For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கேப்டன் மில்லர் - விமர்சனம்!

08:53 PM Jan 12, 2024 IST | admin
கேப்டன் மில்லர்   விமர்சனம்
Advertisement

ஹாலிவுட் உள்ளிட்ட பிற மொழி படங்களில் இருந்து நல்ல சீன்களை காப்பி எடுத்து தமிழில் சினிமா எடுப்பதாக நம் டைரக்டர்கள் சிலரை இங்குள்ள சினிமா விமர்சகர்கள் வறுத்தெடுப்பதை நாம் அறிவோம். இதனை அப்பட்டமான ’காப்பி’ என்று என்று சொல்லி கிண்டல் அடித்தாலும் ‘அது இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்து விடுகின்றனர் நம் கால டைரக்டர்கள். ஆனால் அப்படியான வெளிநாட்டு படங்களில் உள்ள சீன்களை விட காட்சி அமைப்புகளும், ஒலி மற்றும் இசைக் கோர்வைக்குமான முக்கியத்துவம் கொடுப்பதில் யாரும் அக்கறைக் காட்டுவதில்லை . அக்குறையைப் போக்கி கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் குவாலிட்டியில் ஒரு படத்தை வழங்கி அசத்தி இருக்கிறார்கள் தனுஷ் & அருண் மாதேஸ்வரன் கூட்டணி! அதிலும் இந்த தலைமுறைக்கு தெரிந்த நெல்லை நாடார் வாழ்வியலையும், அப்போது ஆண்ட பிரிட்டிஸார் மற்றும் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி மிரட்டி இருக்கிறார்கள்..

Advertisement

அதாவது நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதையே இப் படத்தின் கதைக்களம்.தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனலீசன் (தனுஷ்). அந்த கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்... முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அந்தபடைவாசியாகி தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழலைக் உணர்ந்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்பிய இடத்தில், கொலைகாரன் என்ற அவச் சொல்லுடன் துரத்தியடிக்கப்படுகிறார். இதனால் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்துபவரை அரவணைக்க வந்த கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழ்த்தும் வீரதீர சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து தம் மக்களை மீட்டது எப்படி என்பதே கேப்டன் மில்லர் கதை.

Advertisement

அனலீசன் என்ற சாதாரண இளைஞராக இருந்து கேப்டன் மில்லர் என்ற போராளியாக உருவெடுக்கும் தனுஷூக்கென எழுதப்பட்டக் கதையின் ஆழத்தை மிகச் சரியாக புரிந்து உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் அவருடைய தோற்றம் மட்டுமின்றி ஒரு போராளியின் வாழ்க்கையையே கண்முன் நிறுத்துவதில் ஸ்கோர் செய்து விடுகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, உடல் மொழி மற்றும் அவருடைய கெட்டப் ஆகியற்றை காட்சிக்கு காட்சி ரசிகனை குதூகலிக்க வைத்து விடுவதென்னவோ நிஜம். அத்துடன் மூன்று வித்தியாசமான தோன்றினாலும் ஒவ்வொரு கேரக்டருக்கென தனி உடல்மொழி, தன் மக்களை கொல்ல நேரும் சூழலில் குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் புரூஸ்லீத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டுகிறார்

வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் அழுத்தமான போராளி வேடத்தில் நடித்திருக்கும் பிரியங்கா மோகன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.தனுஷுக்கும் சிவராஜ்குமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சிவராஜ்குமாரும், தனுஷும், சந்திப் கிஷனும் இணையும் இறுதிக் காட்சி திரையரங்கில் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் காதை பிளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ், நன்றாகவே எழுதப்பட்டுள்ளன. அடுத்த பாகத்துக்காக அதிதி பாலன். இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.

கேமராமேன் சித்தார்த்தா தனக்கே உரிய புதுப் புது கோணங்களாலும் நகர்வுகளாலும் ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகளில் தனி கவனம் பெறுகிறார். நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு தொடக்கக் காட்சிகளின் பிரத்யேக கதை சொல்லலுக்கும், இரண்டாம் பாதியின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் கைகொடுத்திருக்கிறது. சேஸிங் காட்சிகள், பிரமாண்ட போர் வடிவமைப்பில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவற்றில் கவனிக்க வைக்கிறார் திலீப் சுப்பராயன். பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஶ்ரீராமின் ஆடை வடிவமைப்பும், பாஸ்கரின் நடன இயக்கமும் கவனிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்தமாக மொத்தத் தொழிற்நுட்பக் குழுவும் ஒரு தேர்ந்த திரையனுபத்தைத் தந்திருக்கின்றன.

படத்தின் ஆக்சன் காட்சிகள் அத்தனை பிரம்மாண்டம் இடைவேளை காட்சியில் சேஸிங் கிளைமாக்ஸ் காட்சிகளின் பிரமாண்டமான ஆக்சன், இதுவரையிலும் தமிழ் திரை உலகம் பார்த்திராததது ! எப்படி இதை திரையில் கொண்டு வந்தார்கள் என்ற பிரமிப்பை தருகிறது. திலீப் சுப்பராயன் மாஸ்டருக்கு தனி பாராட்டுகளை கூறலாம்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் “கில்லர் கில்லர்...” உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் காட்சியின் ரிதத்தோடு ஒட்டிய இசை வழங்கி காட்சியை விட்டு பிரித்து கூட பார்க்க முடியாதவகையில் அதகளப்படுத்தி இருக்கிறார்..  அத்தனை அற்புதமான பின்னணி இசை.

கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என கேட்கும்போது, “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ போன்ற வசனங்களால் மதன் கார்க்கி மில்லரை ஒரு படி உயர்த்தி விட்டார்.

கடந்த படங்களில் கதையை விட ரத்தத்தை மட்டுமே நம்பி படமெடுத்து பேர் வாங்க முயன்ற டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இதிலும் எக்கச்சக்க வன்முறைக் காட்சிகளையும், விடாமல் தெறிக்கும் தோட்டாக்களுடன், அதே பாணியில் இந்த மில்லரை வழங்கி இருக்கிறார் என்றாலும் திரைக்கதையில் புது பாணியை கையாண்டு கைத்தட்ட வைத்து விட்டார் என்றே சொல்லலாம்..

மொத்தத்தில் இந்தக் கேப்டன் மில்லர் - ஹாலிவுட் தரத்தில் ஒரு நிஜமான தமிழ் படம்!

மார்க் 4/5

Tags :
Advertisement