For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

09:10 AM Dec 28, 2023 IST | admin
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
Advertisement

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக "மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது" என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

Advertisement

கிட்டத்தட 100 ஆண்டுகளைகளைக் கடந்த பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.குழந்தைப் பருவம் முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

Advertisement

தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். ந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.தொடர் முயற்சியால், பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.தொடர்ந்து . `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

1965-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, 1984-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார். பின், 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, ``ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன).

தனது 100-வது படத்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ எனவும், தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ எனவும் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார். அதே சமயம் `தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-ல் `தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ எனவும் பெயர் மாற்றம் செய்தார். 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துவந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்ததாகச் சொல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நடந்த திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் - விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதன் கண்கள் சிவக்க வெகுண்டெழுந்தார் நடிகர் விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்களிலெல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடிகாட்டத் தொடங்கினார் விஜயகாந்த். அந்தநேரத்தில் கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக விஜயகாந்தின் மண்டபம் கையகப்படுத்தவிருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து விஜயகாந்துக்கு நோட்டீஸ் பறந்தது. இந்தநிலையில், 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, ``தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது.

தனித்தே போட்டியிட்டுவந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயாகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

தனித்துப் போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, கூட்டணிக்குச் சென்ற பின்னர் 7.9%, 6.1% எனக் குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆகச் சரிந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர். போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவரின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி எனக் கலக்கியவர். குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து எனப் பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவிவந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் எனப் பாரபட்சமின்றி முதல் ஆளாக முன்வந்து நிவாரணங்கள் வழங்கினார். மேலும், பல்வேறு தமிழர் சார்ந்த உரிமைப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினார். இது போன்று எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்.

அதேவேளையில், சட்டமன்றத்தில் கடுமையாக நடந்துகொண்டது, வேட்பாளரை அடித்தது, மனைவி மைத்துனர் ஆதிக்கத்தில் கட்சியைவிட்டது ஆகியவை இவர்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள். இருப்பினும், தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே வலம்வந்த விஜயகாந்த் விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்டவை இருந்தது. இந்த நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனை கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியது. தைராய்டு பிரச்சினையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு அவ்வப்போது பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு செல்வார், உடனே ஓரிரு நாட்களில் வீடு திரும்பிடுவார். சிறுநீரக பிரச்சினை இருந்தது. அது நாளடைவில் சரியானது. அவருக்கு முதுகுதண்டு வடத்திலும் பிரச்சினை இருக்கிறது. தைராய்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்து வந்தது. அது போல் அரை மணி நேரம் கூட உட்கார முடியாமல் தவித்து வந்தார்.இதனால் அவரை கடந்த சில மாதங்களாகவே நண்பர்களோ உடன் நடித்தவர்களோ பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. தானாக சுவாசிக்க முடியவில்லை. தற்போதுள்ள மழை சீசனும் அவர் விரைந்து நலம் பெற தடையாக இருந்தது. இதை அடுத்து மியாட் மருத்துதுவமனை ஐசியூவில்தான் இருந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பினார். அடுத்த சில நாட்களில் பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேப்டன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு ஏதோ தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவர் நுரையீரல் அலர்ஜியும் ஏற்பட்டுவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் கட்சி கொடியானது அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement