ்டியன் அண்ட் சன் என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்தார். அந்த சூழலில் திருவான்மையூர் கலா சித்ராவில் நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தரமணியில் இயங்கும் ஏசியன் பத்திரிகையாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.கோவிட் 19 தொற்று நோயால் வருமான இழப்பு ஏற்பட்ட இசைக் கலைஞர்கள் 919 பேருக்கு, டி எம் கிருஷ்ணா சிலருடன் இணைந்து ரூ.32 லட்ச ரூபாய் பணம் திரட்டிக்கொடுத்து உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி கர்நாடக இசை உலகில் பல நுணுக்கங்களும் பல முன்னெடுப்புகளும் மேற்கொண்டுள்ள டி எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து கர்நாடக இசை பாடகர்கள் இடையேவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில், டி.எம்.கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டதை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரி.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், 2024 ஆம் ஆண்டு டிஎம் கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, டி.எம்.கிருஷ்ணா ’கர்நாடக இசை உலகிற்கு பெரும் சேதத்தை’ ஏற்படுத்தியதாகவும், வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்து தள்ளுவதாகவும் ரஞ்சனி – காயத்ரி குற்றம் சாட்டி உள்ளனர்.

டி எம் கிருஷ்ணாவை பற்றி விமர்சித்து எழுதியுள்ள காயத்ரி ரஞ்சனி சகோதரிகள் தெரிவித்துள்ள விஷயங்கள் இதோ:

“டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் ஒரு கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றதும் ஆன்மீகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்துவதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ‘பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி எம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது. அற விழுமியங்களைப் புதைத்துவிட்டு மியூசிக் அகாடமியின் கச்சேரியில் கலந்து கொண்டால் நமது ஒழுக்க மீறலுக்கு ஆளாக நேரிடும்” என ரஞ்சனி காயத்ரியின் வலைபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய ஆளுமைகளை டி.எம்.கிருஷ்ணா அவமதித்ததாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், கர்நாடக இசைக்கலைஞராக இருப்பது அவமானகரமானது என்ற உணர்வைப் பரப்ப முயற்சித்ததாகவும் ரஞ்சனி காயத்ரி தங்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், ’பெரியார்’ போன்ற ஒரு நபரை அவர் புகழ்வது ஆபத்தானது என்று கூறிய அவர்கள், ஈ.வெ.ரா பிராமணர்களுக்கு எதிராக இனப்படுகொலையை வெளிப்படையாக முன்மொழிந்ததாகவும், இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் "இழிவான தகாத வார்த்தைகளால்" பலமுறை அழைத்து/துஷ்பிரயோகம் செய்ததாகவும், சமூக உரையாடலில் இழிவான மொழியை இயல்பாக்கியதாவும் விமர்சித்துள்ளனர்.

இறுதியாக, கலை மற்றும் கலைஞர்கள், வாக்கியக்காரர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், வேர்கள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பிற்குரிய அமைப்பை தாங்கள் நம்புவதாகவும், இந்த விழுமியங்களைப் புதைத்துவிட்டு மாநாட்டில் சேர்வது அவர்களுக்கு தார்மீக மீறலாகும் என்று தெரிவித்துள்ளனர்.

டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக உலக புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி காய்த்ரி போர்க்கொடி தூக்கியுள்ளது கர்நாடக இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து இவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய கடிதத்தில், “மார்ச் 20, 2024 அன்று உங்களது கடிதத்தைப் பெற்றேன், அதில் தேவையற்ற கூற்றுக்கள், அவதூறுகள் கருத்துக்களை மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிராக அதன் மோசமான தொனியுடன் நிரம்பி இருந்தது. அந்த அறிக்கை எனக்கு அதிர்ச்சி அளித்தது. 1942-ஆம் ஆண்டு தி மியூசிக் அகாடமியால் நிறுவப்பட்ட சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதியின் தேர்வு ஆண்டுதோறும் மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பாகும், மேலும் இது எப்போதும் கவனமாக ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படுகிறது. இசை துறையில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு டி.எம். கிருஷ்ணா தனது இசை வாழ்க்கையில், இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலான தேர்வாகும். வெளிப்புற காரணிகள் எதுவும் எங்கள் தேர்வை பாதிக்கவில்லை.

நீங்கள் விரும்பாத, தகுதியற்ற, மோசமான ரசனை கொண்டதாக நீங்கள் கருதும் ஒரு இசைக்கலைஞரை அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக வரவிருக்கும் சங்கீத அகாடமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் எனக்கும் அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள், இது ஒழுக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும். மேலும் உங்கள் கடிதத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது.பொதுவாக, நீங்கள் என்னிடமும், அகாடமியிடமும் தெரிவிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கான பதில் அளிப்பதை, நான் மறுக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
arnatic musicawardCarnatic singersevrkrishnaMusicAcademyperiyarRanjanigayathriSangeetakalanidhiTMKrishna
Advertisement
Next Article